Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.3

 வித்யனின் இரண்டாம் வயதில் ஒருநாள்..


வித்யன் தண்ணீர் தொட்டி ஒன்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று வீசிய காற்றால் கால் மடங்கி உள்ளே விழுந்தான். சயாவால் யோசிக்கவே முடியவில்லை. இந்த நிகழ்ச்சியை அவள் எழுதவும் இல்லை. ஒரு காப்பாள தேவதையாக அவனை அதிகம் நேசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவனுக்கு மனம் வாடினாலும் இவளுக்கு ஆன்மாவின் வேர் நோகும்.


"வினீ.." பதட்டத்தில் கத்தியபடி அங்கும் இங்குமாக சுற்றினாள். அருகே இருந்த சிறுமியின் உடலில் புகுந்து இவனை மேலே தூக்கி போட்டாள்.


வித்யன் பிழைத்து விட்டான்.


சயா தனது சக்தியை தவறாக பயன்படுத்தி விட்டதாக தனது ஏட்டில் எழுதிக் கொண்டாள் பூவிளந்தேவி. வித்யனை கால் சறுக்கி தண்ணீர் தொட்டியில் விழ வைத்தவளும் அவளே. அவன் தப்பித்ததும் சயாதான் விதியை மீறினாள் என்று கதை எழுதியவளும் அவளே. சயாவை விட அதிக சக்தியை கொண்டிருந்தாள் அவள்.


நீதி நேர்மை எதற்கு? யாரை விட யார் மேல்? இதுதான் மற்ற ஒருவரின் வாழ்க்கையையும் மாற்றி எழுதிக் கொண்டிருந்தது. 


சயாவின் விதி மீறல் தினமும் நடந்துக் கொண்டிருந்தது. அவளுக்கு வினீயின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தினம் தினம் கூடிக் கொண்டே போனது.


வித்யனின் எட்டாவது வயதில் அம்மை வந்தது. அரை உயிர் போயே விட்டது. அவனின் அம்மா வேப்பிலையையும் மஞ்சளையும் எவ்வளவோ அரைத்து பூசினாள். குளிர் பதார்த்தம் மட்டுமே தந்தாள். அப்படியிருந்தும் ஒரு அம்மை கூட குணமாகவில்லை.


காதலன் துளி துளியாக மரிப்பதை, அதுவும் கொடுமையாக இறப்பதை மன நிம்மதியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பூவிளந்தேவி. அவளை பொறுத்தவரை அது வெறும் விளையாட்டு. ஆனால் சில காலமே கனவு போலவே வாழ்ந்தாலும் கூட வித்யனுக்கு அது வாழ்க்கை. சுற்றியிருக்கும் பின்னல் வலைகளும், சிக்கல் தூண்டில்களும் தெரியாவிட்டாலும் கூட சயாவை பொறுத்தவரை இது பொறுப்பு. ஒரு மானிட குழந்தையை காப்பாற்றி, சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு இருந்தது அவளுக்கு.


பொறுத்து பார்த்து கடைசியில் வித்யனின் உடம்பிற்குள்ளேயே நுழைந்து விட்டாள் சயா. தன் சக்தியை கொண்டு அவனை சரி செய்தாள். அவனின் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. அந்த நேரத்தில் நடந்த எதுவும் அவனின் மூளையில் பதியவே இல்லை.


சயாவின் தவறு கூடியதாக எழுதிக் கொண்டாள் பூவிளந்தேவி.


வித்யனின் பதினைந்தாவது வயது படுமோசமாகதான் கடந்தது. அவனை சுற்றி இருந்த அனைவருமே காரணமே இல்லாமல் அவனை வெறுத்தனர். அவன் என்ன சொன்னாலும் அது தவறான வார்த்தைகளாக புரிந்துக் கொள்ளப்பட்டது. அவன் என்ன செய்தாலும் அது தவறான காரியமாகவே இருந்தது. அவனுக்கும் புரியவில்லை. சயாவுக்கும் புரியவில்லை. அவன் சரியாகதான் இருந்தான். பிறகு ஏன் இந்த குழப்பம் என்று கண்டறிய முடியவில்லை.


அம்மா திட்டி ஒதுக்கினாள். அப்பா அடித்து உதைத்தார். பள்ளியில் ஆசிரியர்கள் பிரம்பு உடையும் அளவுக்கு அடித்தார்கள். நண்பர்கள் அனைவரும் விரோதிகளாக மாறி போயினர்.


காரணமே இல்லாமல் சோகத்தை உணர்ந்தான். காரணமே இல்லாமல் அழுதான். தனிமையை தேடி தேடி விரும்பினான். தனிமையை கொண்டாடாமல் தன் வலியை தீர்க்க உதவும் கண்ணீரை சிந்துவதற்கு மட்டும் அந்த தனிமையை பயன்படுத்தினான்.


சயாதான் அதிகம் குழம்பி போனாள். காப்பாள தேவதை என்று அவளின் எண்ணத்தில் பதியப்பட்டது மட்டும்தான் அவளுக்கு தெரியும். ஆனால் தனக்கு பிரச்சனை என்றால் யாரை தேடி ஓட வேண்டும் என்றோ, யாரிடம் சென்று உதவி கேட்க வேண்டும் என்றோ அவளுக்கு தெரியாது.


அந்த சின்ன பூமியில் சுற்றி சுற்றி வந்தாள் அந்த அப்பாவி பேதை. அந்த குழந்தை வித்யனின் முகத்தில் புன்னகையை கொண்டு வர முயற்சி செய்துக் கொண்டே இருந்தாள்.


அவன் நடக்கும் பாதையில் பூக்களை பூக்க வைத்தாள். ஆனால் பூவிளந்தேவியோ அவனின் பாதையையே மாற்றி நடக்க வைத்தாள்.


தன்னிடம் தரப்பட்ட வாழ்க்கை ஏட்டின் மீது சந்தேகம் வரவில்லை சயாவுக்கு. அது வித்யனின் விதி. நாம் அதை மாற்றி கட்டமைக்க வேண்டும் என்றே நினைத்தாள்.


வித்யன் வாழ்க்கையை வெறுத்துப் போனான். அடிக்கடி அழுதான். அடிக்கடி தற்கொலையை தேடினான். அந்த நேரத்திலெல்லாம் அவனை திருப்பி மடை மாற்ற படாத பாடுப்பட்டாள் சயா.


அவனின் எண்ணங்களை கட்டுப்படுத்தும் சக்தியை பெற்றிருந்தாள் அவள். ஆனால் அவனின் இதயத்தில் புகுந்து குறுக்கு சால் ஓட்டும் அளவிற்கு திறமையை கொண்டிருந்தாள் பூவிளந்தேவி.


வித்யன் பைத்தியக்காரனை போல வாழ்ந்தான். அவனின் மனம் நிமிடத்திற்கு ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. தன் ஆன்ம காதலியாலேயே பழி வாங்கப்படுகிறோம் என்ற விசயம் தெரியாமல் நரக வாழ்க்கையை பூமியிலேயே வாழ்ந்துக் கொண்டிருந்தான். 


வித்யனின் இருபத்தி மூன்றாம் வயது அது.


ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்தான். அவனின் காதலை அவனின் காதலி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எழுதி வைத்தாள் சயா. ஆனால் அவளின் ஆன்மாவிற்கு மயக்கத்தை தந்து விட்டாள் பூவிளந்தேவி.


வித்யன் பூவும் காதல் கடிதமுமாக காதலியிடம் சென்றான்.


"டேய் காதலா.. உன் நிஜ காதலி நான். உன் நிஜ வாழ்க்கை நான். ஆனா இங்கே வெறும் நூறு வருசம் வாழ வந்த இடத்துல எவளோ ஒருத்தியை விழுந்து விழுந்து காதலிக்கிறியே.. எப்படி என்னால ஏத்துக்க முடியும்? நீ எனக்கானவன் வினீ.. உன் தோழியையே ஏத்துக்காத ஆள் நான். உன் டெம்ரவரி காதலியை மட்டும் ஏத்துக்குவேனா.?" எனக் கேட்டவள் அவனின் காதலியின் உடம்பிற்கு புகுந்தாள்.


"ஸ்ரேயா.. நான் உன்னை காதலிக்கிறேன்.. நீயும் என்னை காதலிக்கிறியா.?" நம்பிக்கையாக கேட்டவனை கேவலமாக பார்த்த அவள் "உன் தகுதி என்ன தராதரம் என்ன.? உனக்கு எதுக்கு என் மேல லவ்வு.? ரோட்டுல போற நாயையெல்லாம் காதலிக்கும் அளவுக்கா நான் இருக்கேன்.?" என்றுக் கேட்டாள்.


வித்யன் கண்கள் கலங்க அவளைப் பார்த்தான்.


"இத்தனை நாள் நீ காட்டிய கண் சைகைகள் பொய்யா.? உன் சிரிப்பு பொய்.? நான் மத்த பெண்களோடு சிரிச்சி பேசுகையில் உன் முகம் காட்டிய முறைப்பு பொய்யா.?" இதயம் விம்ம கேட்டான்.


"ஆமா.. எல்லாமே பொய்தான். மனுசனென்றால் பார்க்கதான் செய்வான். பார்ப்பதை கூட தப்புன்னு சொல்வியா நீ.? நீ உண்மையிலேயே மனுசன்தானா இல்ல வேறு ஏதாவது ஜந்தா.?" எனக் கேட்டு விட்டு அவனை தாண்டிப் போனாள்.


வித்யனால் தாங்க முடியவில்லை இந்த இழப்பை. அவசரமாக அருகே இருந்த படிகளில் ஏறினான்‌. மொட்டை மாடியின் கைப்பிடி சுவர் மேல் ஏறி நின்றவன் சுற்றி முற்றி பார்க்கவில்லை. அடுத்த நொடியை யோசிக்கவில்லை. முடிந்த நொடியை யோசிக்கவில்லை. எழுத்தாளர் செவ்வந்தி துரையின் கதையின் தொடரில் அடுத்த எபிசோட்டில் என்ன நடக்குமென்று நினைத்து பார்க்கவில்லை. அம்மாவின் அடுத்த வேளை உணவு, ஹோம் வொர்க் முடித்து விட்ட இன்றைக்கான பாடங்கள், அவன் நட்டு வைத்த செடி பூ பூக்க இருந்தது பற்றியோ, அவனிடம் கணக்கு பாடம் கற்றுக் கொண்டு தவறாய் கணக்கை போட்டு பள்ளி ஆசிரியரிடம் அடி வாங்கிய பக்கத்து வீட்டு சிறுவனை பற்றியோ, தலையில் வளர்ந்து விட்ட தலைமுடியை வெட்ட வேண்டும் என்ற கவலையோ இல்லாமல் டொப்பொன்று கீழே குதித்து விட்டான்.


அடுத்து என்ன நடந்துச்சின்னு முன்னாடியே சொல்லிட்டேன். இவன் மருத்துவமனையில் இருப்பதும் சயா காப்பாற்ற முயற்சித்து மருத்துவரின் உடலில் நுழைந்து காப்பாற்றி விடுவதுமாக ஏற்கனவே படித்து விட்டோம். அதனால இப்ப அடுத்த காட்சிக்கு சென்று விடலாம்.


வித்யன் கட்டுப்போடப்பட்டு வீட்டிற்கு வந்தான். அவனின் காயங்களை கண்ட பிறகு அவனின் வீட்டில் வேறு மாதிரியான அக்கறை காட்டப்பட்டது. வெறுப்பு எல்லாம் அன்பாக மாறிப் போனது. அவனின் காதலியும் கூட இவனை பார்க்க ஓடி வந்தாள்.


"எனக்காகதான் சாக போனியா.?" என்று கட்டுப் போட்டிருந்தவனை அணைத்தாள்.


உடையாத கையால் அவளை தூர தள்ளி நிறுத்தினான்.


"நான் நாய்க்குட்டி இல்ல, அடிப்பட்ட நேரத்துல அன்பை காட்டிட்டு போக. மனுசன். எக்கச்சக்கமா எனக்கு ரோசம் உண்டு.." என்றவன் "உன்னை காதலிச்சது தப்புதான். அதை தெளிவா புரிஞ்சிக்கிட்டேன்.. இனி உன் பின்னாடி வர மாட்டேன்.." என்றான்.


"நான் உன் காதலை ஏத்துக்கலன்னு நீ இப்படியெல்லாம் பேசுற.." அழாத குறையாக சொன்னாள் அவள்.


"எந்த எழவும் இல்ல.. உன்னை போல ஒருத்தியை... தப்பு தப்பு இந்த பூமியில் இருந்த மனுசங்களை காதலிப்பது போலவோ,‌ அன்பை காட்டுவது போலவே பெரிய பாவம் இருக்காது.." என்றவனை நக்கலாக பார்த்தாள் தூரத்திலிருந்து அவனை கவனித்துக் கொண்டிருந்த பூவிளந்தேவி.


ஆனால் ஒரு விதி எப்போதுமே மாறாத ஒன்றுதான். மரணத்தை தொட்டு வந்தாலோ, மரணத்திலிருந்து மீண்டு வந்தாலோ வாழ்வின் மீதான கண்ணோட்டம் மாறி விடுகிறது என்பதே அது.


வித்யனும் அப்படிதான் இருந்தான்.


காதலியை திருப்பி அனுப்பி வைத்தவனுக்கு அதன் பிறகான நாட்கள் நன்றாகவே சென்றது எனலாம்.


'அதுதான் காதலியே வேணாம்ன்னு சொல்லிட்டியே.. பொழைச்சி போ..' என்று‌ சொல்லி விட்டாள் பூவிளந்தேவி.


இதுக்குதான் சொல்றது, பைத்தியங்களை காதலிக்க கூடாதுன்னு! சொன்னா யார் கேட்கறா?


வித்யனுக்கு அதன் பிறகும் கூட கஷ்டங்கள் வந்தன. ஆனால் அவனின் கண்ணோட்டம்தான் மாறி விட்டது.


வாழ்க்கை எப்போதுமே இன்ப துன்பம் கலந்தேதான் செல்கிறது. ஆனால் இன்பத்திலும் துன்பத்தை நினைத்து, துன்பத்திலும் இன்பத்தை உணர்ந்து வாழும் இரு வேறு வகை மானிடர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.


இதற்கு முன் இன்பத்திலும் கூட துன்பத்தை மட்டுமே நினைத்து வாழ்ந்துக் கொண்டிருந்த வித்யன் அதன் பிறகு வந்த நாட்களில் துன்பம் வந்த வேளைகளில் கூட அந்த செயலால் கிடைக்கும் ஒரு சதவீத லாபம் பற்றி நினைத்து மகிழ ஆரம்பித்து விட்டான்.


ஒருநாள் தந்தை இறந்து போனார். மனம் உடைந்துப் போனது. ஆனால் அவன் தன் மனதை மகிழ்வாக மாற்றி வைத்திருந்தான். தன் மேல் சாட்டப்பட்டும் பல லட்ச ரூபாய் கடனை மறந்து, அவரின் இறப்பால் தனக்கு கிடைக்கப்போகும் அவரின் புது செருப்பை நினைத்து மகிழ்ச்சிக் கொண்டான். (பைத்தியங்களால் நிரப்பப்பட்ட கதை)


ஒரு நாள் வந்தது. அந்த நாள் வித்யன் இறந்தான். ஆன்ம நினைவுகளுக்கு வந்து விட்டவன் தூரத்திலிருந்த பூவிளந்தேவியை கண்டுவிட்டு ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான். பெண்ணாய் ரூபம் எடுத்திருந்தவளின் இதழில் அழுத்தமாக முத்தம் தந்தான்.


"நான் உன்னை மிஸ் பண்ணேன்.." என்றான்.


"நானும்.." என்றவள் அவனிடமிருந்து‌ விலகினாள்.

தோழியை கண்டதும் தன்னை விட்டுவிட்டு ஓடி விடுவான் என்று அவளுக்கு தெரியும். அவனாய் விட்டுப் போகும் முன் தானே விலகி விடுவது நல்லதென்று தோன்றியது அவனுக்கு.


அவள் நினைத்தது போலவேதான் சயாவை கண்டதும் பறந்தோடினான் வினீ.


"ஓ மை காட் சயா.. உன்னை நான் எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா.? என் உயிர் தோழி.. அன்பே ஆருயிரே.. தங்கமே வைரமே‌‌.. தூறல் மழையே.. தூக்கணாங்குருவியே.." என்று அவளை அணைத்துக் கொண்டான்.


பாவம் அவளே தான் யார் என்ற உண்மை கூட மறந்து அவனின் காப்பாளினி தேவதையாக நின்றிருந்தாள்.


"வினீ.." என்று குழம்பி அழைத்தவளின் பார்வை கண்டு விசயம் புரிந்துக் கொண்டவன் நெற்றியில் அடித்தபடி விரலை சொடுக்கிட்டான். மொத்த நினைவும் வந்தது அவளுக்கு.


"நண்பா.." என்று அணைத்தாள்.


நட்பில் மூழ்கி ஆழம் தெரியாமல் தன் ஆன்ம ஜோடிகளையும் மூழ்கடித்துக் கொண்டிருந்த இருவருக்கும் அடுத்து இருந்த ஆப்பு என்னவென்று தெரியவில்லை.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..



Post a Comment

0 Comments