Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.4

 வினீயின் முன்னால் வந்து நின்றார் வாழ்வேட்டின் பாதுகாவலர்.


"நீங்க சொன்னது போலவே அவனை சாக விடாம செஞ்சிட்டேன். எங்க தண்டனையை ரத்து பண்றிங்களா.?" எனக் கேட்டாள் சயா துள்ளலோடு.


எதிரே இருந்தவன் நக்கல் சிரிப்பு சிரித்தான். 


"அவன் சாகல. ஆனா அவன் சாக நினைச்சானே. அவன் தற்கொலை முயற்சி செஞ்ச ஒவ்வொரு முறைக்குமான தண்டனை உனக்கு சேர போகுது.." என்றான் அவன்.


அதிர்ச்சியோடு‌ நண்பனை திரும்பிப் பார்த்த சயா "ஏன்டா பக்கி, எதுக்குடா சாக நினைச்ச.?" என்று அவனின் தலையில் ஓர் அறையை விட்டாள்.


"வாழ்க்கை கஷ்டமா இருந்தது.." என்றவனை கொடூரமாக முறைத்தவள் ஓங்கி ஒரு உதையை விட்டாள். விழுந்து எழுந்து வந்தான்.


"வாழ போறது வெறும் நூறு வருசம். அடுத்த செகண்ட் என்ன நடக்கும், எப்படி வாழ்க்கை யூ டர்ன் போடும்ன்னு தெரியாது. அதுவும் இல்லாம சாகற சனியன்தானே நீ? அப்புறம் ஏன்டா அவ்வளவு ஆசைப்பட்ட.?" என்றாள் மீண்டும் அடித்தபடி.


"ஆன்மாவையையும் சேர்த்து கொன்னுடுவா போல.." பயந்தபடி நகர்ந்து நின்றான் நண்பன்.


"உன்னாலதானே இப்ப பிரச்சனை.?" 


"அதுக்குன்னு என்ன செய்ய முடியும்.? ஏதோ ஒரு சோகம், ஏதோ ஒரு கோபம். தப்பான முடிவு எடுக்க வச்சிடுச்சி வாழ்க்கை.." தன் பக்கத்து நியாயத்தை சொன்னான் வினீ.


"அதுதான் கேட்கிறேன். என்ன சோகம்? என்ன கோபம். அதுவே ஒரு நிலையில்லாத வாழ்க்கை. அதுவே ஒரு அரைகுறை வாழ்க்கை.." என்றவளை கோபமாக முறைத்தவன் "மனுசியா இருக்கும்போது நீ இதே மாதிரி எத்தனை கிறுக்குத்தனம் செஞ்சன்னு நான் சொல்லட்டா.? இதுவரைக்கும் நீ எடுத்த ஜென்மங்கள் எத்தனை.? அதுல நீ செஞ்ச தற்கொலை முயற்சிகள் எத்தனைன்னு நான் சொல்லட்டா.?" என கேட்டான்.


அவர்கள் தங்களது சண்டையை ஓயாமல் போட்டுக் கொள்வதை பார்த்த அதிகாரி "இதோ நிப்பாட்டுங்க.. நீங்க சண்டை போட்டுக்க இங்கே ஒன்னும் நாங்க சண்டை மைதானம் கட்டி விடல.. நீ தற்கொலை முயற்சிகள் செஞ்சது தப்பு. அதனால நீ ஏற்கனவே வாழ்ந்த அதே வாழ்க்கையை இன்னொரு முறை வாழ்ந்துட்டு வா.." என்று சொன்னார்.


அதிர்ச்சியில் ஆன்மாவின் கண்கள் தெரித்தது வினீக்கு.


"என்னது மறுபடியுமா.?"


"ஆமா.."


"ஆனா‌ வழக்கமா தற்கொலை 

செஞ்சி செத்துப் போனாதானே இந்த தண்டனை தருவாங்க.." குழப்பத்தோடு கேட்டான்.


"அது மத்தவங்களுக்கு.. உங்களைப் போல திமிர் பிடிச்ச ஆன்மாக்களுக்கு தற்கொலை முயற்சி செஞ்சாவே அதே வாழ்க்கையை திருப்பி வாழும்படி தண்டனையை கொடுத்துட்டுதான் இருக்கோம் ரொம்ப வருஷமா.."


வினிக்கு தலை சுழன்றது. மறுபடியும் அதே வாழ்க்கை வாழ்வது கடினம் அல்ல. ஆனால் அதே வாழ்க்கையை வாழ்வது சலித்தது. ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப செய்யும்பொழுது சலிப்பு என்பது தானாக ஏற்பட்டு விடுகிறது. 


அவன் மீண்டும் பூமியில் பிறந்தால் அவனுக்கு ஆன்ம நினைவு இருக்காதுதான். ஆனால் அவனின் உள்ளுணர்வின் மூலம் இதே வாழ்க்கையை அவன் ஏற்கனவே வாழ்ந்து விட்ட சலிப்பு வாழ்க்கை முழுவதும் நீடித்துக் கொண்டே இருக்கும்.


சுவாரசியம் இல்லாத எந்த விஷயத்தையும் தொடர முடியாது. ஏற்கனவே வாழ்ந்த அதே வாழ்க்கை, அதே உணர்வுகள், அதே கோபம், அதே சந்தோசம், அதே உறவுகள்.. யாருக்குதான் பிடிக்கும்.? இதில் எங்குதான் சுவாரசியம் காண முடியும்.?


மீண்டும் வித்யனாக பிறந்தான் வினீ. மீண்டும் அதே வாழ்க்கை. அதே போல மரணங்கள் துரத்தியது. அவனது ஒவ்வொரு நாட்களையும் சிரமப்பட்டு நகர வைத்துக் கொண்டிருந்தாள் சயா.‌‌ அவளுக்கும் பழைய விசயங்கள் எதுவும் நினைவில் இல்லை. அதே காப்பாளர் தேவதை. இரண்டாம் முறை வாழ்ந்த வாழ்க்கை என்பதால் அவ்வளவா சலிப்பும் தெரியவில்லை. அதே போலதான் தற்கொலைகளுக்கு முயன்றான். 


மீண்டும் இறந்தான். மீண்டும் பிறக்க செய்யப்பட்டான். தவறு. அதே வாழ்க்கை. அதே காலகட்டம். சந்திர சூரியனின் வயதும் அதே. இவன் மட்டும் அதே வாழ்வை திரும்ப திரும்ப வாழ்ந்துக் கொண்டிருந்தான். ‌


அவனது மொத்த வாழ்க்கையையும் இதே போல திருப்பி திருப்பி எழுத எனக்கு ஆசைதான். ஆனா படிக்கற நீங்க கடுப்பாகிடுவிங்க. அதனால இதை மட்டும் கணக்குல வச்சிக்கங்க.. அவன் அதே போல நாற்பத்தியெட்டு முறை பிறந்தான். தற்கொலைக்கான அவனின் ஒற்றை முயற்சி கூட அவனை ஜெயிக்க விடாமல் அதே வாழ்க்கையின் வட்டத்திற்குள் இழுத்து விட்டது. அவனும் திரும்ப திரும்ப பிறக்க நாமும் திரும்ப திரும்ப‌ கூட செல்ல, கடைசியில் ஒரு முறை வாழ்ந்தபோது அதீத‌ சலிப்பில் வாழ்வின் மீது கொஞ்சமும் பற்றே இல்லாமல்‌ வாழ ஆரம்பித்தான் வித்யன். 


வாழ்வில் பற்றில்லாமல் போனதால் எதன் மீதும் ஆசை இல்லை. தோல்வியை கண்டு பயமில்லை. வெற்றியை கண்டு பயம் இல்லை. வாழ்க்கையை அவன் ருசிக்கவே இல்லை. வாழ்வின் இன்ப துன்பங்களை ரசிக்கவேயில்லை.


எந்த தற்கொலையும் செய்யாமல் ஒருநாள் மூப்படைந்து இறந்தான். 


வினீயும் சயாவும் ஆன்ம நினைவுகளுக்கு வந்து சேர்ந்தனர். 


"இந்த வாழ்க்கையை கடக்க வாய்ப்பு கிடைச்சிடுச்சி உங்களுக்கு.." என்றார் அதிகாரி.


"யப்பா சாமி. நல்லாருடா மகராசா.." என்று கும்பிட்டாள் சயா.


நண்பன் புறம் திரும்பியவள் "நல்லா வாழ்ந்தடா வாழ்க்கை‌.. ஒத்த தற்கொலையால ஒருநூறு முறை நீயும் வட்டம் சுத்தி என்னையும் ரூல் பண்ண வச்சிட்ட.." அவளுக்கே சலித்து விட்டது.


"இப்ப வருவான் பாரு என் லவ்வரு, எனக்கு உன் தேவை இருக்கு. வா ஒரு ஜென்மத்துக்கு மட்டும் மனிதரா பிறந்து லவ்வு செய்யலாம்ன்னு கூப்பிடுவான் பாரு.." கடுப்போடு சொன்ன சயாவை வித்தியாசமாக பார்த்தார் எதிரே இருந்த அதிகாரி.


"ஏய் பொண்ணே!  நீ இவன் வாழ்க்கையை இத்தோடு நாற்பத்தியொன்பது முறை ரூல் பண்ணியிருக்க.." என்றான்.


நெஞ்சின் மீது கை வைத்தாள் சயா.


"ஐயோ.. அப்படின்னா எனது நாதன் என்னை விட்டுட்டு வேற எவளையாவது பிடிச்சிட்டாரா.?" அதிர்ச்சி தாங்காமல் கேட்டாள்.


எதிரில் இருந்தவர் சலிப்போடு பெருமூச்சை வாய் வழியே விட்டார்.


"அம்மணி. நான் சொல்றதை கொஞ்சம் கேளு கண்ணு. நீயும் அவரும் நாற்பத்தி ஒன்பது முறை பிரிஞ்சிருந்தும் அவர் ஏன் உன்னை தேடலன்னா நீ கடந்தது வெறும் ஒரு வாழ்க்கைதான். நாற்பத்தி ஒன்பது முறையும் ஒரே வாழ்க்கை. இதுக்கு நான் நாற்பத்தி ஒன்பது லைப்ன்னு எழுதி தருவேனோ.? யூ பாஸ்ட் ஜஸ்ட் ஒன் லைஃப்.." 


"இங்கிலிபீஸூ அள்ளுது.." என்றவள் நண்பனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து போனாள்.


ஆன்மாக்கள் வாழ ஓராயிரம் உலகங்கள் இருந்தன பிரபஞ்சத்தில். அதில் பூவிளந்தேவி மட்டும் தனக்கென தனி ஒரு தீவு உலகை வைத்திருந்தாள். கலை என்னதான் சக்தி வாய்ந்த ஆன்மாவாக இருந்தாலும் கூட மற்ற ஆன்மாக்களோடு சேர்ந்து வாழவே விரும்பினான்.


சயா கலையை தேடிப் போனாள். ஜி.எட் சிக்ஸ்டின் என்ற கிரகத்தில் அமர்ந்து தன் தோழர் தோழிகளோடு பேசிக் கொண்டிருந்தான் கலை. ஆன்ம ஜோடியின் வாசத்தில் எழுந்து வந்தான்.


"இவ்வளவு தூரம் வந்திருக்க.." என்றவனை அணைத்துக் கொண்டாள்.


"ஐ மிஸ் யூ என் மன்னா.." 


அவளை தூர தள்ளி நிறுத்தினான்.


"ஏதாவது தேவையா.?" என்றவனை முறைத்தவள் "நீ என்னை மிஸ்ஸே பண்ணலையா பேயே.?" எனக் கேட்டு அடித்தாள்.


அவளின் கையை பிடித்து தடுத்தவன் "நிஜமா மிஸ் பண்றியா? நீயா? ஆனா வெறும் ஒரு ஜென்மம்தானே கடந்தது.." என்றவனை கட்டிப்பிடித்து கதறோ கதறோவென்று கதறியவள் "ஒரு ஜென்மமா.? நாசமா போனவனுங்க ஒரே லைப்பை நாற்பத்தி ஒன்பது முறை வாழ வச்சிட்டாங்க‌. ஒரே வேலையை நாற்பத்தி ஒன்பது டைம் செஞ்சேன் என் அரசா.. உன் மேல எனக்கெல்லாம் சாதா ஆசை வந்தாலே அது அதிசயம்ன்னு உனக்கே தெரியும். ஆனா இந்த முறை ஆசை இல்லை. வெறியே பிடிச்சிடுச்சி.." என்றாள்.


கலைக்கு உள்ளுக்குள் நூறு கிரகத்து ஐஸ் மலையை கொண்டு வந்து கொட்டி வைத்தது போல ஜில்லென்று இருந்தது. 'இப்படி ஒரு வழி இருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா இதை எப்பவோ செஞ்சிருப்பேனே.! நேர்மையா யோசிச்சா இப்படிதான் வழிமுறையே கிடைக்காது போல..' என்று யோசித்தான்.


சயா அவனை அவளின்‌ வழியில் கண்டமாக்கிவிட்டு விட்டு போனாள். 


"பிரபஞ்சத்துல மில்லியனோ மில்லியன் ஆன்மாக்கள் இருக்கும்போது இந்த பேய் எனக்கு ஜோடியா பிறந்ததே.! என்ன செய்ய எல்லாம் என் விதி.. கொஞ்சலால கூட ஆன்மாவுக்கு வலிக்கும்ன்னு இன்னைக்கேதான் தெரியுது. நாற்பத்தியெட்டு ஜென்மமா இருந்த‌ மொத்த காதல் பசியையும் தீர்த்துட்டு போயிட்டா. நான் இன்னும் நாலஞ்சி வருசத்துக்கு ரெஸ்ட் எடுக்கணும் போலயே.." புலம்பியபடியே சென்று‌ தியானத்தில் அமர்ந்தான். அப்போதுதான் அவனுக்கு ஒரு சிந்தனை‌‌ வந்தது.


"சமம் என்பது கிடையாது. ஆனா இவங்களுக்கு இவங்க இருந்தா சமாளிக்க முடியும்ன்னு ஒரு விதி இருக்கும். அப்படிதான் போல. பாதி நேரம் கண்டுக்க மாட்டேங்கிறா.. சில நேரங்களில் மட்டும் காதலால் கொன்றுப் போகிறாள். இவளை என்னை தவிர எவனாலும் சமாளிக்க முடியாது. இதான் உண்மை.." தன்னை நினைத்தே அவனுக்கு பெருமையாக இருந்தது.


ஆக.. மேட்டர் என்னன்னா இந்த பேயை அந்த பிசாசை தவிர வேறு யாராலும் சமாளிக்க முடியாது.  அந்த பிசாசையும் இந்த‌ பேயை தவிர வேறு யாராலும் சமாளிக்க முடியாது. இதுக்கு பேர்தான் ஆன்ம ஜோடி. இப்படி நான் சொல்லல. பிரபஞ்ச வெளியில் ஏதோ ஒரு ஜீவராசி சொல்லிட்டு கடந்து போனது.


பூவிளந்தேவியின் மடியில் படுத்தபடி அவளின் முகத்தைக் கொஞ்சிக்‌ கொண்டிருந்தான் வினீ. அவன் காட்டிய அன்பில் உருகி கொண்டிருந்தாள் அவள். இவ்வளவு காதலை காட்டுபவன் தோழியென்ற குரங்கை மட்டும் கழட்டி விட்டுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.


இவர்கள் செய்த அலும்பலால் வேறு எந்த ஆன்ம நட்புக்களை கண்டாலும்‌‌ கூட வெறுத்தாள் பூவிளந்தேவி.


மடியில் இருந்தவனை கொஞ்சி குலாவி மகிழ்ந்துக் கொண்டிருந்தவள் "லாலலாலாலலலா.." என்ற குரலை கேட்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள்.


"ஐ சயா வந்துட்டா.." எழுந்த வினீ துள்ளிக் கொண்டு ஓடினான். 


பூவிளந்தேவியின் அந்த சிறு தீவு கிரகத்தை கட்டியணைத்து அவர்களின் நட்பின் வாசத்தால் நிறைத்து, பூவிளந்தேவியின் அடிவயிற்றில் ஒரு எரிமலையையே உருவாக்கிவிட்டு அங்கிருந்து போனார்கள் இருவரும்.


"கொஞ்ச நேரம் விட்டு இருக்க முடியல.." என்று புலம்பினாள் சயா.


"எனக்கும்.." என்றவனை பார்த்து கண்களை சிமிட்டியவள் "புதுசா ஒரு‌ கதை எழுதிட்டு வந்திருக்கேன்.." என்றாள் புது வாழ்க்கை ஏட்டை காட்டி. 


"ஐ சூப்பரு.." பிடுங்கினான். ஆனால் அவன் படிக்க முயலும் முன் ஏட்டை பிடுங்கிக் கொண்டவள் "நீ முதல்ல கையெழுத்தை போடு. அப்புறம் நான் நம்மோட ரோல் என்னன்னு சொல்றேன்.." என்றாள்.


"அட என் கிறுக்கு கண்மணி.." என்றபடியே அவள் காட்டிய ஏட்டின் கடைசியில் தன் கையெழுத்தை பதித்தான்.


"சுவாரசியம் இருக்குமா.? போன முறை செம போர்.." சலித்தவனின் தோளில்‌‌ தட்டியவள் "அதனாலதான் இந்த முறை சலிக்காத ஒரு வாழ்க்கையை எழுதிட்டு வந்தேன்.." என்றாள்.


"அப்படி என்ன லைஃப்.?" என்று‌ பிரித்து படித்தவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் மட்டும்தான் வெளியே தெறித்து விழவில்லை.


"என்னடி புள்ளை இது.?"


"நீ பெண் ரூபம் எடுத்து விபசாரம் செய்ய போற.. நான் பேயா உன்னோடு இருக்க போறேன்.."


தலை சுத்தி கீழே விழுந்து விட்டான் வினீ. ஆனால் சயா எங்கே பாவம் பார்த்தாள்? அவன் மறுபடியும் கண் விழிக்கும் முன்பே வாழ்வியல் விளையாட்டை கண்காணிக்கும் அதிகாரிகளிடம் ஏட்டை தந்து விட்டு அவனையும் ஒப்படைத்து விட்டாள். வினீ எனும் அந்த அப்பாவி ஜீவன் மீண்டும் கண் விழித்தபோது தொட்டிலின் மேலிருந்த கிலுகிலுப்பை‌யைதான் பார்த்தது. ஆனால் எதுவுமே நினைவில் இல்லாமல் மனித பெண் குழந்தையாக இருந்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. எபி எப்படி.😁





Post a Comment

0 Comments