Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.5

 வினிதா ஏழை குடும்பத்தில் ஏழாவது‌ குழந்தை. நான்காவது மகள். அப்பாவும் அம்மாவும் அதிகம் காதலித்தது தவறு இல்லைதான். ஆனால் வினிதாவை‌ போல ஒரு பெண்ணுக்கு தேவையான அத்தனையையும் தராமல் போனதுதான்‌ தவறாக போனது.


படிக்கும்போது உடன் படிக்கும் பிள்ளைகளின் செல்வ செழிப்பு கண்டு தனக்குள் ஏங்குவாள். அவளுக்கு பணம் தேவைப்பட்டது. அதை தரதான் பெற்றோரால் முடியவில்லை.


அத்தோடு சேர்ந்து அவளின் கடைசி தம்பிக்கு உடல் நல குறைவு. அவனுக்கான மருத்துவ செலவு செய்ய முடியாமல் கை விட்டு விட்டனர் பெற்றோர். இவளால் விட முடியவில்லை. பெரியவளாகி விட்டிருந்தாள் அப்போது. அதனால் அவளே சம்பாதித்து தம்பியை காப்பாற்றி விட முடிவெடுத்தாள்.


உழைப்பின் பின்னால் ஓடினாள். பணம் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. மனமே இல்லாமல்தான் இந்த தொழிலில் இறங்கினாள். உண்மையிலேயே அவளுக்கு இது கடினமாக இருந்தது. அவளுக்கு உடலுறவில் விருப்பமே இல்லை. ஆண்களின் தீண்டலில் அருவெறுப்பை உணர்ந்தாள். அதை முகத்தில் காட்டாமல் இருக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.


ஒருநாள் அவள் ஒரு வாரத்திற்கு தேவை என்று சொல்லி அவளை காட்டு பங்களாவுக்கு அழைத்துச் சென்றான் ஒருவன். 


விளக்கு கூட இல்லாத அந்த காட்டு பங்களாவில் பாம்பு,‌ தேள் வருமோ, காட்டு விலங்குகள் வருமோ என்று பயந்தபடியே நேரத்தை நடத்தினாள் வினிதா.


மூன்றாம் நாளில் நடு மதியத்தில் அவன் மூக்கு முட்ட குடித்துவிட்டு மட்டையாகி விட,‌ இவள் அந்த பங்களாவை சுற்றிப் பார்க்க கிளம்பினாள். மாடியறையில் இருந்த பெண் சிலை ஒன்றை தெரியாமல் தொட்டு விட்டாள். அந்த சிலை சுக்கல் நூறாக உடைந்து விழுந்தது. அதற்குள் இருந்து ஆண் ஒருவன் வெளியே வந்தான்.


பயந்து மயங்கி விழுந்தாள் வினிதா. அவள் மறுபடி கண் விழித்தபோது அந்த ஆணின் மடியில் இருந்தாள்.


"யா.. யார் நீங்க.?" என்றவளை வருத்தமாக பார்த்தவன் "நான் ஒரு பேய்.." என்றான். 


மறுபடியும் மயங்கி விட்டாள். மறுபடியும் எழுந்தாள். 


"மறுபடியும் மயக்கம் போடாதே. எனக்கு சலிக்குது.." என்று அவள் எழுந்த நொடியிலேயே சொல்லி‌ விட்டான்.


"யார் நீ.?"


"நான் ஒரு அப்பாவி பேய்ம்மா.." என்றவனை அதிர்ச்சி தீராமல் வெறித்தாள். அழகான பேயாக இருந்தான். பேயில் ஏது அழகு என கேட்க கூடாது.? அவன் அவளின் கண்களுக்கு அழகான பேயாக தென்பட்டான்.


அங்கிருந்து எழுந்தவள் ஓட முயன்றாள். ஆனால் மாடியை விட்டு அவள் கீழே வரும் முன் அவன் வந்து கீழ் படியில் நின்று விட்டான். பயத்தில் நெஞ்சம் அடைத்தது அவளுக்கு. இதயத்தின் மீது கையை வைத்தபடி பின்னால் நடந்தாள்.


மாடி படியில் குதிக்கால் மோதி அவளும் இடறி முன்னால் சாய்ந்தாள். விழுந்தவளை தாங்கினான் சயா.


"ஏன் என்னை பார்த்து பயப்படுற.?" எனக்‌‌ கேட்டபடி அவளை‌ நிறுத்தினான்.


"முன்ன பின்ன பேயோடு பேசி பழகியது இல்ல தம்பி.." 


"நான் மட்டும் முன்ன பின்ன மனுசங்களோடு பேசியிருக்கேனா.? ஏன்க்கா இப்படி சொல்லி என் மனசை உடைக்கிற.? நான் பேய் இல்லன்னு எனக்கு நானே சொல்லிட்டு இருக்கேன். ஏனா எனக்கு பேயா இருக்கவே பிடிக்கல.." 


"ப்ளீஸ் என்ன விட்டுட்டு.. எனக்கு பயமா இருக்கு.." கைகளை எடுத்துக் கொண்டான்.‌ பொத்தென்று விழுந்தாள். மூக்கில் பலத்த அடி விழுந்தது.


"ஐயோ அம்மா.." கத்தியவளின் தோளை பிடித்து எழுப்பி அமர வைத்தான்.


"ஏன்டா என்னை விட்ட.?"


"நீதானே விட சொன்ன பாப்பா.?" என்றவன் "என்ன நாத்தம் இது.? சாக்கடை பக்கத்துலயா இவ்வளவு நாளும் இருந்தேன்.?" எனக் கேட்டான் சந்தேகமாக.


மூக்கை தேய்த்தபடி படியில் சாய்ந்து அமர்ந்தவள் "அந்த நாத்தம் அந்த ஆள் மேல இருந்து வருது.. இரண்டு நாளா இதே நாத்தத்துலதான் நான் இருக்கேன்.." என்றாள்.


அவளை பரிதாபமாக பார்த்தான். "நீ ஏன் இவனை கல்யாணம் செஞ்ச.? பிடிக்கலன்னு சொல்லி இருக்கலாமே. நீ அழகா இருக்க. ஆனா அவன் நல்லாவே இல்லை.."


"அவன் என் புருசன் இல்லப்பா.. நான் விபச்சாரி.." பெருமூச்சு விட்டாள்.


"ஓ.. என்கிட்டதான் காசு இல்ல.. இல்லன்னா கூட உனக்கு கஸ்டமரா ஆகியிருப்பேன்.."


அதிர்ச்சியில் விழிகள் தெறித்தது அவளுக்கு.


"மனுசங்களோடே குப்பை கொட்ட முடியல என்னால. இதுல பேய் நீதான் குறைச்சலா.? போப்பா போ.. போய் உனக்கு ஏத்த மாதிரி நல்ல பேயா பார்த்து லவ் பண்ணு.." என்று விரட்டினாள்.


"ஒரு பேய்ங்கற பயம் இல்ல.." சலித்தான்.


"அதெல்லாம் நிறையவே பயந்து நிறைய மயங்கி விழுந்தாச்சி. இனியெல்லாம் பயப்பட முடியாது. அந்த அளவுக்கு நீ வொர்த் இல்ல.." என்றவள் தட்டு தடுமாறி எழுந்தாள். அவனை விட்டு நகர்ந்தாள்.


ஆனால் அவன்தான் விடவில்லை. அவள் எங்கே போனாலும் பின்னால் சுற்றினான்.


அவளும் அந்த மனிதனும் கூடுவதையும் கூட பார்த்தபடி அவளருகிலேயேதான் இருந்தான். வினிதாவுக்கு என்றுமில்லாத வெட்கமும் படபடப்பும் வந்து சேர்ந்தது.


"எதுக்கு என்ன அப்படி பார்க்கற.?" என்றாள் அந்த குடிக்காரன் உறங்கிய பிறகு.


"நான் பார்க்கறதுல என்ன போச்சி.?"


நெற்றியில் அடித்துக் கொண்டாள்.


"சனியம் பிடிச்ச பேயே உனக்கு வெட்கம் மானம் எதுவும் இல்லையா.? அடுத்தவங்க பர்சனலை பார்க்க கூடாதுன்னு கூட தெரியாதா உனக்கு.?" கோபத்தோடு கேட்டாள்.


"உனக்கு ஏது பர்சனல்.?" 


தலை குனிந்தவளுக்கு கண்ணீர் கொட்டியது. அவன் பேசுவது தன்னை அசிங்கப்படுத்துவது போலிருந்தது. 


"தயவு செஞ்சி தூர போ.. உன்னை பார்க்க பிடிக்கல எனக்கு.." 


ஆனால் அவன் போகவில்லை. அவனால் போக முடியவும் இல்லை. அங்கேயேதான் சுற்றி வந்தான். சுதந்திரம் கிடைத்து விட்டது என்று வெளியே ஓடினாலும் மீண்டும் அவளிடமே கொண்டு வந்து நிறுத்தியது காற்று.


நான்காம் நாள் இரவில் வினிதாவோடு கூடி முடித்ததும் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து அவளை கொல்ல முயன்றான் அந்த குடிகாரன். 


சயாதான் நொடியில் பாய்ந்து வந்து கத்தியை பிடுங்கி வினிதாவை காப்பாற்றினான். பயமும் பதட்டமுமாக இருந்தவள் பார்த்திருக்கவே அந்த குடிகாரனை கொன்று விட்டான் சயா. 


குடிக்காரனின் வயிற்றை கிழித்து குடலை உருவி தரையில் எறிந்து எக்காளமிட்டான் சயா. வினிதாதான் அதிகமாக பயந்து போனாள். ஆனாலும் அவன் தனக்கு உதவி செய்கிறான் என்பது புரிந்துதான் இருந்தது அவளுக்கு.


அப்போது தொடங்கியது அவர்களுக்கு இடையிலான நட்பு.


பிணத்தை அப்புறப்படுத்திவிட்டு அவளோடு சேர்ந்து அவள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தான் சயா. அன்றிலிருந்து அங்கேயே வாசம் செய்ய ஆரம்பித்தான். 


அவளும் அவனை துரத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தாள். அத்தனையும் வீணாக போனது. மாந்திரீகம், கடவுள் கட்டு எதுவாலும் அவனை விரட்ட முடியவில்லை.


அவன் அவளோடே இருந்தான். எந்த தொந்தரவும் தரவில்லை. அவள் கண்விழித்ததும் பார்க்கும் முதல் முகம் அவனுடையது. உறங்கும்போதும் அவன் முகமே. உறங்கிய பிறகு கனவிலும் அவன் முகமே.


"ஏன் பேயே‌ நீ பேயா மாறின.?" ஒருநாள் கேட்டாள்.


"எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல.." என்றான் அவன்.


"உனக்கு எதிர்காலம் தெரியுமா.?"


"நோ.."


"என் இறந்தகாலத்தை மாத்த முடியுமா உன்னால.?"


"நோ.." 


"சுத்தம்.." என்றவளுக்கு அவனை பார்க்கப் பார்க்க குழப்பமும் அன்பும்தான் அதிகரித்தது. ஆமாம். சில நாட்களிலேயே இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments