Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.6

 "ஏன் மச்சி எனக்கொரு டவுட்டு.?" வந்து போன ஒருவன் குடித்து விட்டுப் போட்டுச் சென்றிருந்த பீடி துண்டை வாயில் வைத்தபடி கேட்டான் சயா.


"ச்சீ.. சனியனே.. யாரோட எச்சியையெல்லாம் வாயில வச்சிட்டு இருக்க நீ.?" எனக் கேட்டு பீடி துண்டை வாங்கி தூர எறிந்தாள் வினிதா. 


"உனக்கு கொஞ்சம் கூட சுத்த பத்தமே இல்ல.." சலித்துக் கொண்டாள்.


சயாவுக்கு முகம் வாடிப் போனது. அவனின் முகத்தை கண்டவள் "உனக்கு வேணும்ன்னா சொல்லு நான் பில்டர் சிகரெட் நாலு பாக்கெட் வாங்கிட்டு வந்து தரேன்‌‌.." என்றாள்.


இடம் வலமாக தலையசைத்தவன் "இவ்வளவு‌ சுத்தம் பார்க்கறியே, எப்படி வினி உன்னால இங்கே இருக்க முடியுது.? வரவனெல்லாம் தொடுறான். வரவனெல்லாம் உன்னோடு கூடிட்டு போறான். அவனவன் வந்த வேலையை முடிச்சிட்டு போனா கூட பரவால்ல. அவனுங்க உன்னை கிஸ் பண்ணும்போதுதான் ரொம்ப கடுப்பாகுது.." என்றான் தலையை குனிந்தபடி.


வினிதாவால் சட்டென்று பதிலை சொல்ல முடியவில்லை. யாரும் வலுக்கட்டாயப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகவே இவளாகவே முத்தத்தை ஏற்றுக் கொள்வாள்.


மதுபான வாசம், சிகரெட், கஞ்சா, போதை பொருள் என்று எந்த வாசம் வீசினாலும் முகம் சுளிக்காமல் சகித்துக் கொள்வாள். இப்படியொரு சகிப்பு எப்படி தனக்கு வந்தது என்று அவளுக்கே ஆச்சரியமாக இருக்கும். 


"நெத்தியில எழுதினவன் இப்படி எழுதி வச்சிருக்கான். நான் என்ன செய்யட்டும்.?" எனக் கேட்டாள் வினிதா.


"நீ ஏன் இங்கே இருக்க.? வா வெளியே போயிடலாம். நான் எங்கேயாவது திருட்டிட்டு வரேன். உன் தம்பியை காப்பாத்துவ.."


"திருட்டு பணம் எப்படி எனக்கு சொந்தமாகும். இது கூட ஒரு உழைப்புன்னு சொல்லலாம். ஆனா அது.?"


"இது கேவலம். உழைப்பு இல்ல.."


சிரித்தாள் வினிதா.


"கண்ட படத்தையும் பார்ப்பானுங்க. கண்ட கதையையும் படிப்பானுங்க. அவங்களோட அவசரத்துக்கு ஆள் கிடைக்காது. அப்பாவி பிள்ளைகளை ரேப் பண்றேன்னு போகாம என்னை தேடி வரானுங்களே.. அதுக்கே நான் அவங்களுக்கு நன்றி சொல்லணும்.."


சயா அவளின் தலையை தடவி விட்டான்.


"நான் மட்டும் மனுசனா இருந்திருந்தா உன்னையே லவ் பண்ணி கல்யாணம் கூட பண்ணி இருப்பேன்.." என்றான் அவன்.


"அடிங்.. எடு செருப்ப.." என்று கர்ஜித்தபடி முன்னால் நடந்தாள் பூவிளந்தேவி. ரொம்ப நாளாக காதலனை பார்க்கவில்லையே என்று பார்க்க வந்திருந்தாள் இப்போது. கலையும்தான் உடன் வந்திருந்தான்.


"அறியாத புள்ளை. தெரியாம பேசுது. மன்னிச்சிடு தேவி.." என்ற கலையை முறைத்தவள் "இதுவே கடைசி. உன் ஆள் ஆன்மாவா மாறியதும் அத்தோடு இரண்டு பேரும் எங்கேயாவது ஓடி போயிடுங்க. இல்லன்னா ஆன்மா உலகின் கோர்டுல கேஸ் போட்டு அவளோடு சேர்த்து உன்னையும் நாரடிப்பேன்.." என்றாள்.


'சுத்தம்..' நெற்றியில் அடித்துக் கொண்டான் ‌ 'நல்ல நேரத்துல எனக்கு ஜோடியா பிறந்தா.. எங்கே போனாலும் வம்பு சண்டையை இழுத்து வச்சிட்டு வரா..' வருந்தினான்.


"அவங்க என்னம்மோ வாழ்ந்துட்டு வரட்டும். வா நாம போகலாம்.." அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து போனான்.


வருடங்கள் ஓடியது. ஆறாம் வருடத்தின் முடிவில் வினிதாவின் தம்பி சிகிச்சை பலனின்றி இறந்து போனான். வினிதா மொத்தமாக தோற்றுப் போனவளாக அந்த விபச்சார விடுதியை விட்டு வெளியேறினாள்.


"டோன்ட் பீல்.." என்றான் சயா.


"எவ்வளவு நாள் முயற்சி. தோத்து போகும்போது வலிக்குது சயா‌.." என்று குலுங்கி அழுதாள். 


"என் வாழ்க்கை மொத்தமும் கந்தரகோலம் ஆகிடுச்சி. என்னை இப்படி ஒரு வாழ்க்கை வாழ வச்ச அந்த கடவுள் மட்டும் கையில் கிடைச்சா  அவரை கொன்னு போடுவேன்.." என்றாள் அழுதபடியே.


சயாவுக்கு வருத்தமாக இருந்தது. 


"எல்லாம் சரியா போகும் ஒருநாள்.." என்றாள்.


"அந்த ஒருநாள் நான் செத்த நாளாதான் இருக்கும்.." விரக்தியோடு சொல்லியபடி சாலையில் நடந்தவளை வேகமாக வந்து அடித்தது லாரி ஒன்று.


மேலே பறந்தாள் வினிதா. அவளுக்கும் முன்னால் அவளின் ரத்தம் பூமியை தொட்டது. விழுந்த நொடியில் இறந்துப் போனாள்.


"வாவ்.. என்ன ஓர் அழகான காவியம்.?" சயா லாரியின் மேலே நின்றபடி சொன்னாள்.


"நான் எழுதியதிலேயே இதுதான் பெஸ்ட் லைப்பா இருக்கும். புன்னகை கத்து தருவதை விடவும் வலிகள் அழகான கருத்துகளை தந்து போகுது. வினீ நீ இதுவரை வாழ்ந்ததுலேயே இப்பதான் ரொம்ப பெஸ்டான அனுபவத்தை பெற்றிருக்க.." என்றாள் ரொம்ப மகிழ்ச்சியாக.


அவளின் தலையில் விழுந்தது ஒரு அடி. திரும்பிப் பார்த்தாள். எரியும் தீக்குச்சியின் நுனி போல இருந்தது அவனின் கண்கள்.


"ஏன்டா மச்சி.?"


"சனியனே.. சனியனே.. என்ன மாதிரி லைப்பை கொடுத்திருக்க.? ஏன்டா வாழ்ந்தோம்ன்னு தோணிடுச்சி.." என்று கத்தி வைத்தான் வினீ.


"அதுதான் முடிஞ்சி போச்சே. அப்புறம் என்ன.? விடு போனதை விட்டுடு.. இப்போதைய லைப்பை வாழு.." என்றாள்.


"போடி பேயே.. அவனவன் நொந்து நூடுல்ஸாகி வந்திருக்கான். நீ தத்துவம் சொல்றியா?" எனக் கேட்டு அவளை விரட்டினான்.


அவள் தனக்கு தந்த வாழ்க்கை அவனுக்கு உகந்ததாக இல்லை. ஆனாலும் அவனுக்கு ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தது. அவளை நேசித்தான். இந்த வாழ்க்கையால் எந்த குடியும் முழுகி போய் விடவில்லை. இது வெறும் நூறு வருட கடன் வாழ்க்கை. தெளிவாக புரிந்து வைத்திருந்தான். அதனால் அவனால் தன் தோழியை வெறுக்க முடியவில்லை.


இருவரும் பூமியை விட்டு வெளியே வந்தனர். 


ஆன்ம உலகின் வாசலில் நின்றிருந்தாள் பூவிளந்தேவி.


"தேவி.." ஓடி போய் அணைத்துக் கொள்ள முயன்றான் வினீ.


விலகி நின்றாள் அவள்.


"நீதி மன்றத்துல வழக்கு போட்டிருக்கேன்.‌ நாளைக்கு வந்துடு.." என்று சொல்லி விட்டு அங்கிருந்துப் போனாள்.


மலங்க மலங்க விழித்தான் வினீ. எதற்காக வழக்கு என்று தெரியவில்லை. 


"என்னாச்சி.?" எனக் கேட்டவனின் தோளில் கை பதித்தான் கலை.


திரும்பி பார்த்தவனிடம் "அவளுக்கு காதல் அதிகமாகிடுச்சி. நீ அவளோட காதலை மதிக்காம எப்பவும் உன் பிரெண்டோடு மட்டுமே சுத்துறன்னு கோபம். அதனால உன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்க போறா.. அதுக்காகதான் இந்த வழக்கு.." என்றான்.


வினீக்கு வாழ்வே முடிந்தது போலிருந்தது. எவ்வளவோ காதலித்தான் அவளை. அவளின் காதலுக்கு ஆன்மாவையே அடமானமாக வைப்பவன்‌. அவள் எடுத்த முடிவு இவனை உடைத்து விட்டது.


சயாவுக்கு என்ன சொல்வதென்று செய்வதென்று தெரியவில்லை.


நண்பனின் வாழ்க்கைக்கு தானே எமனாக மாறி விட்டது போலிருந்தது.


"வினீ சாரி.." அவனை நெருங்கினாள்.


"என்னை கொஞ்ச நேரம் தனியா விடு சயா.." அங்கிருந்து போனான்.


நண்பனை கண்டு கவலையாக இருந்தது. யோசனையோடு காதலனின் புறம் பார்த்தாள்.


"நீங்களும் இப்படிதான் நினைச்சிட்டு இருக்கிங்களா? அவனோடு நான் பழகிட்டு இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா.? நீங்களும் என்னை விவாகரத்து செய்ய போறிங்களா.?" 


வெறித்து பார்த்து நின்றவளை தன் கைகளில் ஏந்தினான். 


"என்ன பண்றிங்க.?" 


பதில் சொல்லாமல் நடந்தான்.


"உங்களுக்கும் என்னை பிடிக்கலையா.?" என்றவளுக்கு பதில் தராமல் முத்தம் தந்தான்.


குழப்பமாக இருந்தது சயாவுக்கு.


தனது அரண்மனைக்கு சென்றான். உயர் ரக ஆன்மாவாக பதவி உயர்ந்திருந்ததால் அவனின் மாளிகையும் பெரியதாகவே இருந்தது.


கதவு தானாகவே பூட்டிக் கொண்டது.


"அவன் கவலையா இருக்கான். நான் போய் அவனை சமாதானம் செய்றேன்.." 


அவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.


அவளை ஒரு அறைக்குள் விட்டான். கதவை சாத்தினான்‌.


"கலை என்ன செய்றிங்க.?"


"நீ இனி‌ இங்கேதான் இருக்க போற‌. நீ மனித விளையாட்டு விளையாட போறது இல்ல.." என்றவன் ஜன்னலை திறந்து அவளை பார்த்தான்.


"எனக்கும் எக்கச்சக்கமா பொறாமை உண்டு. ஒவ்வொரு முறையும் உன்னை என்னோடு பூட்டி வச்சிக்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனா முடியாம போயிடுச்சி.." என்றவனை கோபத்தோடு பார்த்தவள் "ஆனா நான் என்ன தப்பு செஞ்சேன்.?" என்றாள் கத்தலாக.


ஜன்னலை அடித்தான்‌. இவள் துள்ளி விழுந்தாள்.


"என்ன தப்பு செய்யல நீ.?  மானிட விளையாட்டு ஏன் உருவாக்கினாங்க தெரியுமா.? ஆன்ம காதலர்கள் பூமியில் பிறப்பெடுத்து காதலிச்சி சந்தோசத்தை அனுபவிக்கதான்.. ஆனா நீ எப்பவும் உன் நண்பனோடு விளையாடிட்டு இருக்க.. காதலுக்கு உண்டான மரியாதை போச்சி உன்னால. ஆன்ம காதல் விளையாட்டை ஆன்ம நட்பு விளையாட்டா மாத்தி வச்சது நீங்கதான்.." 


சயாவின் கண்களில் ஆத்திரம் தெரிந்தது.


"ஆன்ம காதலர்களா பிறக்கணுமா.? நாமா.? இந்த ஆன்ம காதல் விளையாட்டும், பூமியும் உருவாக்கியது காதலர்கள் வாழதான். ஆனா கொஞ்சம் வருசம் முன்னாடி நீங்க என்ன பண்ணிங்கன்னு மறந்துட்டிங்களா.? ஆன்ம காதல்ன்னா ஒருத்தனுக்கு ஒருத்தியா இருக்கணும். இல்லன்னா ஒருத்திக்கு ஒருத்தனா இருக்கணும். நீங்கதான் அப்ப விளையாட்டை மாத்தி வச்சது. இங்கே ஆன்ம ஜோடியை தவிர வேறு யாரோடும் கூட முடியாது, ஆன்ம ஜோடியை மாத்திக்க முடியாதுன்னு அங்கே பூமியை சாக்கா வச்சி ஒவ்வொரு பிறவிக்கும் நூத்துக் கணக்கான மனைவிகளோடு வாழ்ந்தது நீங்கதானே.? ஆன்ம ஜோடி வாழ்வின் மீது வெறுப்பு வர காரணமே உங்கள் செயல்தான்.. எனக்கு உங்களோட ஒவ்வொரு பிறவியும் ஞாபகம் இருக்கு. நீங்க கூத்தடிச்ச மானிட பெண்கள் கூட ஞாபகத்துல உண்டு. என் மனசை ஒவ்வொரு முறையும் உடைச்சிங்க. பூமியோட வாழ்க்கை வெறும் கனவு, கற்பனை, நிலையில்லாததுன்னு சொல்லி சொல்லி அதே தப்பை மறுபடி மறுபடி செஞ்சிங்க. கற்பனை கனவா இருந்தாலும் வலிக்காதா.? அத்தனையும் பொறுக்கிட்டேன். உங்க பக்கத்துல இருக்க பிடிக்காமலேயே ஒவ்வொரு முறையும் பூமியில் போய் மானிட வாழ்வு வாழ்ந்தேன். இன்னைக்கு நீங்க உயர்ந்த ஆன்மாவா இருக்க காரணம் என்னோட புண்ணியங்கள். நான் அதை கூட சொல்லி காட்டியது கிடையாது. உங்களை முழு மனசா லவ் பண்றேன். நீங்க என்ன சொன்னாலும் அதை வேத வாக்கா நினைக்கிறேன். என்னோட ஒரே ஆறுதல் என் நண்பன் மட்டும்தான். அவனையும் என்கிட்ட இருந்து பிரிச்சி வைக்க பார்க்கறிங்க.. நான் சந்தோசமா இருக்கும் ஒரே இடம் பூமி மட்டும்தான். ஆனா அதையும்.." அதற்கு மேல் சொல்லாமல் அழுதாள்.


கலை அவளை வெறித்துப் பார்த்தான்.


"இந்த முறை உன் நண்பனுக்கு நீ எழுதிய வாழ்க்கை என்ன லட்சணம்.? அவனும் பொண்ணா பிறந்து பல ஆண்களோடு கூடிட்டுதானே வந்தான்.?"


மூக்கு சிவந்தது இவளுக்கு.


"அவன் அனுபவிச்சது வலி. நீங்க அனுபவிச்சது மகிழ்ச்சி. இரண்டுக்கு நடுவுல வித்தியாசம் இருக்கு.. என்னை விடுங்க வெளியே. எனக்கு இங்கே இருக்க பிடிக்கல.." கூச்சலிட்டாள்.


"மாட்டேன்.." கையை கட்டியபடி சொன்னான்.


"எனக்கு உன்னை பிடிக்கல பையா.. கதவை திறந்து விடுடா.. பொறுக்கி பயலே.!"


காதை அசக்கி விட்டுக் கொண்டான்.


"காது செவிடா போயிடும் போல நீ கத்துறதுல.." 


"அப்படின்னா என்னை வெளியே விடு.." 


அவன் போய் விட்டான். சில நேரங்களில் தோன்றியது இந்த ஆன்ம வாழ்வை விட பூமியின் மனித வாழ்க்கை பெரிதென்று. ஆனாலும்‌ அவளால் அதை நூறு சதவீதம் சொல்லி விட முடியவில்லை. அவனை அளவுக்கு அதிகமாக காதலித்தாள். 


நீதிமன்றம் துவங்கியது. நீதிபதிகள் இருக்கையில் அமர்ந்தனர்.


"நீ ஏன்ம்மா உன் ஆன்ம காதலனை விவாகரத்து செய்ய நினைக்கற.?" ஒரு நீதிபதி கேட்டார்.


"அவனுக்கும் அவனோட தோழிக்கும் கள்ள தொடர்பு இருக்கு.."


வினீ அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.


"இப்படிதான் நீ என்னை நினைக்கிறியா.?" 


"அவளை பிரிய முடியாது உன்னால. அதனால நானே உன்னை பிரியறேன். பிரியணும்ன்னா அதுக்கு வலுவான ஆதாரம் வேணுமே. இந்த ஆதாரம் வலுவா இருக்கு இல்லையா.? அப்புறம் என்ன.?" என்றுக் கேட்டாள்.


வினீயின் விழிகள் கலங்கியது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..



Post a Comment

0 Comments