Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.7

 நீதிபதிகள் பூவிளந்தேவியை கோபத்தோடு பார்த்தனர்.


"தப்பா பேசாதம்மா. அவங்க இரண்டு பேரும் ஆன்ம நட்பா விதிக்கப்பட்டவங்க.. அவங்களுக்குள்ள தப்பு நடந்திருக்க வாய்ப்பேயில்ல.." 


பூவிளந்தேவி‌ தன் முடிவில் பின் வாங்காது இருந்தாள்.


"தப்பு இங்கே நடக்கல. அவங்க பூமியில் பிறவி எடுத்த நேரங்களில் நடந்தது.."


நீதிபதி ஒருவர் மேஜையை ஓங்கி தட்டி விட்டு எழுந்து நின்றார்.


"ஆன்ம நட்பா விதிக்கப்பட்டவங்க தாயா, தந்தையா, தோழியா, தோழனா, மகளா, மகனா மட்டும்தான் பூமியில் உறவாக முடியும். எந்த ஆன்ம நட்பும் பூமியில் கணவன் மனைவியாவோ, காதலன் காதலியாவோ இருக்க முடியாது. அப்படி அவங்களுக்குள்ள காதல் இருக்கணும்ன்னா ஆன்ம காதல்ன்னு உங்களை ஏன் விதி படைச்சிருக்கு? ஒரு ஆன்ம காதலி தோழியாக முடியும். ஆனா ஒரு ஆன்ம தோழி எப்பவும் காதலியாக முடியாது. உனக்குன்னு இருக்கும் அந்தஸ்தையும், பதவியையும், நல்ல வாய்ப்பையும் உன் சந்தேக புத்தியால இழந்துடாத.." என்று எச்சரித்தார்.


வினீயின் கண்களிலிருந்து வெளியான கண்ணீர் நிற்கவே இல்லை.


"எனக்கு எந்த பதவியும் வாய்ப்பும் வேணாம். அவன்கிட்டயிருந்து பிரிச்சி விடுங்க. இல்லன்னா நான் என் ஆன்மாவை அழிச்சிப்பேன்.." என்றாள் முடிவாக.


வினீக்கு பிரபஞ்சமே நின்று விட்டது போலானது. எத்தனை லட்சம் ஆண்டுகள். எத்தனை ஆயிரம் பிறவிகள். எத்தனை விதமான பிரச்சனைகள். அதில் எத்தனை விதமான காதல்கள். அத்தனையிலும் பூவிளந்தேவி அவனின் ஆன்ம காதலியாய் சேர்ந்து இருந்தாள். இன்றைக்கு இப்படி தன் மேல் உள்ள வெறுப்பில் அவளையே அழித்துக் கொள்வேன் என்பது நம்ப முடியாததாக இருந்தது.


வாழ்க்கையே அழிந்து விட்டது போலிருந்தது.


"நீ சொல்லும்படி கேட்கிறேன் தேவி. ஆனா என்னை பிரிச்சி விடாதே.." கெஞ்சினான்.


நீதிபதி அவர்கள் இருவரையும் பார்த்தார்.


"இதுல இரண்டு பேர் சம்பந்தபடல. சயாவோடு சேர்த்து மூனு பேர் சம்பந்தப்பட்டிருக்காங்க. அவளையும் கூட்டி வாங்க. அவளோட வாதத்தை கேட்ட பிறகு நாம ஒரு முடிவுக்கு வரலாம்.."


அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் வழக்கு ஆரம்பமானது.


சயாவின் கையை விடாமல் பிடித்தபடி நின்றிருந்தான் கலை. அவன் இந்த ஒருநாளுக்குதான் அனுமதி தந்திருந்தான்.


பூவிளந்தேவி எடுத்த முடிவை பற்றி அவளிடம் தெரிவிக்கப்பட்டது. சயாவுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. கலைக்கும் பூவிளந்தேவிக்கும் திடீரென என்ன வந்தது என்று குழம்பினாள்.


"நீ என்ன சொல்ற சயா.? உங்க நட்பை இவங்க சந்தேகப்படுறாங்க. நீங்க இரண்டு பேரும் சேர்ந்துதான் ஒரு முடிவை.." நீதிபதி முழுதாக பேசும் முன்பே "நாங்க எங்க ஆன்ம நட்பை முறிச்சிக்கிறோம்.." என்றாள் இவள்‌.


வினீ அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான். பூவிளந்தேவி ஆன்ம காதலை முறித்துக் கொள்வதாக சொன்ன போது உண்டான அதே காயம் இப்போது இவள் சொன்னது கேட்டும் உண்டாகி இருந்தது.


"ஆன்ம காதலையோ ஆன்ம நட்பையோ அவ்வளவு சுலபமா முறிச்சிட முடியாது. நீங்க ஏதாவது ஒன்னை முறிச்சாலும் உங்க ஆன்மாவின் ஒரு பகுதியையும் இழந்தது மாதிரி காயம் ஆகும். காலத்துக்கும் அந்த காயம் இருக்கும். உங்களுக்குள்ள இருக்கும் சண்டைகள் என்னைக்காவது ஒருநாள் முடிஞ்சி போகும். ஆனா எந்த உறவையாவது முறிச்சா அப்புறம் ரொம்ப கவலைப்படுவிங்க.." என்றார் நீதிபதி.


பூவிளந்தேவி கொஞ்சமும் மாறாமல் நின்றிருந்தாள்.


"இவங்க இரண்டு பேரும் ஆன்ம நட்பை முறிச்சிக்கிறதுதான் நல்லது..‌ நீங்க அதுக்கான ஏற்பாட்டை பண்ணுங்க.." என்றான் கலை.


சயா பயத்தோடு அவனை பார்த்தாள். இத்தனை வருசம் காதலித்துதான் என்ன பிரயோஜனம் என்று தோன்றியது.


"நான் சயாவுடனான நட்பை முறிச்சிக்கிட்டா உனக்கு ஓகேவா தேவி.?" வினீ ஏதோ ஒரு முடிவோடு கேட்டான்.


"ம். அப்புறம் நான் எப்பவும் உன்னை பிரிய மாட்டேன்.." என்றாள் வாக்குறுதி தருவது போல.


வினீ தனக்குள் நகைத்துக் கொண்டான். கசப்பும் இனிப்பும் கலந்த நகைப்பு.


"சரி நான் நட்பை முறிச்சிக்கிறேன்.." என்றவன் "ஆனா ஒரு கன்டிஷன்.." என்றான்.


என்னவென்பது போல அனைவரும் பார்த்தனர்.


"நானும் சயாவும் கடைசியா ஒருமுறை வாழ்க்கை விளையாட்டை பூமியில் வாழ்ந்துட்டு வரோம். கடைசி கடைசியா.‌ அப்புறம் நாங்க நட்பு கொண்டாடாம இருக்கோம்.." 


சயா அவனை குழப்பத்தோடு பார்த்தாள்.


"எனக்கு ஓகே.." என்று ஒரே குரலில் சொல்லிவிட்டு போனார்கள் கலையும் பூவிளந்தேவியும்.


வழக்கு ஒரு ஜென்மத்திற்கு பிறகு தொடருவதாக தள்ளி வைக்கப்பட்டது.


சயாவின் அருகே வந்தான் வினீ.


"இது ஏன் வினீ. நீயும் நானும் பிரிய போறோம்ன்னு தெரிஞ்சும் எப்படி இப்படியொரு முடிவை எடுத்த.?" 


"இது நமக்கான லாஸ்ட் நாள் சயா. நமக்கு யோசிக்க தேவையான நேரமா இதை யூஸ் பண்ணிக்கலாம்.." 


வாழ்வியல் ஏட்டை மேற்பார்வையிடும் அதிகாரிகளிடம் வந்தனர் இருவரும்.


"நாங்க மறுபடியும் வாழ போறோம்.." என்று ஏட்டை நீட்டினான்.


வாழ்வியல் ஏட்டை படித்து பார்த்த அதிகாரி "இதென்ன இதுல இத்தனை சலுகைகள்.?" என்று கேட்டார்.


"இது எங்களோட கடைசி வாழ்க்கை.." அவன் சொன்னது கேட்டு பரிதாபப்பட்டவர் சரியென்று இருவரையும் அனுப்பி வைத்தார்.


சயா சத்யா என்ற பெயரோடு ஆணாக பூமியில் பிறந்தாள். வினீ பெண் காப்பாளினி தேவையாக அவனுடன் இருந்தாள்.


சத்யா நல்ல பையன். இந்த கதையை படித்துக் கொண்டிருக்கும் ஆண் வாசகனை போல. வினீயும் நல்ல தேவதைதான். இந்த கதையை படித்துக் கொண்டிருக்கும் பெண் வாசகியை போல. (நாங்க நல்லவங்கன்னு உங்களுக்கு யார் சொன்னதுன்னு யாரும் சண்டைக்கு வர கூடாது. இங்கே எல்லோரும் நல்லவங்கதான். அதை நம்பணும் முதல்ல.😁)


அன்று வெளிநாடு செல்ல அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் வளர்ந்து விட்ட ஆண் மகன் சத்யா. அவன் விமான நிலையத்திற்குள் நுழையும் முன் குறுக்கே வந்து நின்றாள் வினீ.


"உன்னால எங்கேயும் போக முடியாது முட்டாள்.." என்றவள் விரல்களை சொடுக்கிட்டாள். அவன் அங்கேயே மயங்கி விழுந்தான். அவனின் ஆன்மா தனியாக பிரிந்தது.


சத்யாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள் அருகில் இருந்தவர்கள்.


சயாவும் வினீயும் விமான நிலையத்தின் கூரையில் அமர்ந்திருந்தனர்.


"இன்னும் நாற்பது வருசம்தான் இருக்கு வினீ. அப்புறம் நீ யாரோ, நான் யாரோ.." என்று வேதனைப்பட்டாள் சயா. வினீ ஏட்டில் எழுதியிருந்த சலுகைகள் இவைதான். இருவருக்கும் மனிதனாகவும், தேவதையாகவும் எந்த ஞாபகமும் இருக்காது. ஆனால் சத்யாவின் வாழ்க்கையை வினீ மாற்ற முயலும் ஒவ்வொரு முறையும் இருவரும் ஆன்ம நினைவுகளோடு சந்தித்துக் கொள்ள முடியும். இதுவரை இப்படிதான் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.


இதுவரை எவ்வளவோ யோசித்தாகி விட்டது. எத்தனையோ முறை அழுது மாய்ந்தாகி விட்டது. ஆனால் இருவருக்கும் எந்த வழியும் புலப்படவில்லை. வாழ்க்கையே கை விட்டு போவது போலிருந்தது.


"எனக்கு ஒரு விசயம் புரிஞ்சது சயா.." என்ற வினீயை யோசனையோடு பார்த்தாள்.


"என்ன விசயம்.?" 


"உன் புண்ணியங்களின் பலனை உன் காதலன்கிட்டயிருந்து திருப்பி வாங்கிடு.." 


சயாவுக்கு புரியவில்லை. இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்றும் விளங்கவில்லை.


"இங்கே ஒவ்வொரு ஆன்மாவும் அவங்கவங்க பாவ புண்ணியத்தோடு இருக்கணும். நீ ஏன் உன்னோடதை தர.? நீ உன் புண்ணியங்களை அவனுக்கு தந்ததாலதான் அவன் இப்ப உயர்ந்த ஆன்மாவா இருக்கான். அவன் உயர்ந்த ஆன்மாவா இருப்பதாலதான் அவன் பூமியில் பிறக்கும்போது கூட நிறைய ஜோடிகளோடு இணையுறான். உன்னோட இத்தனை வருச கண்ணீருக்கு காரணமே நீ மட்டும்தான். இங்கே பலரும் ஒரு உயர்ந்த ஆன்மாவோடு கூடி குலாவ ஆசைப்படுறாங்க. அதுக்கு காரணம் அந்த ஆன்மாவின் பதவி. நீ எதுக்காக இப்படியொரு தப்பை செஞ்ச.?" எனக் கேட்டான்.


சயாவுக்கு முதலில் புரியாவிட்டாலும் கூட சிறிது நேரத்தில் விசயம் புரிந்தது.


அவனை ஒரு சாதாரண ஆன்மாவாக வைத்திருந்தால் தனக்கு சமமாக இருந்திருப்பான். அவனுக்கு பலரோடு கூடல் இருந்திருக்காது.‌ தனக்கும் வலிகள் நிறைந்த வாழ்வு கிடைத்திருக்காது‌ என்பதை தாமதமாக புரிந்துக் கொண்டாள்.


"ஆனா அதுக்கும் நம்ம நட்புக்கும் என்ன சம்பந்தம் வினீ.? நான் என் புண்ணியங்களை எனக்கே திருப்பி வாங்கிக்கிட்டா அவர் உன்னையும் என்னையும் விட்டுடுவாரா.?" சந்தேகத்தோடு கேட்டவளிடம் ஆமென தலையசைத்தான்.


"அவன் உயர்ந்த ஆன்மாவா இருப்பதாலதான் நம்மை இளக்காரமா பார்க்கறான். உன்னை அடைச்சி வச்சானாமே அன்னைக்கு. அவனுக்கு அந்த அதிகாரத்தை யார் தந்தது‌.? ஆன்ம ஜோடின்னா ஜோடியாதான் இருக்கணும். கன்ட்ரோலரா இருக்க கூடாது.. நீ புண்ணியத்தின் பலனை திருப்பி வாங்கு. அவன் நார்மலுக்கு வந்த பிறகு பூமியின் வாழ்க்கையை தேடுவான். உன்னை தேடுவான். பூமியின் வாழ்க்கை மட்டும்தான் அவனையும் உன்னையும் சேர்க்கும். நீ தந்த பலனால அவன் இத்தனை நாளும் ரொம்ப ஜாலியா விண்வெளியில் சுத்திட்டு இருந்தான். அவன் சாதாரண ஆன்மாவாக மாறிய பிறகு வாழ்க்கையை தேடுவான். லைப்பை ரூல் பண்ண அவனுக்கு ஒரு ஆன்ம நட்பு தேவை. அன்னைக்கு அவனுக்கே தெரியும் ஆன்ம நட்பின் அவசியம் என்னன்னு.!"  


சயாவுக்கு இது சரியென்றுதான் தோன்றியது.


"ஓகே.. ஆனா அவனோட ஆன்ம நட்பா ஒரு ஆண்தான் இருக்கணும்.." 


"ஆமா. அது கண்டிப்பா பூவிளந்தேவியோட ஆன்ம தோழிக்கு கணவனா இருக்கணும்.." என்று சொல்லி நகைத்தான். 


மருத்துவமனையில் ஆன்ம நினைவுகள் ஏதும் இல்லாமல் கண் விழித்தான் சத்யா. அவனின் அருகில் நின்றிருந்த வினீ அவனின் தலையை வருடினாள். யாரோ தீண்டுவது போல உணர்ந்து வெற்றியை தொட்டான் சத்யா. அவள் கையை விலக்கிக் கொண்டாள்.


"இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட விமானம் நடு வழியில் பழுதாகி கடலில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக விமான பயணிகள் அனைவரும் பிழைத்தனர்.." என்று செய்தியில் வாசிக்கப்பட்டது கேட்டு அதிர்ந்து எழுந்தான் சத்யா.


"இந்த விமானத்துல நீ போயிருந்தா நீ அந்த கடல்ல முழுகி இறந்திருப்ப சத்யா. அதனாலதான் நான் உன்னை தடுத்தேன்.." என்றாள் வினீ.


"ஆமாம். நான் ஒரு அன்பான புத்திசாலி தேவதை. பத்து வருடங்களுக்கு பிறகு நடக்க இருக்கும் தீமையை அறிந்து அதுக்கேத்த மாதிரி இந்த நாளின் ஏதாவது ஒரு நொடியில் அதை மாத்தி வைப்பேன். எனக்கு மட்டும் வாழ்க்கை இப்படி அமைஞ்சிடுச்சேன்னு நீயும் நிறைய முறை புலம்பற சத்யா. ஆனா உன் வாழ்க்கையை அப்படியே ஓட விட்டா இதை விட மோசமா அமையும். அதனாலதான் அதை தடுக்கறேன். உனக்கு நடப்பதெல்லாம் நன்மைக்காகதான்‌ உன் காப்பாள தேவதையை நம்பு.." அவனின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு நகர்ந்துக் கொண்டாள் வினீ.


சத்யாவுக்கு அடுத்த ஒரு மாதத்தில் பணி உயர்வு கிடைத்தது. அவனின் காதலி அவனை திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தாள். வினீக்கு என்னவோ உறுத்தியது. தன் கையிலிருந்த வாழ்வியல் ஏட்டை பிரித்து பார்த்தாள். அந்த பெண்ணை அவன் திருமணம் செய்தால் அடுத்து வரும் ஒரு வருடத்தில் இறந்து போவான் என்று கணக்கிட்டு பார்த்து புரிந்துக் கொண்டாள். 


அந்த பெண்ணோடு திருமணம் நடக்க இருந்த நாளில் அவன் மீண்டும் மயங்கி விழுந்தான். 


வினீ ஓடி வந்து சயாவை அணைத்துக் கொண்டான். திருமண மண்டபம் கலவரத்தின் உச்சமாக இருந்தது. ஆனால் இவர்கள் நட்பில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.


"பூவிளந்தேவியை எப்படி சரி கட்டுறதுன்னு யோசிச்சியா.?" வருத்தமாக கேட்டாள் சயா.


"ம்.." என்றவனை ஆச்சரியத்தோடு பார்த்தவள் "எப்படி.?" எனக் கேட்டாள்.


"சுலபமா ஒன்னு.. மிரட்டல் உருட்டலெல்லாம் இனி நான் செய்ய போறேன். அவளோடு பிரபஞ்சத்தில் காதல் கொள்ளாம இருக்க போறேன். அவளுக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வைக்க போறேன்.." என்றான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே





Post a Comment

0 Comments