Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.8

 சத்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக சொன்னார்கள். திருமணம் நின்றுப் போனது. மணப்பெண் தன்னால் அவனோடு வாழ முடியாது என்று சொல்லிவிட்டு அடுத்த நான்காம் நாளில் வேறு ஒருவனோடு திருமணத்தை நடத்திக் கொண்டாள்.


"இந்த ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனையை தயார்.?" என்று‌ திட்டினான் சத்யா. வினீ சோகமாக அவனின் தலையை வருடினாள்.


அடுத்த வாரத்திலேயே இரண்டாம் ரிப்போர்ட் வந்தது. முன்பு வந்தது வேறு ஒருவரின் பரிசோதனை முடிவு என்று தெரிவித்தனர் மருத்துவர். 


சத்யா சோகமானான். காதலி மாற்றானின் மனைவியான கவலையை தாங்க முடியாமல் அந்த மருத்துவமனையின் மாடியிலிருந்து கீழே குதித்தான்.


ஆன்மாவாக மாறிய சயாவை கண்டு முறைத்தான் வினீ.


"உன்னை வச்சிக்கிட்டு உருப்படியா ஒரு பிளான் பண்ண முடியுதா.? தற்கொலை பண்ணி செத்து போயிருக்க. மறுபடியும் அதே வாழ்க்கையை‌ வாழணும் நாம.." சலித்துக் கொண்டான்.


ஆன்ம ஏட்டின் காவல்காரனும் கூட இருவரையும் திட்டி மறுபடியும் அனுப்பி வைத்தான். மீண்டும் மீண்டும் மீண்டும் என்று இருபத்தியெட்டு முறை அதே வாழ்க்கையை வாழ்ந்து முடித்தான் சத்யா.


இடையில் நிறைய நேரங்கள் கிடைத்தது. இருவரும் நிறையவே உரையாடினார்கள்.  அந்த உரையாடலுக்காகதான் இப்படி ஒரு விதி வாய்த்ததாக நம்பினர் இருவரும்.


பிரபஞ்சம் வந்த இருவரும் மிகவும் தெளிவாக இருந்தனர்.


மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டது.


"நாங்க எங்க நட்பை முறிச்சிக்கிறோம்.." என்றனர் இருவரும்.


பூவிளந்தேவியும் கலையும் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வினீக்கும் சயாவுக்கும் இடையிலிருந்த நட்பு முறிக்கப்பட்டது.


சயா ஒருபுறம் மயங்கி விழுந்தாள். மறுபுறமோ வினீ மயங்கினான்.


ஆன்ம ஜோடிகள் அவர்களை கையில் ஏந்தினர். அங்கிருந்து சென்றனர்.


பிரபஞ்சத்தின் கணக்குபடி ஆறு மாத காலத்துக்கு இருவரும் மயங்கியே கிடந்தனர். அவர்களின் ஆன்ம ஜோடிகள் அதிகளவு காதலோடு இருவரையும் கவனித்துக் கொண்டனர்.


ஆன்ம ரூபத்தின் இதயத்திலிருந்து காயம்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டே இருந்தது பிரிக்கப்பட்ட இருவருக்கும்.


ஆறு மாத காலத்திற்கு பிறகு எழுந்தனர் இருவரும். சயாவின் தலையை வருடினான் கலை.


"உனக்கு ஒன்னும் ஆகல. நீ பலமானவள்.." என்று தைரியம் சொன்னான்.


"இல்ல.. என்னால முடியல. ரொம்ப வலியை உணருறேன். என் புண்ணிய கணக்கை எனக்கே திருப்பி கொடுங்க. இல்லன்னா இப்படியே இறந்துடுவேன்னு நினைக்கிறேன்.." அவள் சொன்னது கேட்டு அதிர்ந்தவன் சட்டென்று தன்னிடமிருந்த அவளின் புண்ணியங்களை அவளுக்கே திருப்பி‌த் தந்தான்.


அவளின் புண்ணியங்கள் அவளுக்கே சென்ற பிறகு அவனிடத்தில் சிறு பாவம்தான் மிஞ்சி இருந்தது. அவனுடையது என்று துளி கூட புண்ணியம் இல்லை. ஆனாலும் அவன் கவலைப்படவில்லை. தான் பலவீனமாக இருப்பதை காட்டிலும் தன் காதலி பலமாக இருப்பதையே விரும்பினான்.


வெகு நாட்களுக்கு பிறகு விழிகளை திறந்தான் வினீ.


அவனை மடியில் படுக்க வைத்திருந்த பூவிளந்தேவி அவனின் கன்ன கதுப்புகளில் முத்தமிட்டாள்.


"இனி நீ எப்போதும் என்னோடே இருப்ப.. இரண்டு பேரும் சேர்ந்து ரொம்ப சந்தோசமா இருப்போம்.." என்றாள்.


ஆனால் வினீ எதுவும் சொல்லவில்லை.


எழுந்து நின்றவன் "நான் போய் வெளியே சுத்திட்டு வரேன்.." என்று கிளம்பினான்.


பூவிளந்தேவி அவன் எப்போது திரும்பி வருவானென்று யோசித்து காத்திருந்தாள். ஆனால் அவனோ இரண்டு வருடங்களுக்கு வரவேயில்லை. 


மீண்டும் சயாவோடு சேர்த்து விட்டானோ என்று பயந்து அவளை தேடி ஓடினாள்.‌ சயாவோ ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தாள். கலை ஒரு பக்கம் அரை மயக்கத்தில் மயங்கி கிடந்தான்.


"என்னாச்சி‌ இவனுக்கு.?" இவ்வளவு நாளாக தந்து வந்த மரியாதையும் அந்த புண்ணியங்களோடே போய் விட்டது.


"எதுவும் ஆகல. அவரின் ஆன்மா பலமிழந்து இருக்கு.." என்றபடி விழிகளை திறந்த சயா எழுந்து நின்றாள்.


"நீ உன் புண்ணியத்தை தரலாமே.." குற்றம் சாட்டினாள் பூவிளந்தேவி.


"என் புண்ணியங்கள் எனக்கே தேவைப்படுது. அவரவருக்குன்னு புத்தி இருக்கு. அவங்கவங்க தேவைப்பட்டா பூமிக்கு போய் வாழலாம். அவங்க‌ விருப்பப்பட்ட அளவு புண்ணியங்களையும் சேர்த்துக்கலாம். நானா இவரை வேண்டாம்ன்னு சொல்றேன்.?" எனக் கேட்டவள் நின்ற வாக்கிலேயே இம்முறை தியானத்தை செய்ய ஆரம்பித்தாள்.


பூவிளந்தேவி இருவரையும் விந்தையாக பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


பூவிளந்தேவியின் காதலன் இன்னும் ஆறேழு மாதங்கள் தாண்டிய பிறகு வந்து சேர்ந்தான்.


"எங்கே போன நீ.?" பூவிளந்தேவி அவனிடம் கோபத்தோடு கேட்டாள்.


"சும்மா சுத்திப் பார்க்க.." என்றவன் அதற்கு மேல் பேசாமல் வந்து தனது படுக்கையில் விழுந்தான். பூவிளந்தேவிக்கு ஒன்றுமே புரியவில்லை.


இடைவிடாமல் உறங்கினான் வினீ. அவனின் உறக்கம் கண்டு பூவிளந்தேவிக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது. வருடம் முழுக்க உறங்கினான். பிறகு மாதக்கணக்கில் எங்கோ போய் பிரபஞ்சம் சுற்றி விட்டு வந்தான். பூவிளந்தேவியால் முன்பு போல அவனை ஆட்டி வைக்க முடியவில்லை. உறங்குவதும் பிரபஞ்சம் சுற்றுவதுமாக இருப்பவனிடம் என்னவென்று சண்டையிடுவாள்? என்னவென்று தன் கோரிக்கையை வைப்பாள்.?


சயாவோ தியானத்திலேயே நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தாள். ஆன்ம பலம் இழந்து உருவமே உருமாறிக் கொண்டிருந்தான் கலை.


"எனக்கு எனர்ஜி வேணும் சயா. பூலோகம் போய் வாழணும்.."


"போங்க கலை.." அன்பாக சொன்னாள்.


"எனக்கு ஜோடி வேணும்.." என்றவனை கண்டு நகைத்தாள்.


"அங்கே எத்தனை மானிடர்கள்? இங்கே எத்தனை ஆன்மாக்கள். நீங்க கூப்பிட்டா எத்தனையோ பேர் வருவாங்க.. போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க.." என்றாள் நக்கலை மறைத்தபடி.


"லொக் லொக்.." என்று நோயாளியாக இருமிக் கொண்டிருந்தவன் "வேறு யாரோடு இணைஞ்சாலும் என்னால என் புண்ணியத்தை சம்பாதிக்க முடியாது. அது பாவத்துலதான் வந்து முடியும்.." என்றான் கவலையாக.


"இருக்கட்டும்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.." அப்பாவியை போலவே பதிலை தந்தாள்.


"சயா.. நீ என்னை பழி வாங்குறியா.?" என்றவனை திரும்பிப் பார்த்தவள் "இல்ல இப்பதான் சரியா இருக்கேன். நீங்க போங்க. யாரோடு வேணாலும் வாழுங்க. நான் தொந்தரவு செய்ய மாட்டேன். எனக்கு தியானம் செய்யணும்.." என்றவள் கண்களை மூடினாள்.


அவளின் காலடியை பற்றியது கரங்கள் இரண்டு.


"அப்படி சொல்லாதே சயா. நான் வேறு பலரோடும் இணைஞ்சது தப்புதான்‌. இன்னைக்கு உணர்ந்துட்டேன். தயவுசெஞ்சி என்னோடு வா.. என்னோடு வாழ வா.." என்றான்.


அவன் முன் அமர்ந்தாள்.


"என்னால முடியாது கலை. பூமியில் வாழும் என் வாழ்க்கையை வழி நடத்த எனக்கு ஆன்ம நட்பு இல்ல.." என்றாள் வருத்தமாக‌. சொல்லும்போதே அழுது விட்டாள். வேரோடு பிரிந்து விட்ட பந்தம் என்றாலும் கூட அவனை மறக்க முடியவில்லை அவளால். எவ்வளவு அன்பான நண்பன். 


"ஆன்ம நட்பு எதுக்கு.? நமக்கு பிடிச்ச வாழ்க்கையை எழுதி ஆன்ம கணக்காளர்கிட்ட தரலாம். அந்த ஏட்டுல உள்ளது போல வாழ்க்கையை வாழ்ந்துட்டு வரலாம்.." என்றான்.


மனதுக்குள் சிரிப்பு பொங்கியது அவளுக்கு. எழுந்தாள்.


"சரி.." என்றுவிட்டு முன்னால் நடந்தாள்.


இருவரும் ஒரு அன்பான வாழ்க்கை வாழ்வதாக ஏட்டில் எழுதினர். கலை ஒரு அரச குடும்பத்து வாரிசாக பிறந்தான். சயா தனக்கு சாதாரண வேட்டைக்காரி வேசம் போதுமென்று எழுதினாள்.


மான் வேட்டையாட சென்று இந்த சயாவெனும் மயிலை வேட்டையாடி வந்தான் கலை. பட்டத்து மகாராணியானாள் அவள். இருவரும் சேர்ந்து பல ஆண்டுகள் வாழ்ந்தனர்.


சயா மகிழ்ச்சியை உணரவே இல்லை. முன்பு வாழ்ந்த ஜென்மங்களில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதையும் ரசிக்கவேதான் தோன்றியது அவளுக்கு. ஆனால் இம்முறை மாட மாளிகையும், கூட கோபுரமும் இருந்தும் கூட அவளால் மகிழ்ச்சியை கொஞ்சமும் கூட உணரவே முடியவில்லை.


அடிக்கடி சுணங்கி போய் படுத்துக் கொண்டாள். நாளுக்கு நூறு முறை வானம் பார்த்து கண்ணீர் வடித்தாள். காற்றில் எதையோ தேடினாள். கண்களில் தெரியும் காட்சிகளில் குறைபாடு கண்டாள்.


"சத்யதேவி உனக்கு என்னவாயிற்று.?" என்று அடிக்கடி கேட்டான் அரசன் கலை வேந்தன்.


"தெரியவில்லை வேந்தரே.. என் உயிரின் பாதி எங்கோ தொலைந்து போனது போல இருக்கிறது. என் ஜீவனின் மீதியை கை நழுவி விட்டு வந்தது போலுள்ளது. காரணமின்றி வரும் கண்ணீர் அனைத்தும் யாரோ ஒருவருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் போலிருக்கிறது.." என்று கலங்கினாள்.


"உன் ஆத்மார்த்த கணவன் நான்தான். அதை உன்னால் உணர முடியவில்லையா.?" கோபத்தை மறைத்துக் கொண்டு ஆதங்கத்தோடுக் கேட்டான்.


"என்னால உங்களின் ஜீவனில் வாழும் என்னை புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் என் வாழ்வின் பாதியை தொலைத்தது போலவே இருக்கிறது.." என்று நாற்பத்தியெட்டாவது வயதில் சொன்னவள் அப்படியே படுத்த படுக்கையானாள். எத்தனையோ நாட்டு வைத்தியரை அழைத்தான் அரசன். ஆனால் அவள் குணமாகாமல் அப்படியே இறந்தும் போனாள்.


அவளின் ஆன்மா பிரபஞ்சம் வந்தது. அனைத்து நினைவுகளும் உடனே வந்து சேர்ந்தது. அவளுக்கு வாழ்ந்த வாழ்க்கையை பிடிக்கவே இல்லை. சத்யதேவி இறந்த சில வருடங்களுக்கு பிறகு கலை வேந்தனும் இறந்தான். 


அவன் பிரபஞ்சம் வந்தபோது மீண்டும் தியானத்தில் இருந்தாள் சயா. அவனுக்கு போதுமான சக்தி கிடைத்திருக்கவில்லை. பாவங்கள் நிறைய செய்திருந்ததன் பலனாக அவனால் மீளவே முடியவில்லை. இன்னும் நூறு வாழ்க்கையாவது புண்ணியம் தேடவே நல்லவனாக பிறந்து வாழ‌ வேண்டி இருந்தது.


"ஏன் என்னால சட்டுன்னு சரியாக முடியல.." மனித வாழ்க்கையை கண்காணிக்கும் ஒரு அதிகாரியிடம் கேட்டான் கலை.


"நட்பு இல்ல உனக்கு. ஆன்ம நட்பு நம்மை‌ வழி நடத்தும்போது நாம தப்பே செஞ்சாலும் கூட அது நமக்கு பலனாகதான் சேரும். அது ஆன்ம நட்போட லாபம். ஆன்ம நட்பு நம்மை வழி‌‌ நடத்தும்போது நாம நிறைய விசயங்களை காரணமே இல்லாம செய்வோம். ஆனா அது அத்தனையும் ஒருநாள் புண்ணியமா மாறும். சுயநலம் மறந்து, நாளைக்கு இது தேவையாங்கற கேள்வி மறந்து நாம சில விசயங்களை செய்வோம். அதெல்லாம் ஆன்ம நட்பின் காரணம்தான்.. அவங்க நமக்கு‌ கடவுள் போல சில நேரங்கள்ல.." என்றான்.


கலைக்கு தாமதமாக புரிந்தது அனைத்தும். 


"நீ என்னோடு இருக்க மாட்டியா.?" வினீயின் கையை பிடித்துக் கேட்டாள் பூவிளந்தேவி.


"எனக்கு மனசு முழுக்க என்னவோ ரணம். புரிஞ்சிக்க முடியல.. எனக்கு சுத்திட்டே இருக்கதான் பிடிச்சிருக்கு.." என்றான் செத்து போன குரலில்.


"நீ சயாவோட ஞாபகத்துல அப்படி சொல்றதானே? உனக்கு இப்ப கூட அவதான் முக்கியம்.." என்றவளை குழப்பமாக பார்த்தான்.


"சயா.. என் முன்னாள் தோழி. ஆனா அவளோட ஞாபகம் எனக்கு ஏன் இருக்கணும்.?" என்றான் அவனும் அதே குழப்பத்தோடு.


இதை பற்றி அவனிடம் கேட்டதே தவறு என்று புரிந்துக் கொண்டாள் பூவிளந்தேவி.


"அப்புறம் ஏன் என்னோடு காதல் செய்ய மாட்டேங்கிற.?" தயங்கி கேட்டாள்.


"ஏன் செய்யணும்.?" என்றவன் தூரத்திலிருந்த நட்சத்திரம் ஒன்றை நோக்கி கையை காட்டினான்.


"அந்த நட்சத்திரம் மாதிரி வாழணும். யாரோட தொந்தரவும் இல்லாம.." என்று சம்பந்தமே இல்லாமல் பேசினான்.


"உனக்கு என்னை பிடிக்கலையா.?" பூவிளந்தேவியின் கவலை குரல் அவனை துளி கூட அசைக்கவில்லை. 


"பிறகேன் காதல் செய்ய மாட்டேங்கிற.?"


"இங்கே செய்யும் காதலில் ஏதாவது அர்த்தம் இருக்கா.? உனக்கு இருக்கலாம். ஆனா எனக்கு இல்ல. காதல்ன்னா அதுக்கு ஏத்த இடம் பூமிதான். அங்கேதான் ஆயிரம் வகையா காதல் செய்ய முடியும்.." என்றவன் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.


"வினீ.. வா நாம பூமிக்கு வாழ போகலாம்.." அவனை கெஞ்சலோடு‌ அழைத்தாள் பூவிளந்தேவி.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. 




Post a Comment

0 Comments