Advertisement

Responsive Advertisement

வாழ்வு 2.9

 பூவிளந்தேவியின் ஆசைக்காக என்று பூமியில் பிறப்பெடுத்தான் வினீ. 


இருவரும் காதலர்கள். இருவரும் வாழ்ந்தார்கள். இயல்பான ஒரு காதல் கதை. எங்கேயும் எந்த விதத்திலும் ஒரு குறையும் இல்லை. வினீக்கு வாழ்ந்தது போலவே இல்லை.


இருவரும் இறந்து ஆன்ம லோகம் வந்தனர்.


"பாவமும் இல்ல. புண்ணியமும் இல்ல.." என்றார் கணக்காளர்.


அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை பூவிளந்தேவிக்கு.


"அப்படின்னா நான் வாழ்ந்ததே வேஸ்டா.?" என்றாள் தாங்க முடியாத துக்கத்தோடு.


"ஆமா.. ஒரு வாழ்க்கைக்கான அதுல நெஞ்சம் தொடும் இன்பம் இருக்கணும். அப்பதான் வாழ்ந்ததா அர்த்தம். இல்லன்னா நெஞ்சை பிழியும் சோகமாவது இருக்கணும். இரண்டுமே இல்லன்னா அப்புறம் அது என்ன வாழ்க்கை. உணர்ச்சிகள் கணக்கு. இந்த வாழ்க்கையில் நீ கோபப்படல. எதுக்கும் வருத்தப்படல. எவ்வளவு மழை பொழிஞ்சும் சந்தோசப்படல.  சோகம்ன்னா என்னன்னே தெரியல. நீ வாழ்ந்தது ஒரு இயந்திர வாழ்க்கை. இயந்திரம் ஓடினாலும் ஓடாவிட்டாலும்‌ ஒரே கணக்குதான். பேட்டரி மாத்துறது மட்டும்தான் நம்ம வேலை. உனக்கும் நான் அதைதான் செய்வேன். உன் லைஃப் முடிஞ்சது.‌ நீ போய் அடுத்த லைப்பை வாழலாம். ஆனா அந்த லைப்புக்கும் அர்த்தம் இருக்காது. இப்படியே எத்தனை கோடி வாழ்க்கை வேணாலும் வாழலாம். ஆனா அது வாழ்க்கை கிடையாது. வெறும் ஓட்டம் மட்டுமே.." என்றுவிட்டு சென்றார் கணக்காளர்.


நெற்றியை தேய்த்தபடி சோகமாக அமர்ந்தாள் பூவிளந்தேவி‌.


"நான் போய் பிரபஞ்சத்தை சுத்திப் பார்த்துட்டு வரேன்.." என்றான் வினீ.


அவனின் தலை முடியை பற்றி இழுத்து தன் காலடியில் விழ வைத்தாள் பூவிளந்தேவி.


'நேத்து வரை சுகர் மம்மி மாதிரி இருந்து என்னை கொஞ்சிட்டு இருந்தா. இன்னைக்கு ராட்சசியா மாறிட்டா..' மனதுக்குள் வருந்தினான் வினீ.


"ஏன் என்னால சரியா வாழ முடியல.." சந்தேகத்தோடு கேட்டு அவனை மிரட்டினாள்.


"ஏன்னா என்ன சொல்ல.? வாழ்க்கைன்னா நீ என்னத்தை புரிஞ்சி வச்சிக்கிட்டியோ.? லைப்ன்னா வாழணும். எவ்வளவு இக்கட்டான சூழலா இருந்தாலும் அங்கே நாம அந்த தருணத்தை வாழ்ந்து கடக்கணும். நீ என்ன செஞ்ச.? பெஸ்ட் லைப்ன்னு நினைச்சி உப்பு சப்பே இல்லாத ஒரு வாழ்க்கையை எழுதின. இதுல என்ன இருக்கு.? எனக்கே சலிப்பு தட்டிடுச்சி. வாழ்க்கையில் கஷ்டம் தாங்காம கூட நிறைய முறை தற்கொலை பண்ணியிருக்கேன் நான். ஆனா போரடிச்சிச்சேன்னு தற்கொலை செய்ய நினைச்சது இந்த லைப்லதான்.." என்று கோபம் கொண்டான்.


பூவிளந்தேவிக்கு ஒன்றுமே புரியவில்லை.


"எப்படி வாழ்றது.? எனக்கு புரியல.." என்றாள்.


"முதல்ல ஒரு ஆன்ம நட்பு இருக்கணும். அவங்க நாம எப்படி வாழணும்ன்னு எழுதுவாங்க. இன்பமா இருந்தாலும் துன்பமா இருந்தாலும் ஏத்துக்க சொல்லும் மனசு.‌ அது ஒரு டிரக் மாதிரி. அது ஒரு ஆசை. இன்பம். உனக்கு அனுபவிக்காம புரியாது. நான் ஏன் உன்னை விட்டுட்டு என் தோழியோடு சுத்தினேன்னு உனக்கு புரியணும்ன்னா அதுக்கு முதல்ல உனக்கு ஒரு ஆன்ம நட்பு இருக்கணும்‌‌.." என்றவன் அங்கிருந்து எழுந்து போனான்.


பூவிளந்தேவி நிறைய யோசித்தாள். சயாவை தேடிப் போனாள். லொக் லொக்கென்று இருமிக் கொண்டுதான் இருந்தான் கலை.


"சயா.." தயக்கமாக அழைத்தாள் அவள்.


"என்ன.?" என்றாள் அவள் தன் தியானத்திலிருந்து கண்களை திறந்து.


"நீ எனக்கு ஆன்ம நட்பா இருக்க முடியுமா.? ஒப்பந்தம் போட்டுக்கலாம்.." என்றாள்.


சயா எழுந்து நின்றாள். தேவியை கலங்கும் விழிகளோடு பார்த்தாள். பிறகு தரையில் விழுந்து உருண்டு புரண்டு சிரித்தாள்.


"ஹஹஹஹா.." அவள் சிரித்த சிரிப்பு பிரபஞ்சத்தின் நிறைய இடங்களில் எதிரொலித்தது.


தேவிக்கு அவமானமாக இருந்தது.


சயா சிரித்துவிட்டு எழுந்து நின்றாள்.


"சாரி தேவி. என்னால உனக்கு மட்டுமில்ல யாருக்குமே ஆன்ம  நட்பா இருக்க முடியாது‌‌.‌." என்றாள் சோகமாக.


"ஏ.. ஏன்.?" தேவி பதறினாள்.


"ஒருவர் ஆன்மாவா உருவெடுக்கும்போதே இவங்கதான் அவங்க நட்பு, இவங்கதான் அவங்க ஜோடின்னு தீர்மானிக்கப்பட்டுடுது. எனக்கு வினீ தீர்மானிக்கப்பட்டது போல. ஆனா ஆரம்பத்துல இருந்து ஆன்ம நட்பா இருந்த அந்த நட்பே பிரிஞ்சி போயிடுச்சி. நீயெல்லாம் எம்மாத்திரம்.? எனக்கு எதுவா இருந்தாலும் நிரந்தரமா இருக்கணும். வாழ்க்கை வேணா விளையாட்டா இருக்கலாம். அங்கே போய் பொறாமை படலாம். கொலை செய்யலாம். வெறுப்பை கக்கலாம். ஏனா  அங்கே எதுவும் நிரந்தரம் இல்ல. ஆனா இங்கே அப்படி கிடையாது. இதா பிரபஞ்சம். நாம ஆன்மாக்கள். நமக்கு அழிவு கிடையாது. எத்தனை லட்சம் கோடி ஆண்டுகள் நமக்காக இருக்குன்னு யோசிச்சி பாரு. எவ்வளவு வேணாலும் வித்தியாசமா வாழ தயார் நான். ஆனா எனக்காக விதிக்கப்பட்ட ஒரு நட்பை துறந்துட்டு இன்னொரு நட்போடு பந்தம் எழுதிக்க ஆசையில்ல. தயவு செஞ்சி போயிடு. என் ஆன்ம நட்பு பந்தம் முடிஞ்சதுல ரொம்ப நொந்துப் போய் இருக்கேன். என்னால ஆன்ம வாழ்க்கையையே வாழ முடியல. ஆன்மாக்களுக்கு எந்த துயரமும் இருக்காது. ஆனா எனக்கு இருக்கு. ஏனா என் வலி அப்படி.." என்றவள் அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.


தேவி எரிச்சலோடு வெளியே வந்தாள். வேறு ஆட்களிடம் சென்று கேட்டாள்.


"எனக்கு ஆன்ம நட்பா இருக்க முடியுமா.? அப்படியிருந்து என் லைப்பை  வழி நடத்த முடியுமா.?" என்று கேட்டாள்.


"மன்னிச்சிடு தேவி. இயல்பான ஆன்ம நட்புக்களையே உன் சிறுமையால பிரிச்சி விட்டுட்ட. அப்படி இருக்கும்போது உன்னை எப்படி நாங்க நம்புறது? பிரிக்கவே முடியாததுதான் ஆன்ம நட்பு. அதுவே உன்னால பிரியும்போது டெம்ரவரியை எப்படி நம்புவது.? உனக்கு காரியம் ஆனதும் என்னை கழட்டி விட்டுடுவ. நட்புன்னா அப்படி கிடையாது. காதல் கூட கழட்டி விடும். நட்பு எப்போதும் கழட்டி விடாது. நட்பு சுயநலமில்லாதது. அப்படிப்பட்ட நட்பை உன்கிட்ட பகிர்ந்துக்க விருப்பம் இல்ல எனக்கு.." அனைவரும் ஒரே பதிலைதான் அவளுக்கு தந்தார்கள். அதன் பிறகுதான் அவள் தன் மீதும் ஏதோ தவறு உள்ளது என்பதையே புரிந்துக் கொண்டாள்.


தொடர்ந்து ஐந்து மாதங்கள் யோசித்தாள். பிறகு மீண்டும் சயாவை தேடி ஓடினாள்.


"உங்களோட முறிஞ்சிப் போன நட்பை புதுப்பிக்க வேண்டிய எல்லா வேலையையும் நான் செய்றேன். நீ எனக்கும் சேர்த்து ஆன்ம நட்பா இருக்கியா.?" எனக் கேட்டாள்.


"இரண்டு பேருக்கு நட்பா.? ஓ. தாராளமா இருக்கலாம். ஆனா என் காதலர் எனக்கு அனுமதி தர மாட்டாரு.." என்று சோகமாக சொன்னவள் கலையை பார்த்த வண்ணம் கட்டில் தேடி சென்று கவிழ்ந்துப் படுத்தாள்.


தேவி அருகில் வந்து கலையின் கழுத்தைப் பற்றினாள்.


சிரமத்தோடு அவளை தூர தள்ளி விட்டான் அவன்‌.


"நானே ஒரு நோயாளி ஜீவன். உனக்கு ஏன்ம்மா இந்த கொலைவெறி.?" எனக் கேட்டான் அழாத குறையாக.


"ஏன்னா நீயாவது எனக்கு புத்தி சொல்லி இருக்கணும். நான் செஞ்ச தப்புக்கு நீயும்தான் உடந்தை.." என்று கத்தினாள்.


மயங்கும் உடம்போடு சுவரில் சாய்ந்து அமர்ந்தவன் "அதுதான் எனக்கே தெரியுமே! எப்படி சரி பண்றதுன்னு நீயே சொல்லு.. எனக்கு பழைய பலம் வேணும். மனுசனா இருக்கும்போதாவது கொஞ்சம் பலமா இருந்தேன். இங்கே இத்து போன சொத்தை கத்தரிக்காயா மாறிட்டேன்.." என்றுக் கலக்கத்தோடு சொன்னான்.


"நீ வினீயை உன் நட்பா மாத்திக்க.. நான் இவளை மாத்திக்கிறேன். அவங்களோட பழைய நட்பை புதுப்பிச்சி தரலாம். அப்புறம் நமக்கு பிரச்சனை இருக்காது.." என்றாள் யோசனையோடு.


"நீ என்ன வேணாலும் செய்.. ஆனா என்னை மட்டும் வாழ வச்சிடு.. உன்னைதான் நட்பா கேட்க இருந்தேன் நான். ஆனா உனக்கு நட்புன்னா அதுக்கான அர்த்தம் கூட தெரியாது, என்னை போலவே. இரண்டு பேர் வாழ்க்கையும் நாசமாகிடும். அதனாலதான் உன்னை விட்டுட்டேன்.." என்றவன் ஓய்வெடுக்க சென்றான்..


அவன் சொன்னதைதான் அவளும் முதலில் யோசித்து இருந்தாள்‌. வியப்பு அதிகரித்து இருந்தது. 


பிரபஞ்சத்திலேயே ஒரு ஹிப்பி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த வினீயை பிடித்து இழுத்து வந்தவள் சயாவுடனான நட்பை புதுப்பித்து வைக்க சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தாள்.


"த்தூ.. பூமியே பரவால்ல போல.." என்று காறி துப்பிய ஒரு நீதிபதி கலையிடமும், தேவியிடமும் இருந்து அளவுக்கு அதிகமாகவே புண்ணியங்களையும், சக்திக்களையும் பெற்றுக் கொண்டு பிறகு பழைய நட்பை புதுப்பித்து தந்தனர். புதிய நட்புக்கும் ஒப்பந்தம் போட்டு தந்தனர்.


வினீயும் சயாவும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.


"என்னவாச்சி.?" எனக் கேட்டான் கலை.


"நாங்க இரண்டு பேரும் பிரபஞ்சம் வந்த பிறகு பேசிக்காம பழகிக்காம இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்.." என்றான் வினீ.


"ஏன்.?" குழப்பமாக கேட்டாள் தேவி.


"கண்ட கண்ட நாயெல்லாம் கண் வைக்குது. ச்சை.. நாங்க பேசிக்கிட்டாதானே சிலருக்கு வயிறு எரியும். நாங்க பழகினாதானே சிலருக்கு கடுப்பாகும். நாங்க இப்படியே இருந்துக்கறோம்.." என்ற சயா வாழ்வு ஏட்டிலிருந்து காகிதம் ஒன்றை கையில் எடுத்தாள்.


அவள் சொன்னது கேட்டு கலைக்கும், தேவிக்கும் முகம் கறுத்துப் போனது. முன்பு இருந்த பயம் அவர்களிடம் இல்லை. எல்லையெல்லாம் தாண்டி விட்டது.  அவர்களை யாராலும் நிறுத்த முடியாது என்ற நிலைக்கு உயர்ந்து விட்டனர். அதை மற்ற இருவராலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.


"இதுல கையெழுத்து போடுங்க.." என்று தேவியிடமும் கலையிடமும் வாழ்க்கை ஏட்டில் கையெழுத்தை வாங்கினாள். படிக்காமலேயே அவசரமாக கையெழுத்தை இட்டனர் இருவரும்.


"நானும், என் ஆன்ம நட்பு தேவியும், ஆன்ம காதலன் கலையும் சேர்ந்து வாழ்க்கையை வாழ போறோம். நீ எங்க மூனு பேரையும் மேற்பார்வை செய்.." என்று காகிதத்தை வினீயின் காலடியில் வைத்துவிட்டு மறைந்துப் போனாள் சயா. மற்ற இருவரும் அவனை கெஞ்சலாக பார்த்துவிட்டு பூமிக்கு சென்றனர்.


வினீ வாழ்க்கை ஏட்டை எடுத்தான். மேலோட்டமாக படித்தான். பல நாட்களுக்கு பிறகு இதழில் புன்னகை அரும்பியது. நெஞ்சை தொட்டான்.


'உன்னால மட்டும்தான் என் இதயத்துல இந்த அளவுக்கு மாற்றத்தை தர முடியும் சயா. நீ என் எல்லாமும்..' மனதோடு சொன்னவன் பூமிக்கு கிளம்பினான்.


சயா அழகான ஆணாக பிறந்தாள். 


கலர் குறைந்த கண்ணாடி சிலை அவன். சிலை அழகிகளை கூட சிறை செய்யும் தன் கண்களில் சீற்றத்தை கொண்டிருக்கும் சிங்க குட்டி அவன். அவன்தான் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிப் போன சிங்கார வேலன்.


அவனை காதலிக்க பெண்கள் கூட்டத்துக்கு இடையில் போட்டியே நடந்தது. ஆனால் அந்த கட்டிளங்காளையோ எந்த பெண்களிடமும் மயங்கவில்லை. மாறாக இரண்டு இளம் குமரிகளைதான் தனி தனியாக தன் காதல் வலையில் வீழ்த்திக் கொண்டிருந்தது. (த்தூ.. ப்ளே பாய்க்குதான் இம்புட்டு பில்டப்பா.? - வாசக நட்புக்களில் சிலர்) 


அவனின் முதல் காதலி கலைவாணி எனும் கச்சீஸ். இரண்டாவது காதலி விளாங்காய் போல் மேல் அழகையும், பூவின் மென்மையை போல மனதழகையும் கொண்ட விசாலி.


கச்சீஸ்க்கு விசாலி பற்றி எதுவும் தெரியாது. விசாலிக்கு கச்சீஸை பற்றி எதுவும் தெரியாது. ஏனெனில் கச்சீஸ் இருந்தது ஆஸ்திரேலியாவின் கடற்கரை ஓர ஹோட்டல் ஒன்றில். விசாலி இருந்ததோ சிங்கப்பூரின் சிறு அடுக்கு மாடி வீடு ஒன்றில்.


சிங்கப்பூரில் இருந்த விசாலியின் மாடி வீட்டின் அருகே இருந்த நிறுவனத்தை வாங்கிய சிங்கார வேலன் அருகே இருக்கும் மாடி வீடுகளையும் வாங்கி விட்டான். வந்தால் போனால் தங்கிக் கொள்ள ஆகட்டுமே என்று வாங்கியவன் விசாலியின் அழகை கண்டும், சிரித்தால் ஆயுள் குறையும் என்ற நம்பிக்கையை கைப்பிடித்து வாழ்ந்த அவளின் அறிவிலும் முழுதாக விழுந்து விட்டான். அன்றிலிருந்து அவளை விழுந்து விழுந்து காதலிக்க ஆரம்பித்து விட்டான்.


பிசினஸை விரிவுபடுத்த வேண்டி ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனத்தை கைப்பற்றியவன் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஹோட்டலுக்கும் தனது பெயரையே முத்திரை குத்தி விட்டான். ஹோட்டலில் தரை துடைக்கும் வேலை செய்த கச்சீஸ் ஈர தரையில் வழுக்கி விழ இருந்த குழந்தை ஒன்றை காப்பாற்றி விட முயன்றதில், அருகே நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கார வேலனுக்கு இரண்டாம் காதல் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தது போல பக்கென்று பற்றிக் கொண்டது.


அன்றிலிருந்து ஒரு மாதம் சிங்கப்பூரிலும், ஒரு மாதம் ஆஸ்திரேலியாவிலும் தங்க ஆரம்பித்து விட்டான் அவன்.


விஷாலிக்கு நான்கு ஆண் குழந்தைகைளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் வாரிசாக தந்தவன், தனது காதலில் எப்போதும் ஏற்ற தாழ்வு இருக்க கூடாது என்ற கொள்கையோடு கச்சீஸ்க்கு நான்கு பெண் குழந்தைகளையும், இரண்டு ஆண் குழந்தைகளையும் கொஞ்சிக் கொள்ள தந்து விட்டான்.


இரண்டு குடும்பமும் சீரும் சிறப்புமாக வளர்ந்துக் கொண்டிருந்தது. அடுத்ததாக இருவருக்கும் ஆளாக்கொரு இரட்டை குழந்தைகளை வாரிசாக தரலாம் என்று அவன் முடிவெடுத்த கணத்தில் வேலை வெட்டி இல்லாத பத்திரிக்கைகாரன் ஒருவன் இவனின் இரட்டை குடும்ப வாழ்க்கையை பற்றி மொத்த உலகுக்கும் தெரியும்படி பத்திரிக்கையில் எழுதி தள்ளி விட்டான்.


விஷாலி ஒருபுறம் அழுதாள். கச்சீஸ் ஒருபுறம் கலங்கினாள்.


இருவரையும் எகிப்துக்கு வர சொன்னான் சிங்கார வேலன். கோபத்தோடு வந்தனர் இருவரும். உயரமான ஹோட்டல் ஒன்றின் பத்தாவது மாடியில் இருந்தான் அவன். வந்தவர்கள் ஆத்திரத்தோடு அவனை நெருங்கினர்.


"எதுக்கு எனக்கு துரோகம் செஞ்ச.?" என்று அவனின் மூக்கில் குத்தினாள் விஷாலி.


"என்கிட்ட என்ன குறைன்னு வேறு ஆளை தேடின நீ.?" எனக் கேட்டு அவனின் வயிற்றில் உதைத்தாள் கச்சீஸ்.


இருவரையும் கையமர்த்தியவன் "நீங்க நினைக்கிற மாதிரி இல்ல இது. நான் உங்க இரண்டு பேரையும் கை கூட தொட்டது இல்ல.." என்றான்.


இருவரும் குழப்பத்தோடு அவனைப் பார்த்தனர்.


அருகே இருந்த அறையை கை காட்டினான். இவனை போலவே இருந்த இருவர் உள்ளிருந்து வந்தனர்.


"இவங்க என் ட்ரிப்லெட்ஸ். அது சிங்காரா வேலன். விஷாலியின் கணவன். இது சீங்கார வேலன். கச்சீஸோட காதலன். உங்களின் வாழ்க்கை அவங்கதான். உலகத்துல மூனு பேர் ஒரே மாதிரி இருப்பதை கூட புரிஞ்சிக்காம அந்த பத்திரிக்கைகாரன் நியூஸ் போட்டுட்டான். நீங்களோ அதை நம்பி என்னை அடிச்சிட்டிங்க. அவங்க என்னோடு சேர்ந்து வேலை செய்றாங்க. அதனால அவங்களால முழுசா உங்களோடு டைம் செலவு பண்ண முடியாது. அதனாலதான் ஒரு மாசம் வேலை வாங்கிட்டு ஒரு மாசம் விடுமுறை தரேன்.." என்றான்.


விஷாலியும் கச்சீஸும் புரிந்துக் கொண்டனர். தன் கணவர்களிடமும் இவனிடமும் மன்னிப்பை கேட்டு விட்டு கிளம்பி போனார்கள்.


அவர்கள் சென்ற பிறகு பெருமூச்சு வாங்கியபடி சோஃபாவில் விழுந்தான் சிங்கார வேலன்.


குளோன் போல நின்றிருந்த இருவரும்‌ முகத்திலிருந்த மாஸ்கை கழட்டி வீசினர்.


"மை காட்.. உன் பொண்டாட்டிங்க ஏன் இவ்வளவு முட்டாளா இருக்காங்க.?" என்றுக் கேட்டான் அதில் ஒருவன்.


"அவங்க முட்டாளா இருப்பதாலதான் நான் நிம்மதியா வாழ முடியுது.." என்று சொல்லி சிரித்த சிங்கார வேலன் ரூம் சர்வீஸ்க்கு போன் செய்து "டிரிங்க்ஸ் கொண்டு வாங்க.." என்றான்.


காலில் சுளுக்கு வந்தது போல பாத அடி எடுத்து வைத்து வந்து சேர்ந்தாள் மங்கை ஒருத்தி. மாங்கனி வண்ணத்தில், மச்ச கண்ணனுக்கு மட்டுமே மாட்டும் மயிலாஞ்சி போல வந்தாள் அவள்.


"மேக்கப் ஓவர். ஆனா ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு.. என் இரண்டு பொண்டாட்டிகளுக்கும் துரோகம் செய்ய கூடாதுன்னு நினைச்சேன். ஆனா நீ என் மனசை உடைச்சி, என் எண்ணத்தையும் உடைச்சிட்ட.." என்றான் சிங்கார வேலன் பானத்தை அருந்தியபடி‌.


"மது பானத்தை விட இந்த மங்கையின் இதழ் பானம் ரொம்ப ருசிக்கும்ன்னு நினைக்கிறேன்.." என்றவன் எழுந்து நின்றான். 


அவளோ சுற்றி இருந்த இருவரையும் கவனித்துவிட்டு இவனை பார்த்து கண்கள் சாய்த்து சிரித்தாள்.


"உன்னை பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு. அனேகமா நீ என் முன் ஜென்ம காதலியா இருக்கலாம்.." என்று கண்ணடித்தவனை பார்த்தபடியே கோப்பையில் இருந்த மதுபானத்தை எடுத்து தன் முகத்தில் அடித்தாள். அருகே இருந்த டவலை எடுத்து முகத்தை துடைத்தாள். 


"வி.. விஷாலி.." 


"அவன் பொண்டாட்டிதான்‌. சைனீஸ் மேக்கப் போட்டு முகத்தை மாத்திட்டு வந்திருக்கா.. வா நாம தப்பிச்சிடலாம்.." என்று ஓடினர் உடனிருந்த இருவரும்.


விஷாலி காளி வேடமிட்டவள் போல கண்களில் நெருப்பை வைத்துக் கொண்டு நின்றாள். உடனிருந்த இருவரும் வெளியே ஓடுகையில் திறந்து விட்ட அதே கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் கச்சீஸ்.


நம்ம ஹீரோ இனி கைமாதான். அதை அடுத்த அத்தியாயத்தில்

பார்க்கலாம் நட்புக்களே..



Post a Comment

0 Comments