Advertisement

Responsive Advertisement

வாழ்வு 3.0

 விஷாலியும் கச்சீஸும் போட்டு மிதித்ததில் சிங்கார வேலனின் பொழப்பு சிரிப்பாய் சிரித்துப் போனது.


இருவருமே அவனை வேண்டாமென்று சொல்லி விட்டார்கள். ஜீவனாம்சம் என்ற பெயரில் சொத்தை இரண்டாக பங்குப் போட்டு எடுத்துக் கொண்டனர் இருவரும்.


இரண்டு பெண்களின் நிழலுக்கு ஆசைப்பட்டு கடைசியில் சிங்கிளாகி விட்டது இந்த சிங்க குட்டி. பன்னிரெண்டு குழந்தைகளுக்கு தகப்பனான நம் நாயகன் கடைசியில் ஒட்டு திண்ணைக்கு கூட வழியில்லாமல் அனாதை ஆசிரம வாசலில் கிடைத்த பருக்கை சோற்றுக்கு மணி கணக்கில் தவமாக இருந்தான்.


அப்படியே வருடங்கள் ஓடியது. ஒருநாள் அந்த அனாதை ஆசிரமத்தின் கூரை இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த பல முதியவர்கள் சாக கிடந்தனர். மனம் பொறுக்காமல் எழுந்த வேலன் தன்னால் முடிந்த அளவுக்கு வயோதிகர்களை வெளியே அழைத்து வந்து உயிரை காப்பாற்றினான். வயதானவர்கள் அடுத்த ஓரிரு வாரங்களில் இறந்து போய் விட்டார்கள் என்றாலும் கூட அந்த ஓரிரு வாரங்கள் அவர் உயிர் பிழைக்க காரணம் இந்த வேலன்தான் என்று வாழ்க்கை ஏட்டில் கணக்கு சேர்ந்தது.


பல் விழுந்து பொக்கை வாயாகி ஒருநாள் இறந்துப் போனான் சிங்கார வேலன். 


ஆன்மாவிற்கான உலகத்தின் வாசலில் தயாராக காத்திருந்தான் வினீ.


அவனை 'நண்பா..' என்று அழைத்துக் கட்டிக் கொள்ள தோன்றியது அவளுக்கு. ஆனால் தனக்கு பின்னால் வந்து நின்ற இருவரின் மீதிருந்த கடுப்பில் வாயை மூடிக் கொண்டு இருந்தாள்.


"எனர்ஜி கொஞ்சமா கிடைச்ச மாதிரி இருக்கு.." என்று கலையும் தேவியும் ஒரே குரலில் சொன்னார்கள்.


'ஏன் இருக்காது.? உங்களுக்கு பீலிங்கை தரணுமேன்னு இரண்டு பேரையும் லவ் பண்ணி ஓடா தேஞ்சது நானாச்சே.!' கடுப்போடு நினைத்தாள் சயா. அவள் மனிதனாய் இருந்த பட்ட துன்பம் சொல்ல இயலாத அளவுக்கானது. (நம்பணும். நம்பினாதான் அடுத்த எபி)


"ஆனா நல்லா இருந்தது.." கலை நட்சத்திரம் ஒன்றை பார்த்தபடி சொன்னான்.


"ம். எனக்கும்.." தேவியும் பதில் தந்தாள்.


நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கண்களால் பேசிக் கொள்ளவும் செய்தனர்.


"இரண்டு பேரை லவ் பண்றது நல்லாதான் இருக்கு. ஆனா என்னவோ எனக்கு பிடிக்கவே இல்ல வினீ.." என்ற சயா வினீயின் வாழ்க்கை ஏட்டையும் அவளே எழுதி தந்தாள்.


கலையும் தேவியும் மேற்பார்வை செய்யும் அளவிற்கு திறமை பெற்றிருக்கவில்லை. அதனால் அமைதியாக பூமிக்கு வாழ சென்றனர்.


முதல் பாலே சிக்ஸர் என்பது போல மேல்நிலை பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே கலையரசியை பார்த்து காதல் கொண்டு விட்டான் வினோத்.


காதலோ காதல். காதலே வெட்கத்தில் சிரித்து வெறுமையின் பிடியில் சிக்கும் அளவிற்கு ஓவர் டோஸ் காதல். பள்ளி முழுக்க இவர்களின் காதல் காற்றுதான் மரங்களை வளர்த்துக் கொண்டிருந்தது. கல்லூரியிலும் அதேதான். நின்றாலும் கைகள் இரண்டும் இணைந்து இருக்க வேண்டும். பிரிந்து போனாலும் காதில் செல்போன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படியேதான் சென்றது பதிமூன்று ஆண்டுகளும்.


அந்த பதிமூன்று ஆண்டுகளில் இருவரும் உள்ளத்தால் இணைந்து உடலாலும் பலமுறை இணைந்து, அதன் காரணமாக உருவான குழந்தைகளை ஏழெட்டு முறை அபார்ஷன் செய்து விட்டு பெரிய வீடு ஒன்றை கட்டி, கிரகப்பிரவேசம் நடக்கும் நாளிலேயே திருமணமும் என்று தேதி குறித்தனர்.


கிரக பிரவேசமும் திருமணமும் நடந்த மறுநாளில் வீட்டின் முன் உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணியில் பாதம் வைத்து வழுக்கி விழுந்து அங்கேயே இறந்துப் போனாள் கலையரசி. அப்புறம் என்ன தேவதாசன் கதையை போல என் கதையாச்சி என்று அழுது புரண்டு, நெஞ்சில் வலியை மட்டும் சுமந்து சொந்த வீட்டையே ஜெயிலாக மாற்றி வைத்திருந்தான் வினோத்.


வாழ்வே போய் விட்டது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த வேளையில்தான் அவனுக்கு அறிமுகமானாள் பூவிளந்தேனி.


தேனி. அவனின் வீட்டு தோட்டத்தை சுத்தம் செய்ய வந்தவரின் மகள் அவள். ஒரு நாள் தன் மனைவி விட்டுச் சென்றிருந்த பூச்செடிகளை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தவன் பாடல் ஒன்றின் சத்தத்தில் திரும்பினான். மரமொன்றின் மீது ஏறி அமர்ந்தபடி 'மரங்கொத்தியே மரங்கொத்தியே' பாடலை பாடிக் கொண்டிருந்தாள் அவள்.


அவளின் கொலுசணிந்த பாதங்களில் விழுந்தானோ, அவளின் கருங்குயில் குரலில் விழுந்தானோ, இல்லை மனைவி இல்லாததால் உண்டான விரக தாபத்தில் விழுந்தானோ.‌ ஆனால் அவளை பிடித்து விட்டது.


அவள் தோட்டத்திற்கு வரும் போதெல்லாம் இவனும் சென்று தோட்டத்தில் நிற்பான். பூவிடம் பேசுவது போல ‌அவளிடம் சாடை பேசுவான். அவள் என்ன ஒன்னும் தெரியாத பாப்பாவா.? இவன் சொல்வதன் அர்த்தம் அத்தனையும் புரிந்து தனக்குள் நகைப்பாள். 


ஒருநாள் அவன் பார்த்திருக்கவே மரம் ஒன்றின் வேர் தடுக்கி கீழே விழுந்தாள். காத்து கிடந்தவன் போல உள்ளே தூக்கிச் சென்றான். காயத்திற்கு மருந்திட்டவன் அவள் இணங்கிய விதம் கண்டு தன் காமத்திற்கும் அவளை விருந்தாக்கி விட்டான்.


அடுத்த இரண்டு வாரத்தில் அந்த வீட்டின் அதிகார பூர்வ மகாராணியானாள் தேனி.  கொஞ்சல், கெஞ்சல், மிஞ்சல் என்று நிறைய இருந்தது அவர்களின் வாழ்க்கையில். ஆனால் அவர்களுக்கென்று குழந்தை இல்லை. யாரோ செய்த பாவம் என்று சொன்னான் சோசியன். அது தான் செய்த பாவம்தான் என்று புரிந்துக் கொண்டான் வினோத். அத்தனை முறை கரு கலைப்பு நடத்தியதின் பலன்தான் இன்று தனக்கு ஒரு வாரிசு இல்லை என்ற உண்மையை மனைவியிடம் சொல்லாமல் மறைத்து விட்டான்.


குழந்தை இல்லாவிட்டாலும் கூட இருவரும் நன்றாகதான் வாழ்ந்தார்கள் அந்த ஒருநாள் வரை. அலுவலகத்தில் செய்துக் கொண்டிருந்த வேலையை பாதியில் எடுத்து வைத்து விட்டு தலைவலிக்கு வீட்டில் சென்று ஓய்வெடுக்கலாம் என்று வந்தவன் வீட்டுக்குள் நுழையும் முன்பே வீட்டிலிருந்த அன்னியனின் வாசம் நுகர்ந்து விட்டான்.


காலிங்பெல்லை அழுத்தாமல், சமையல் அறையின் ஜன்னல் மேலே இருந்த செல்பை பிடித்து மேலே‌ ஏறியவன் மாடியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தான். அவனின் மனைவியும் பிளம்பர் வேலை பார்க்க வந்திருந்த இளைஞனும் அவனின் கட்டிலில் உருண்டு புரண்டுக் கொண்டிருந்தனர்‌.


வினோத்திற்கு கோபத்தில் உள்ளம் கொதித்தது. மனைவியை வெட்டி விட வேண்டும் என்று நினைத்து சமையலறைக்கு சென்று கோடாரியை தேடினான்.


ஆனால் கோடாரி அங்கே இல்லை. ஸ்டோர் ரூமிலிருந்த சிறு கோடாரியை தேடி கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்தான். ஆனால் அவர்கள் அங்கே இல்லை. 


"தேனி.." என்று கத்திக் கொண்டே தேடினான். 


தேனியின் அழுகை சத்தம் அவனின் செவியில் நுழைந்து மூளைக்குள் புகுந்து அவனை இளக செய்தது. ஆனாலும் நாக்கை பிடுங்கிக் கொள்ளும்படி நான்கு கேள்விகளையாவது கேட்டுவிட்டு அதன் பிறகு அவளை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்ற முடிவோடு அவளை தேடி ஓடினான்.


சென்றவன் திகைத்து நின்றான். சமையலறை ஜன்னல் செல்புக்கு கீழே மண்டை உடைந்து இறந்து கிடந்தான் வினோத். செல்பில் ஏறும்போதே கால் வழுக்கி விழுந்து உயிரை விட்டிருந்தான் அவன். அது கூட தெரியாமல் அவனின் ஆன்மா துரோகம் செய்த மனைவியை கொல்ல துடித்துக் கொண்டிருந்தது. 


இப்போது உண்மையை அறிந்ததும் இன்னும் இரண்டு மடங்காக உடைந்து விட்டான். இரண்டாய் விரிசல் விட்டிருந்த அவனின் இதயம் இப்போது நான்காய் விரிசலாகி விட்டது. 


இறந்தும் கூட ஆன்மலோகம் செல்லும் வழி தெரியவில்லை அவனுக்கு. அந்த வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.


அவனின் மனைவி தேனி இப்போது அந்த பிளம்பருக்கு மனைவியாகி விட்டாள். அவனை அந்த வீட்டின் மகாராஜாகவும் மாற்றி விட்டாள். இருவரும் சேர்ந்து அவன் கண் முன்பே பல்லாண்டு வாழ்ந்தனர். நான்கு குழந்தைகளை தத்தெடுத்தனர். அவர்களை நன்றாக வளர்ந்து படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து‌, பேர பிள்ளைகளை கையில் தூக்கி வளர்த்து, பொக்கை வாய் சிரிப்போடு பொதிகை டிவியில் ஒலியும் ஒளியும் பார்த்தபடியே இறந்து போனார்கள்.


தேனி இறந்த பிறகே வினோத்தின் ஆன்மாவிற்கு அந்த வீட்டிலிருந்து விடுதலை கிடைத்தது. பார்க்க வெறும் சாதாரண வாழ்க்கை போல தோன்றும். ஆனால் வினோத் அடைந்த துன்பம் என்னவென்று அவன் மட்டுமே அறிவான். (இதையும் நம்போணும். அப்பதான் அடுத்த எபி)


சயாவை தூக்கிப் போட்டு மிதிக்க தோன்றியது அவனுக்கு. 


"எனக்கு எதுக்கு இப்படியொரு லைப்பை தந்த.?" என்று அவளின் ஆன்ம சட்டையை பிடித்துக் கேட்டான்.


"காதல் தரும் வலி, அதன் ஏமாற்றம் தரும் வலி, வாழவே பிடிக்கல எனக்கு.." என்று கத்தினான்.


அவனை தூர தள்ளினாள் சயா.


"வாட் இஸ் த பிரச்சனை மனுசா.? இங்கே எல்லோருமே வித்தியாசமான வாழ்க்கையைதான் வாழுறாங்க. ஒருத்தரை போல மத்தவங்களுக்கு லைஃப் அமையறது கிடையாது. ஆனா எல்லோருமே கேட்கிற ஒரே கேள்வி, எனக்கு ஏன் இப்படியொரு லைஃப்.? இந்த கேள்வி உனக்கு சலிக்கலையா.? நீயும் பல ஜென்மம் எடுத்து பல வாழ்க்கை வாழ்ந்துட்ட. உன் வாழ்க்கையில் எப்பவெல்லாம் வெற்றியும், மகிழ்ச்சிகான காரணிகளும் அதிகமா இருக்கோன்னு  நினைக்கிறியோ அப்ப மட்டும்தான் அந்த லைப்பை அரை குறை மனசோடு ஏத்துக்கற. மத்த டைம்ல ங்கொய்யாலே வாழ்ந்துக்கிட்டே வாழ்க்கை பிடிக்கலன்னு என்னை பிடிச்சி கத்துற.. நீ லூசா.? மகனே சொல்லுடா.. நீ என்ன லூசாடா.?" என்றுக் கேட்டாள். அவனின் மூக்கில் ஒரு குத்து விட்டாள்.


மூக்கை தேய்த்தபடி இரண்டடி தள்ளி நின்றான் வினீ.


"வாழ்ந்து முடிச்ச ஈரம் இன்னும் காயல. அதனால அப்படிதான் பேசுவேன். அதுக்குள்ள மூக்கை உடைச்சி‌ விடுற. பக்கி.." திட்டினான் அவன்.


காதலனோடு சேர்த்து வாழாத சோகத்தில் கலையும், அறிவில்லாமல் சில நொடி காமத்திற்காக கணவனுக்கு துரோகம் செய்து விட்டோமே என்ற சோகத்தில் தேவியும் மூழ்கி கிடந்தனர். 


அவர்களை பார்த்து கொடூர சிரிப்பு சிரிக்க தோன்றியது இருவருக்கும். புதிதாக வாழ்ந்தால் அப்படிதான். அடுத்த வாழ்க்கை வரையிலும் இந்த சோகம் அவர்களை தாக்கும் என்று தெரியும் அவர்களுக்கு.


வினீயும் சயாவும் வெகு நாட்களுக்கு பிறகு தனியாக பேசினர்.


"இனி என்ன செய்யலாம்.?" எனக் கேட்டான் வினீ.


"இவங்களை வச்சி செய்யலாம்.." என்றான்.


"எப்படி.?" சயா பூலோக குளிர்பானம் ஒன்றில் ஸ்ட்ராவை போட்டு உறிஞ்சியபடி கேட்டாள்.


"சிம்பில். இவங்க போய் வாழட்டும். ஆனா இவங்களோட ஒவ்வொரு வாழ்க்கையும் நம்ம கையில். அவங்க நினைச்ச மாதிரி அவங்களால வாழ முடியாது. நாம நினைச்ச மாதிரிதான் அவங்க வாழணும்.." என்றான் அவளிடமிருந்து குளிர்பானத்தை வாங்கி முழுதாக விழுங்கியபடி.


இவர்களை போலவே கலையும் தேவியும் ஒரு புறம் நின்று பேசினர்.


"இவங்க நம்மை ரொம்ப கொடுமை பண்றாங்க. சரியா.?" சந்தேகத்தோடு கேட்டாள் சயா.


"ஆமா. இவங்ககிட்டயிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு.." என்றான் கலை கொஞ்சமாக இருமியபடி.


"என்ன.?" 


"என்ஜாயிங்.!!" 


"புரியல.."


"எது நடந்தாலும் என்ஜாய் பண்ணிட்டு போகலாம். இதுதான் நடக்குதுன்னு முடிவாகிடுச்சி. நம் கட்டுப்பாட்டுல நடக்கும் எல்லாத்தையும் நம்மால மாத்த முடியும். ஆனா நம்ம கட்டுப்பாட்டை தாண்டி நடக்கும் எந்த விசயத்தையும் நம்மால மாத்த முடியாது. அதுக்கு ஒரே வழி பீல் பண்ணாம இருப்பதுதான். நாம பீல் பண்ணும்போது நம்மோட சுய சிந்தனையில் ஓட்டை விழுகுது. அப்புறம் நாம நம்ம வாழ்க்கையை உணராம போயிடுறோம். நிலா உடைஞ்சி பூமி மேல விழுகுதுன்னு வச்சிப்போம். நாம சயின்டிஸ்ட் கிடையாது. விண்வெளி ஆராய்ச்சியாளரும் கிடையாதுங்கற சூழ்நிலையில் நாம பீல் பண்ணா மட்டும் என்ன மாறிட போகுது. ஒன்னும் இல்ல. அதுக்கு பதிலா நிலா பூமியை தொடும் முன்னாடி ஒரு கப் டீ குடிச்சா கூட செமையா இருக்கும்.." என்றான்.


தேவி தோள்களை குலுக்கினாள்.


பிறகு மீண்டும் பிறந்தார்கள். மீண்டும் வாழ்ந்தார்கள். மீண்டும் இறந்தார்கள். மீண்டும் ஒரு கதையை எழுதினார்கள். இப்படியே சென்றுக் கொண்டிருந்த வாழ்வில் குறுக்கு கல்லாக வந்தது தேவி, கலையின் மெச்சூரிட்டி. ஆம். அவர்களும் வாழ்வை வழி நடத்துவதில் திறமை பெற்று விட்டார்கள்.


சயாவும், வினீயும், கலையும் ஒரு முறை பிறந்தார்கள். சயாவும் கலையும் விழுந்து விழுந்து காதலித்துக் கொண்டிருந்தார்கள். அவங்க காதலுக்கு வினீ எப்படி வில்லன் ஆனான்னு அடுத்த எபியில் சொல்றேன்.


நான் இந்த எபியோடு கதையை முடிக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா நீளுதுப்பா. அவங்க வாழ்க்கையை என்ஜாய் பண்ணும்போது நான் இந்த கதையை என்ஜாய் பண்ண கூடாதா.?😁



Post a Comment

0 Comments