Advertisement

Responsive Advertisement

வாழ்வு 3.1

 சத்யாவும் கலை செல்வனும் கல்லூரியில்தான் காதலிக்க ஆரம்பித்தார்கள். சத்யாவின் உயிர் தோழனாக இருந்தான் வித்யாசாகர்.


சத்யாவும் கலைசெல்வனும் காதலிப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த பாய் பெஸ்டியை கலைசெல்வனுக்கும் பிடிக்காது. 


சத்யா இருதலைக் கொள்ளியாக காதலனுக்கும் நண்பனுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழித்தாள்.


கலையும் சத்யாவும் வெளியே செல்ல திட்டமிட்டால் முதல் நாளே கலையின் பைக்கில் காற்றை பிடுங்கி விட்டு விடுவான் வித்யாசாகர்.


வித்யாசாகர் அவசர வேலையாக கிளம்பிக் கொண்டிருந்தால் அந்த நேரத்தில் அவனை வம்பிழுத்து தாமதப்படுத்துவான் கலை. சத்யா தங்களோடுதான் பேச வேண்டும், பழக வேண்டும் என்று இருவருக்கும் இடையில் தினமும் போட்டிதான் நடக்கும்.


"கலையோட கேரக்டர் ரொம்ப மோசமா இருக்கு சத்யா. நீ அவனை பிரியறதுதான் நல்லது.." என்றான் நண்பன்.


"ஆனா எனக்கு அவனை பிடிச்சிருக்கே.." குழந்தையை போல சொன்னாள்.


"அவன் கேரக்டர் சரியில்ல.." 


ஆனால் அவள்தான் நம்பவில்லை.


"நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் நான் உன்னோடு பேசவே மாட்டேன்.." அவன் விளையாடுகிறான் என்று நினைத்தாள் அவள்.


சத்யாவின் திருமணத்திற்கு வித்யாசாகர் வரவேயில்லை. நண்பனின் பேச்சை மீறி இவனை திருமணம் செய்து கொண்டோமே என்று இவளுக்குள் குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது.


திருமண வாழ்க்கை நன்றாகத்தான் சென்றது. ஆனால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் கணக்காக தொண்ணூறாவது நாளில் கலையின் போனில் கள்ள காதலியின் செய்தியை பார்த்து விட்டாள் சத்யா.


"உங்களுக்கு எத்தனை நாளா இந்த பழக்கம்.?" போனை அவனிடம் காட்டி சண்டை போட்டாள்.


"நான் அப்படிப்பட்டவன் கிடையாது. இது பொய்‌‌. நடுவுல ஏதோ தில்லுமுல்லு நடக்குது.." என்றான் அவன் குழப்பத்தோடு.


ஆனால் மறுநாளே அவனின் காதலி என்றுச் சொல்லிக் கொண்டு ஒருத்தி வீட்டிற்கு வந்தாள். அவளை யாரென்று கூட தெரியாது என்று சத்தியம் செய்தான் கலை. ஆனால் சத்யா நம்பவில்லை.


வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் சத்யா. அதற்காகவே காத்திருந்தது போல வந்து சேர்ந்தான் வித்யாசாகர்.


"அவனை நம்பாதன்னு‌ சொன்னேன். நீ எங்கே கேட்ட.?" என்று சமாதானம் செய்தவன் அடுத்த வருடத்திலேயே தனக்கு தெரிந்த நல்ல பையனுக்கு (அவனின் நட்பில் எந்த விதத்திலும் குறுக்கீடு செய்யாத ஒருவனுக்கு) அவளை திருமணம் செய்து வைத்தான்.


அந்த ஜென்மம் முடியும் வரையிலும் அனைவருமே நன்றாகத்தான் வாழ்ந்தார்கள், கலையை‌‌ தவிர. அவனின் காதலி என்று சொல்லிக் கொண்டு வந்தவள் தான் வந்த வேலை முடிந்ததும் நடிப்புக்கான பணத்தை வித்யாசாகரிடம் வாங்கி விட்டு பறந்துப் போய் விட்டாள். அவன் காலம் முழுக்க தன் மனைவியின் நினைவில், தன்னை நம்பாமல் போய் விட்டாளே என்ற கவலையிலேயே காலத்தை கடத்தினான். அப்படியே நாளும் சென்றது. காலமும் முடிந்தது. மூவரும் இறந்துப் போயினர்.


கலை ஆன்மலோகம் வந்ததும் நெற்றியில் அடித்துக் கொண்டான்.


"இதுக்காகதான் நான் இவங்க சேரவே கூடாதுன்னு நினைச்சேன்.." என்று புலம்பினான்.


சயாவுக்கு கோபம் வந்தது. அவனை முறைத்தாள். "இப்ப எங்களை ஆட்சி செய்தது நாங்களா.? இல்ல தேவியா.?" எனக் கேட்டாள்.


கலைக்கு அனைத்தும் தெரியும். தங்களுக்கு இப்படிதான் லைஃப் வேண்டும் என்று எழுதி தந்து சென்றவர்கள் அவர்கள்.  நான்கு பேரில் யார் ஒருவர் வேண்டுமானாலும் மற்ற மூவரின் வாழ்க்கையை வழி நடத்தலாம் என்று ஆன்மலோகத்தில் கட்டளையை விதித்தவர்களும் அவர்கள். இவர்களின் வாழ்க்கை ஏட்டில் தன்னால் முடிந்த அளவுக்கு தேவியும் விளையாட முயன்றிருப்பாள் என்று அறிவான்.


தேவியை தேடி ஓடியவன் "ஏன் உன்னால அவங்களை மாத்த முடியல.." என்றுக் கேட்டான்.


முடிந்துப் போன் வாழ்க்கை ஏட்டை நீட்டினாள் அவள். குழப்பத்தோடு வாங்கி படித்தான்.


இவனை பல முறை பல விதத்தில் ஏமாற்ற திட்டம் போட்டிருந்தான் வினீ. 


"வாட் இஸ் திஸ் நான்செஸ்.?" என்றான் கோபமாக.


"உனக்கு மன அழுத்தம் அளவுக்கு அதிகமா தந்து பிறகு உன்னை தற்கொலை செய்ய வச்சி உன்னோட வாழ்க்கையை பலமுறை வாழ வச்சி உன்னை சிக்கல் வட்டத்துக்குள்ள சிக்க வைக்க இருந்தாங்க.. நான் உன்னை காப்பாத்தியதுலேயே நிறைய நேரம் போயிடுச்சி.."  என்றாள் வருத்தமாக.


"அவங்களை பிரிச்சி வைக்கணும்.. அப்பதான் நாம நிம்மதியா வாழ முடியும்.. இந்த முறை அவனே வாழ்க்கையை மேற்பார்வை செய்யட்டும்.."


"ஐயோ அப்புறம் அவன் உன்னையும் என்னையும் கொலையா கொல்லுவான். செத்தும் நரகம் போல வாழ்ந்தும் கொடுமை அவன் மேற்பார்வையில்.." என்று அலறினாள் தேவி.


"சொந்த காதலனை பார்த்து இவ்வளவு பயப்படுவேன்னு நினைச்சதே இல்ல.." என்றாள் வருத்தமாக.


"அவங்க நம்மை பழி வாங்குறாங்கன்னு நினைக்கிறேன்.." என்றவனிடம் ஆமென்று தலையசைத்தவள் "ஆனா எனக்கு இது விளையாட்டு போலவும் தெரியுது.." என்றாள்.


யோசித்தவன் நகைத்தான்.


"ரொம்ப சின்ன பசங்க.." சிரித்தபடியே‌ அருகே இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.


"அவங்களை என்ன செய்யலாம்.?" தாடையை தட்டியபடி கேட்டாள் தேவி.


பெருமூச்சு விட்டவன் "ஒரே வழிதான். விளையாட்டுக்கு விளையாட்டு மூலம்தான் பதிலடி தர முடியும்.." என்றான்.


தேவிக்கும் புரிந்தது. சரியென்று தலையசைத்தாள்.


"என்ன நடந்தாலும் சரி.. இவங்களை படுத்தி எடுக்காம விட கூடாது.." என்ற வினீ சயாவும், "அவங்க என்ன படுத்தினாலும் நாம தளர கூடாது.." என்று முடிவெடுத்த தேவி கலையும் அடுத்த பிறவி எடுக்க கிளம்பினர்.


வாழ்வேட்டின் அதிகாரி நகைத்தார்.


"என்ன.?" எனக் கேட்டான் அருகில் இருந்தவன்.


"இவங்களுக்கு இதேதான் வேலை பிழைப்பு.." என்றார்.


"புரியல.." என்றவனை கண்கள் சிரிக்க பார்த்தவர் "பூமிக்கு வாழ போற யாருக்கும் இது வெறும் நூறு மைனஸ் வருச விளையாட்டுன்னு தெரியாது. வர கஷ்டமெல்லாம் அவங்களோட அனுபவத்துக்காகன்னு தெரியாது. ஒருமுறை தற்கொலை செஞ்சா மீண்டும் அதே வாழ்க்கையை வட்டம் சுத்தி பல நூறு முறை வாழணும்ன்னு தெரியாது. அவங்களோட வாழ்க்கையை பலருக்கும் அவங்க நினைச்ச மாதிரி வாழ்க்கையையே மாத்தி அமைக்க முடியும். அதுக்குதான் ஆன்ம நட்புன்னே ஒருத்தங்க இருக்காங்கன்னும் தெரியாது. வாழ்க்கையை வாழ்ந்து முடிச்ச பிறகு இங்கே வந்து வாழ்க்கையா இதுன்னு அழுவாங்க.. அவங்களோட வாழ்க்கை விளையாட்டா இருப்பதை விடவும் அந்த விளையாட்டை நாம பார்த்து சிரிக்கறோம்ங்கறதுதான் இருக்கிறதுலேயே செம காமெடி.." என்றார். "சரி சரி.. வா வந்து இந்த கதையை படிக்கறவங்களோட வாழ்க்கை ஏட்டையும் கொஞ்சம் எடு. அதுல எவ்வளவு யாரோட விளையாட்டு இருக்குன்னு பார்ப்போம்.." என்றார்.


அருகில் இருந்தவன் விழிகளை விரித்தான்.


"ஏன்டா.?"


"அவங்க வாழ்க்கை ஏட்டைதான் கையில் வச்சிருக்கிங்க.." என்றவனை குழப்பத்தோடு பார்த்தவர் ஏட்டை பார்த்தார். வினீ சயா கலை தேவி என்று நால்வரின் இறந்தகால எதிர்கால வாழ்க்கை ஏடும் இருந்தது‌.


"இதுல யாரு இந்த கதையை படிக்கறது.?" குழப்பத்தோடு கேட்டார்.


அருகில் இருந்தவன் சிரித்தான்.


"படிக்கற அவங்களுக்கு தெரியல. பார்த்துட்டு இருக்கும் உங்களுக்கு தெரியல. சும்மா இருக்கும் எனக்கு எப்படி தெரியும்.?" எனக் கேட்டான் நகைப்போடு.


"சரி சரி விடு.. வாழ்ந்து முடிச்சிட்டு எப்படியும் இங்கேதானே வருவாங்க.. அப்ப பார்த்துக்கலாம்..‌" என்றவர் எழுந்து நடந்தார். 


"இப்ப யார் இதை படிக்கறதுன்னும் தெரியல. நாலு பேர்ல யாரு அவங்களுக்கு மேற்பார்வைன்னும் தெரியல.." என்று உளறினார். அருகில் இருந்தவன் சிரிப்போடு அவரை பார்த்தான். ‌


"அவங்க என்னவோ பண்ணி முடிச்சிட்டு வரட்டும்.." என்று முனகியபடியே அவரோடு நடந்தான்.


முற்றும்..


கதையை பற்றிய உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..



Post a Comment

0 Comments