Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 1

 (தன்னிலையில் நின்று எழுதுறேன் நட்புக்களே. கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் படி அன்போடு கேட்டுக்கறேன்.) (இது இந்த கதையின் கதாபாத்திரத்திரங்களின் எண்ண ஓட்டமே தவிர என்னோடது இல்ல. ஏனா எங்க வீட்டிலும் எக்ஸ்ட்ரா அரிசி இருக்கு மக்களே.✌️) (கதையை நான் சாயங்காலத்துல அப்டேட் பண்ண காரணம் இந்த கதை காலை நேரத்திலேயே உங்க மனசை வாட வச்சிட கூடாதுன்னுதான். காலையில சோகமா இருந்தா அந்த நாள் முழுக்க சோகத்தை உணரும் மனசு. உங்களோட ஒவ்வொரு நாளும் சிரிப்பும் புன்னகையுமா ஆரம்பிக்கணும்தான் நானும் ஆசைப்படுறேன். அதனால வெளிநாட்டு நட்புள்ளங்களும் கூட கதையை ஈவினிங் டைம்லயே படிங்க.)


ரியல்👇





ரீல் 👇


புவினின் point of view


நீங்க யாராவது தாங்க முடியாத பசியோடு இருந்திருக்கிங்களா.? ஒரு நேரம். ஒரு நாள்.. விரதமென்ற பெயர் நீங்கள் பசியென்றால் என்னவென்று அறிவதற்காக பெரியோர்களால் உண்டாக்கப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அதற்கே வயிற்றை பிடித்துக் கொண்டு கவிழ்ந்து படுத்திருப்பீர்கள் அல்லவா.? இல்லையேல் கவிழ்ந்த தலையோடு சோர்ந்து அமர்ந்திருப்பீர். சூடான பாலும் குளிர்விக்கப்பட்ட பழரசமும் உங்களின் பசியை பாதியாய்யேனும் குறைக்க வரிசை கட்டி காத்திருக்கும் அல்லவா‌.? கடவுளின் பெயர் சொல்லி குறைந்தப்பட்சம் இரு வேளை பட்டினி கிடந்திருப்பீர்கள். ஆனால் எட்டு வயது குழந்தையாக பசியை அறிய கூடாத அந்த வயதில் நான்கு நாட்கள் பட்டினியாக இருந்திருப்பீர்களா.? 


பசியும் பட்டினியும் உங்களை பொறுத்தவரை சாதாரண வார்த்தை. ஆனால் எனக்கு அது வாழ்க்கை. எத்தனை வீடுகளில் கையேந்தியிருப்பேன் ஒரு வேளை உணவுக்காக. எத்தனை பேரிடம் கண்ணீர் மல்க கெஞ்சியிருப்பேன்.. இது எதையும் இந்த உலகம் அறியாது. பணத்தையும் பகட்டையும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் காலடியில் நின்று கெஞ்சிக் கொண்டிருக்கும் எங்களை போன்றோரின் பசியை பற்றி அறியாது. 


பரபரப்பாக நீங்கள் ஓடிக் கொண்டிருக்கும் அதே சாலையின் ஒரு ஓரத்தில் நின்றுதான் கையேந்திக் கொண்டிருந்தேன் நானும். என் ஐந்து வயது தம்பியோ என் அருகில் நின்று கதறும் தன் வயிற்றை கையால் பிடித்துக் கொண்டிருந்தான். 


சீறி பாய்ந்த வாகனங்கள் எங்களுக்காக தங்களின் வேகத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. வேடிக்கை பார்த்தாலும் பாவமென்றெண்ணி பலர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றார்கள். வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு வாரங்களின்‌ ஓட்டத்தின் பிறகான ஒரு நாளிலோ ஒரு இளைஞனோ அல்லது தாய்மாரோ பார்லேஜியின் பாக்கெட் ஒன்றையோ அல்லது மூன்று இட்லிகளால் நிரம்பிய உணவு பொட்டலத்தையோ தந்து செல்வார்கள்.


சில நாட்களுக்கு முன்பு குப்பைத்தொட்டியில் கிடந்த பழைய தோசையை எடுக்கையில் அது சுருட்டப்பட்டிருந்த செய்தி தாளில் ஒரு மனித நேயர் என்னை போன்ற சிறுவன் ஒருவனை தத்தெடுத்துக் கொள்வது போன்ற புகைப்படம் ஒன்றை பார்த்தேன். அந்த மனிதர் எங்கே இருப்பார் என்று சில நாட்களாகவே யோசனை. 


புகைப்படத்திற்காகவோ அல்லது மன திருப்திக்காகவோ அனாதைகளின் பசியை தினந்தோறும் தீர்க்கும் வள்ளல்கள் இந்த யுகத்திலும் வாழ்வதாக என்னோடு ரோட்டோர மேடையில் வசித்த சில கிழவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த வள்ளல்கள் கண்களில் ஏன் நாங்கள் மட்டும் தென்படவில்லை என்று இல்லாத கடவுள்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன் நான்.


எனக்கு கடவுள் பக்தி இல்லை. ஏனெனில் என் உலகில் கடவுளே இல்லை. 


நான் வளர்ந்து விட்டு ஒருநாளில் உடன் இருந்த இளைஞன் சொன்னான் 'அனாதைகளின் பசி தீர்க்கும் வள்ளல்களை விட அனாதைகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் அதனால்தான் அந்த வள்ளல்கள் தந்த பருக்கைகள் எதுவும் எங்களின் கை வந்து சேரவில்லை..' என்றும்‌.


நியாயங்களை பேசும் உலகில் சொல்வீர் நீங்கள்.. அவனவன் வயிற்று பாட்டை பார்க்கவே உழைப்பும் நேரமும் போதவில்லை என்று. 


வாகன விபத்தொன்றில் இறந்து போன தாய் தந்தையரால் ஒரே நாளில் அனாதையானோம் நானும் என் தம்பியும். பேராசை கொண்ட உறவினர்கள் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு நாங்கள் காரணமா.? விதியென்று பெயர் சூட்டும் மதியற்ற மூடர்களே நீங்கள் இன்று நாகரீகத்தை கொண்டாடாமல் விட்டிருந்தால் இன்று நாங்கள் பசியோடு இருந்திருக்க மாட்டோம். 


இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது என்று கதறும் மக்களே. இதே உலகில் உள்ள ஒரு மரத்தின் கனியை என்னால் பறித்து உண்ண முடியுமா.? இந்த நாகரீகமெனும் சாபம் மக்களை தொடாமல் இருந்திருந்தால் நானும் என் தம்பியும் ஏதோ ஒரு வனத்தில் உயரமாக வளர்ந்திருந்த பல மரங்களின் கனிகளையும் சுதந்திரமாக உண்டிருப்போம். சிங்கம் புலியிடம் இருந்து பாதுகாக்க நகரங்களை உருவாக்கினீர்கள் நீங்கள். சிங்கம் புலிகளை விட கொடூரமாக எங்களை கொல்கிறது பசி. பாதுகாப்பு நிழலில் நின்றுக் கொண்டு அடுத்த சில ஆண்டுகளுக்கான அரிசிகளை சேமித்து வைத்திருக்கும் உங்களுக்கு ஒருபோதும் புரியாது ஒரு பருக்கை கூட கிடைக்காமல் சுற்றி அலைந்த என் போன்றோரின் வலி.


அனாதை இல்லங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றில் இடம் போதாத அளவிற்கு நிரம்பிக் கொண்டிருந்தது எங்களை போன்றோரின் எண்ணிக்கையும். புதிதாக திறக்கப்பட்ட ஒரு அனாதை இல்லத்திற்காக அனாதை குழந்தைகளை தேடி அலையும் மானுடர் கண்களில் நாங்கள் கிடைக்காமல் போனதற்கு யார் மீது பழி போடுவது என்று தெரியவில்லை.


நாங்கள் பாசம் கேட்கவில்லை. பசி போக உணவு கேட்டோம். திரும்பி பார்க்க ஆள் இல்லை. என்னையும் என் தம்பியையும் பாதுகாக்கும் ஜீவன்கள் எங்களை தேடி கண்டுபிடிக்கும் முன்பு எங்களின் பசி தீர்க்க வந்தவர்தான் தங்சேயா. 


தங்சேயா எந்த நாட்டையும் சேர்ந்தவர் அல்ல. எங்களை போன்று பசியை அனுபவித்தவர். ஏதோ ஒரு நாட்டின் அரசியல் போரால் சொந்தங்களை இழந்தவர். அவரின் கோபம் இந்த உலகத்தின் மீது. அவரின் கோபம் சுயநல மனிதர் மீது. 


எப்போது ஒருவன் அடுத்த வேளைக்காக என்று உணவை சேமிக்க ஆரம்பித்தானோ அன்றே அதே உலகில் வாழும் மற்றொரு மனிதனின் பசி உறுதி செய்யப்பட்டதாக சொல்வார் அவர். 


நான் தங்சேயாவின் சீடன். இதை சொல்லிக் கொள்ள வருத்தப்படவில்லை நான். நாடுகள் பலவும் தேடும் தீவிரவாதி தங்சேயா. அவரின் நிழலில் வாழும் கூட்டத்தில் நானும் ஒருவன்.


எங்களுக்கு இந்த உலகத்தை பிடித்திருந்தது. ஆனால் மானிடம் இறந்து போன மக்களைதான் பிடிக்கவில்லை. 


நாடுகள் ஒன்றையொன்று அழித்துக் கொள்ள எங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் அந்த பணியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருந்தோம். 


நாங்கள் எந்த நாட்டையும் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் எங்களிடம் அனைத்து நாட்டு பண தாள்களும் குவிந்து போயுள்ளது. அனைத்து நாட்டு உயர் ரக ஆயுதங்களும் எங்களைதான் முதலில் வந்து சேரும். 


மாற்றான் ஒருவனை அழிக்க நினைக்கும் ஒவ்வொருவனும் தன்னை அழித்துக் கொள்ள எடுத்து வைக்கும் முதல் அடி அது என்பதை அறியவில்லை. 


உங்களின் ஒற்றுமையில்லா மனபான்மை எங்களுக்கு உதவியாக இருந்தது. எங்களுக்கு தேவை உலக நாடுகளின் அழிவு. அதற்கு முதல் விதையை நீங்களே விதைக்கிறீர்கள். நீங்களே அதற்கு தண்ணீரையும் ஊற்றுகிறீர்கள். அறுவடை மட்டுமே நாங்கள் செய்கிறோம். பழியை முழுமையாக சுமத்துங்கள். சந்தோசமாக ஏற்கிறோம். எங்களுக்கு தேவை உங்கள் அழிவுதானே தவிர பாராட்டு அல்ல.


நான் பிறந்த நாட்டை அழிக்க சொல்லி பணத்தை குவித்து விட்டு சென்றது ஒரு தேசம். இவ்வளவு பணத்திற்கு அவன் அவர்கள் நாட்டு அனாதைகளின் பசியையும் ஏழைகளின் பசியையும் தீர்த்திருக்கலாம். ஆனால் அவன் செய்யவில்லை. ஏனெனில் அவனுக்கு தன் மக்களின் நலனை விட மற்ற நாட்டு மக்களின் மரணம்தான் முக்கியம்.


விமானத்தில் ஏறி அமர்ந்து சில மணித்துளிகளுக்கு பிறகு மங்கை ஒருத்தி குளிர்பானத்தை நீட்டினாள். ஒவ்வொரு டம்ளர் தண்ணீரை குடிக்கையிலும் கூட எனக்கு என் பசிதான் நினைவுக்கு வரும். 


"வெற்றி பெற்று வா அண்ணா.." என்று வழியனுப்பி வைத்த தம்பியின் முகம் நினைவில் வந்து போனது. அவனது ஒரு வேளை பசி தீர்க்க நான் ஏறி அலைந்த கடைகளும் வீடுகளும் எத்தனை எத்தனை.? கோவில்களின் வாசல்படி ஏற அனுமதி இல்லாத எங்களுக்கு ஆண்டவனுக்கென்று செலுத்திய அன்னதானம் கூட கை சேரவில்லை.


அன்னசத்திரத்தையே உலகிற்கு அறிமுகப்படுத்தியவன் என் மூத்தோன் என்று பல முறை கேள்வி பட்டுள்ளேன். அவனின் வாரிசுகள் வாழும் அதே நாட்டில்தான் உணவில்லாமல் வாடும் குழந்தைகளும் உள்ளன என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு என்று எப்படி விளக்குவது.?


நான் பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது தூரத்தில் ஒரு பிச்சைக்காரன் சென்றுக் கொண்டிருந்தான். 


அவனை வெறித்துக் கொண்டு நின்றிருந்த நேரத்தில் கார் ஒன்று அருகில் வந்தது. 


"போகலாமா சார்.?" என்றான் டிரைவர்.


கையிலிருந்த பேக்கை பின் சீட்டில் வீசிவிட்டு முன்னால் ஏறி அமர்ந்தேன். கார் புறப்பட்டது. 


நான் இந்த நாட்டை விட்டு வெளியேறி பதினேழு வருடங்களுக்கு மேலாகி விட்டது. வெயில் சற்று அதிகம் உறைத்தது போல இருந்தது.


இந்த பதினேழு வருடத்தில்தான் எத்தனை மாற்றங்கள்.? நான் தங்சேயாவின் அடிமை. நீங்கள் சாதி மதம் இனம் என்று கொண்டாடுவீர்கள். நான் என் பசி போக்கும் மனிதனை கடவுளாய் எண்ணினேன். ஒரு மாத சம்பளம் தரும் முதலாளிக்கு நீங்கள் விசுவாசமாக இருக்கும்போது எனது பசியை தீர்த்து வைத்த தங்சேயாவிற்கு நான் எவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும்.? அவன் சொன்னதை கண்ணை மூடிக் கொண்டு செய்வேன் நான். தங்சேயாவிற்காக இதுவரை பதினேழு நாடுகளில் உள்நாட்டு போரை உருவாக்கி உள்ள என் கூட்டம் அவன் சொன்னால் மொத்த உலகத்தையுமே கூட மோத விடும்.


சத்தியமாக எங்களின் பசிக்காக இந்த போர் அல்ல. உங்களின் பேராசைக்காகவே இந்த போர். மற்ற நாடுகளின் மீது நீங்கள் கொண்டுள்ள தூவேசம் காரணமாகவே இந்த போர்.


காரின் கண்ணாடி வழியே வெளியே வெறித்துக் கொண்டு வந்தேன். சாலையின் ஓரத்தில் சிறிய கட்டிடம் ஒன்றில் பூக்கடை ஒன்று இருந்தது. கார் அந்த கடையை கடக்கும்போது அந்த பூக்கடையில் நின்றிருந்த பெண்ணை பார்த்தேன். புன்னகையோடு தன் எதிரே இருந்த பெண்ணிடம் பூங்கொத்தை நீட்டிக் கொண்டிருந்தாள்.


எனக்கு அவளின் புன்னகை வேண்டும். அவளின் முகத்தில் இருந்தது போலவே மகிழ்ச்சி வேண்டும். பூக்களை பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்காது. எனக்கு பிணங்கள் வேண்டும். மக்களின் அழுக்குரல் வேண்டும். பல வித மொழிகளில் பல்லாயிர கணக்கான மக்கள் கதறி விட்டனர். ஆனாலும் மனம் நிறையவில்லை. என் பசியின் முன்னால் அது எதுவும் பெரியதாக  தெரியவில்லை. 


ஹோட்டல் ஒன்றின் முன்னால் வந்து நின்றது கார். இறங்கினேன். எனது பயண பையை எடுத்துக் கொண்டேன். வாசலில் எனக்காக காத்திருந்த ஒரு கிழவன் கை நீட்டினான். பற்றி குலுக்கினேன். புன்னகைத்தான். எனக்கு இந்த ஒரு சந்தேகம் மட்டும் தீரவேயில்லை. அவன் நாட்டு மக்களைதான் நான் கொல்ல வந்துள்ளேன். அதில் அவனின் ரத்த சொந்தங்கள் செத்து போக நூறு சதவீத வாய்ப்பு உள்ளது. ஆனாலும் என்னை முழு மனதோடு வரவேற்கிறான். காரணம் என்னை போன்ற பசியா.? இல்லை. பணம் என்னும் பேயிற்க்கு தங்களை தாரை வார்த்து தந்த பிசாசுகள் இவை.


சாதி பற்று, மத பற்று, இன பற்று எல்லோரிடமும் இல்லை. நான் நிறைய பார்த்து விட்டேன். ஒரு கட்டு பணம் போதும். அதே சாதியில், அதே மதத்தில், அதே இனத்தில் ஆயிரமாயிரம் துரோகிகளை வெளிக்கொண்டு வர என்னால் முடியும். பற்றுள்ள ஆயிரம் பேரை அழிக்க ஒற்றை துரோகி போதும். அதை நீங்கள்தான் சரியாக கணக்கிடவில்லை.


"பயணம் நல்லபடியா இருந்ததா.?" என்றான் எதிரில் இருந்த கிழவன். நியாயபடி இவன் என் ஒருவனுக்காகவே அந்த விமானமே வெடித்து சிதறி இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் செய்ய மாட்டான். இதான் பணம் கற்று தந்த ரியாலிட்டி.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments