Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 12

 குழலி POV

என்னை அதிர்ச்சியோடு பார்த்தான் புவின். இட்லியா தோசையா என கேட்டது குற்றமா என்று தெரியவில்லை. ஒருவேளை இரண்டும் பிடிக்காதோ.? பிடிக்காது என்று சொன்னால் சாதம் வைக்கலாம் என்று நினைத்தேன்.

"உனக்கு பிடிச்சது செய்.." என்றவனின் குரல் கரகரத்து இருந்தது. நான் குழப்பத்தோடே தலையசைத்து விட்டு திரும்பி நடந்தேன்.

தோசைதான் ஊற்றினேன். தோசை சுடுகையில் புவினை பற்றிய நினைவாகவே இருந்தது. 

அருகே இருக்கிறான். ஆனால் என் மனதில் உள்ளதை அவனிடம் சொல்ல முடியவில்லை என்னால். ஆம். நான் அவனை விரும்புகிறேன். அவனை எனக்கு பிடித்திருக்கிறது. அழகு

விசயம் இல்லை. அவனை பற்றி எந்த விசயங்களும் தெரியாவிட்டாலும் அதுவும் முக்கியம் இல்லை. இது என் மனம் சம்பந்தப்பட்டது. எந்த ராஜ குமாரனும் இவனை போல இருக்க மாட்டான். இவன் எனக்கான தனியொரு இராஜகுமாரன். 

கனவுகள் முழுக்க அவன்தான் இருந்தான். நினைவுகளிலும் அவன்தான். நான் பார்க்கும் இடங்களெல்லாம் அவனே. என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதும் அவன் குரலே.

ராஜ குமாரனை பற்றிய நினைவை கலைத்தது சாலையில் சென்ற போலிஸ் வாகனத்தின் சைரன் சத்தம்.

நாடு மிகவும் மோசமாக இருந்தது இப்போது. நேற்று கூட ஒரு கல்லுரி பேருந்தில் குண்டு வெடிப்பு. மக்கள் பயந்துக் இருந்தார்கள்‌. இறந்த மனிதர்களை டிவியில் காணுகையில் அழுகையாக வந்தது எனக்கு.

ஏன் இந்த நாட்டில் குண்டு வெடிக்க வேண்டும்.? இங்கே உள்ள மக்கள் அனைவரும் அமைதியானவர்கள். எந்த வம்பிற்கும் செல்லாதவர்கள்‌. எங்களை கொல்ல யாருக்கு வஞ்சம் என்று தெரியவில்லை. 

இன்றைக்கெல்லாம் தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை எனலாம். அவ்வளவு பரபரப்பு மக்களிடையே. 

தோசையை சுட்டு முடித்து விட்டு தேங்காய் சட்னி செய்தேன். எனது இராஜகுமாரனும் என்னோடு சாப்பிட போகிறான் என்பதால் தக்காளி சட்னியும் புதினா சட்னியும் கூடுதலாக செய்தேன். இட்லி பொடியையும் எண்ணெய் கலக்கி தனியே எடுத்து வைத்துக் கொண்டேன்.

சமையலை முடித்துவிட்டு சென்று பல் விளக்கி வந்தேன். அதன் பிறகுதான் உணவை எங்கே உண்பது என்று குழப்பமாக இருந்தது. மேலே செல்லலாமா இல்லை இராஜகுமாரனை கீழே அழைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் மாடி வீட்டிலிருந்து இந்த வீட்டிற்குள் வரும் கதவு தட்டப்பட்டது. 

கதவை பூட்டவில்லை நான். கதவை இரு முறை தட்டிய புவின் கதவு திறந்திருப்பதை அதன் பிறகே உணர்ந்து கதவை திறந்து உள்ளே வந்தான். 

முழுக்கை சட்டையும் அடர் கருப்பில் கால் சட்டையும் அணிந்திருந்தான். தலையை அழகு நிலைய கடையில் உள்ள விளம்பர புகைப்படத்தில் இருப்பதை போல வாரி விட்டிருந்தான். அவன் முகத்துக்கு இருநூறு மடங்கு ஸ்டைலை சேர்த்தது அந்த வாரப்பட்ட தலை. குளித்து அழகாய் தயாராகி வந்திருந்தான் அவன். நானோ இந்த அழுக்கு சுடிதாரோடு நின்றுக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவனும் என்னை கண்டு திகைத்து நின்றான். ஏன் என்று குழம்பினேன். ரொம்ப அசிங்கமாக இருக்கிறேனோ என்று குழம்பியபடி நெற்றி மோதிய கூந்தல் முடியை ஓரம் ஒதுக்கி விட்டேன். 

"சாப்பிடலாமா.?" என்றேன். அவன் சிறு நொடிகளுக்கு பிறகு என் கண்களை பார்த்தான். "ம்.." என்றான். என்னை நோக்கி வந்தான். என் இதயம் இரு மடங்காக இரத்தம் இறைக்கும் பணி செய்த வேளையில் என்னை தாண்டிக் கொண்டு கிச்சனுக்கு சென்றான். அதன் பிறகே நான் நான்கைந்து நொடிகளாக மூச்சு விடாமல் இருப்பதை உணர்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டேன். 

கிச்சன் வாசலில் இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தான். "சாப்பிட வரலையா.?" என்றான்.

அவசரமாக சென்று அவன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்‌. எனது தட்டில் தோசைகளை பரிமாறிக் கொண்டேன். அவன் என்னை பார்த்து விட்டு அவன் முன்னால் இருந்த தட்டில் தோசையை எடுத்து வைத்துக் கொண்டான். நானோ.. பாட்டியோ.. நிஷாவோ.. யாருக்கும் பரிமாறியது கிடையாது. உணவை நடுவில் வைத்து விட்டு உண்ண ஆரம்பிப்போம். பசிப்போர் வேண்டுமளவு பரிமாறிக் கொள்ளலாம். 

மூன்று வித சட்னிகளை பார்த்தவன் என்னை நிமிர்ந்து பார்த்தான். நான் தலையை தோசை தட்டில் ஒட்டி வைத்துக் கொள்வது போல அதிகம் குனிந்தேன். வெறும் தோசையை பிட்டு வாயில் போட்டுக் கொண்டேன்.

"உதட்டுலயோ நாக்குலயோ காயமா.?" என்றான். குழப்பத்தோடு நிமிர்ந்த நான் இல்லையென தலையசைத்தேன். 

"இல்ல குழம்பு விட்டுக்காம இருக்கியே.." என்றான்.

நான் புதினா சட்னியை எடுத்து தட்டில் பரிமாறிக் கொண்டேன். அவன் தக்காளி சட்னியையும் தேங்காய் சட்னியையும் எனக்கு பரிமாறினான். பாசமாக இருக்கிறான் என் இராஜகுமாரன் என்று நினைக்கையில் சந்தோசமாக இருந்தது. 

இருவரும் பேசிக் கொள்ளாமலேயே உண்டோம். தோசையை நான் லாவகமாக சாப்பிடுவது போல் தோன்றியது எனக்கு. என் மனம் ஸ்டைலை பின்பற்ற சொன்னது. அவனின் அழகிற்கு என்னையும் மேம்படுத்திக் கொள்ள சொன்னது.

"சட்னியெல்லாம் நல்லா இருக்கா.?" என்றேன் அவனிடம்.

அவன் நிமிர்ந்து பார்த்து விட்டு "சூப்பர்.." என்றான். பிறகு மீண்டும் உண்ண ஆரம்பித்தான். 

எனக்கு என் உச்சந்தலையில் யாரோ ஐஸ் கட்டிகளை கொட்டியது போலிருந்தது. அவ்வளவு குளிர்ச்சி. இதயம் கூட ஜில்லிப்பில் நனைந்தது போலிருந்தது. 

அவன் ஐந்து தோசைகளை உண்டான். நான் நான்கை உண்டு விட்டு தயங்கினேன். இன்னும் இரண்டு சாப்பிட சொன்னது வயிறு. அதை நான்காக சாப்பிட சொன்னது நாக்கு. ஆனால் எப்படி.? அவனை விட அதிகம் சாப்பிடுவதா என்று குழம்பியபடி தட்டை கொண்டு சென்று சிங்கில் வைத்து சுத்தம் செய்தேன். வயிறு பசிப்பது போலவே இருந்தது. 

அந்த அரை வயிறு பசியோடே அவனோடு சேர்ந்து சோஃபாவில் அமர்ந்தேன். டிவியை இயக்கினேன். அவனுக்கு என்று வீட்டிலிருந்த பால்கோவாவை எடுத்து வந்து தந்தேன்.

"வயிறு புல்.." என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு பசியில் வயிறு கத்தியது. பால்கோவாவை உண்டபடி டிவியை பார்த்தேன். இறந்தவர்களின் உடலை பற்றியும், இழந்தவர்களின் அழுகையை பற்றியும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள் அந்த சேனலில். பால்கோவா விஷம் போல இருந்தது. சேனலை மாற்றி விட்டேன். பார்க்க முடியவில்லை என்னால்.

பாடல் ஓடியது. தாயொருத்தி தன் குழந்தைக்கு தாலாட்டு பாடினாள். அதையும் பார்க்க முடியவில்லை. அம்மாவும் பாட்டியும் அதிகம் நினைவுக்கு வந்தார்கள். 

அடுத்த சேனலில் காதல் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது. அருகே என் இராஜகுமாரன் இருந்ததால் அதை பார்க்கவும் வெட்கமாக இருந்தது. அடுத்த சேனலை மாற்றினேன். கரப்பான் பூச்சிகளும் பூனைகளும் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. உணர்வுகளை சுரண்டாத இந்த சேனலை பிடித்திருந்தது. 

பத்து நிமிடம் கடந்து விட்டிருந்தது‌. பால்கோவா பாக்ஸில் இருந்த பாதியை உண்டு முடித்திருந்தேன். அருகே இருந்தவன் கவனித்து இருக்க மாட்டான் என்று நம்புகிறேன். பூனையை அநியாயத்திற்கு ஓட விட்டன அந்த கரப்பான் பூச்சிகள். நான் என்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் என்னவோ திட்டமிட்டது அந்த கரப்பான் பூச்சி. பூனையின் அருகே சென்று அதன் காலை கடித்தது. என் முகவாயை பற்றி திருப்பியது ஒரு கரம். கொஞ்சம் அதிர்ந்து திரும்பினேன். இல்லையேல் திருப்பப்பட்டேன் என்றும் சொல்லலாம். 

புவின் என்னை நோக்கி குனிந்தான். என்ன என்று புரிவதற்கு முன்பே அவனின் இதழ்கள் என் இதழ்களின் மீது படர்ந்து விட்டது. எனது ஒரு கரத்திலிருந்த பால்கோவா பாக்ஸ் நழுவியது. அதை பற்றியது அவனின் மறு கரம். அந்த பாக்ஸை என் கையிலிருந்து வாங்கி கீழே வைத்தான். உடனே திரும்பி வந்த அவனின் அந்த கரம் பின்னால் சாய்ந்துக் கொண்டிருந்த என் இடுப்பை பற்றி அவனோடு இணைத்தது. பாக்ஸை பிடித்திருந்த என் கரம் என் சம்மதம் இல்லாமலேயே அவனின் கழுத்தை வளைத்தது‌. முதல் முத்தம். பயமாக இருந்தது. அதே சமயம் இதிலிருந்து விடுபட முடியவில்லை என்னால். பிடித்திருந்தது. இந்த முத்தம்.. இவன்.. புதினா வாசனை வீசிய அவனின் மூச்சு காற்று.. தக்காளியின் சுவையை கடன் தந்த அவனின் இதழ்கள்.. அனைத்தும் பிடித்திருந்தது. 

அனைத்தும் பிடித்திருந்தது. ஆனாலும் இதயம் பயங்கரமாக துடித்தது‌. இதயம் நின்று இறந்து விடுவேனோ என்று பயமாக இருந்தது. நெற்றியில் உருவான வியர்வை காதோரம் கோடு போட்டது. நொடிகள் நிமிடங்களாக.. நிமிடங்கள் மணியாக.. மணி நாட்களாக.. நாட்கள் வாரங்களாக.. வாரம் மாதமாக.. மாதம் வருடமாக.. வருடம் யுகங்களாக கடந்து சென்றது. இன்னும் அவனின் இதழ்கள் என்னைதான் தீண்டிக் கொண்டிருந்தது‌. மூச்சு விடுகிறேனா இல்லையா என்று தெரியவில்லை‌. உணர முடியவில்லை. என்னை சுற்றி அனைத்துமே நின்று போய் விட்டது போல இருந்தது. காலங்கள்.. காற்றுவெளி.. வெப்பம்.. ஒளி.. ஒலி.. எதுவும் இல்லை என்னை சுற்றி.. இது ஒரு மாயையை போல இருந்தது. அவனுக்குள் என்னை தொலைப்பது போலிருந்தது. என் இதயம் இறைத்த இரத்தத்தை அவனின் ஜீவன் திருடுவது போலிருந்தது. 

ஆணின் இதழ்களும் கூட மென்மையானது என்று இப்போது அறிந்துக் கொண்டேன் நான். அதுதான் சொன்னேனே முதல் முத்தம் என்று. 

கண்களை எப்போது மூடினேன் என்று தெரியவில்லை. தூக்கம் போல இருந்தது. இது கனவாக இருந்து விட கூடாது என்றும் கனவாக இருக்க வேண்டும் என்றும் இரு வேறு விதமாக நினைத்தேன். 

இதழ்கள் விலகியது. இது அநியாயம் என்று கத்த தோன்றியது. கண்களை திறந்து அவனை பார்த்தேன். என்னை விட்டு விலகி அமர்ந்தான். அரையாய் சாய்ந்து அமர்ந்திருந்த நான் அவன் விலகவும் நேராக அமர்ந்தேன். அவனை பார்த்தேன். முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்தான். எனக்கு முகமே சிவந்து போனது‌. முகத்தின் சூட்டை என்னால் உணர முடிந்தது. தவறை நான் செய்தது போல குற்றம் சாட்டியது என் மனம். 

பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன் என் பக்கம் திரும்பினான். 'அறியாமல் நடந்த தவறு. தெரியாதவள் போல மன்னித்து விடு.." என்று சொல்வானோ என்று பயமாக இருந்தது.

"எ.. எனக்கு வேலை இருக்கு.. கொஞ்சம் அர்ஜென்ட்.." என்றவன் எழுந்து நின்றான். தடுமாறி இந்த பக்கமும் அந்த பக்கமும் திரும்பியவன் பின்னர் மாடிக்கு செல்லும் கதவை நோக்கி நடந்தான். 

டிவியில் இன்னமும் பூனையை துரத்திக் கொண்டேதான் இருந்தன கரப்பான் பூச்சிகள். என் மனதுக்குள்ளும் இப்போது புதிதாத ஓடி கொண்டிருந்தது சில கரப்பான் பூச்சிகள். கரப்பான்கள் என் மனதை அப்படியே விட்டு வைக்குமா என்று தெரியவில்லை.

தாமதமாகதான் வலது கையை பார்த்தேன். கையில் இருந்த பால்கோவா துண்டு கைகளோடு ஒட்டிக் கொண்டிருந்தது. பயத்திலோ பதட்டத்திலோ கையை அதிகமாக இறுக்கி பிடித்து விட்டேன் என்று புரிந்தது‌. எழுந்து சென்று கையை சுத்தம் செய்து வந்தேன். பால்கோவா வீணாய் போனது வருத்தமாக இருந்தது. கைகள் முழுக்க பரவி ஒட்டிக் கொண்டிருந்ததை உண்ண மனம் வரவில்லை எனக்கு‌. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக புரிந்தது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு வாரத்திற்காவது அவனை இந்த வீட்டுக்கு உணவு உண்ண அழைக்க மாட்டேன் என்று.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments