Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 4

 புவின் POV


அந்த சிறு குழந்தையை பார்த்ததால் உண்டான வருத்தத்தில், இந்த சுயநல உலகம் விரைவில் அழியட்டும்‌ என்று நினைத்தபடி நடந்தேன். யாரோ மேலே வந்து இடித்தார்கள். கண்களற்றவனா என்ற கோபத்தோடு நிமிர்ந்து பார்த்தேன். இளம்பெண் ஒருத்தி மருண்டு போய் என்னை பார்த்தாள். இந்த பெண்.. ஒரு மாதம் முன்னால் பூக்கடையில் பார்த்த அதே பெண். 


"சாரி.. கவனிக்காம இடிச்சிட்டேன்.." என்றவள் என்னை தாண்டி நடந்தாள்.


கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாள் இவள். அடிக்கடி என் பார்வையில் படுகிறாள். பொதுவாக பெண்களை நேசிப்பவன் அல்ல நான். பிறகேன் இவள் மட்டும் என்னை ஈர்க்கிறாள் என்று தெரியவில்லை. அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. ஆனால் லேசாக ஒரு மென் சாரலை போல மனதுக்குள் ஒரு குளுகுளுப்பு. அவளுக்காக உயிர் தர விரும்பவில்லை. ஆனால் அவளை நெஞ்சாங்கூட்டுக்குள் வைத்து பொத்திப் பாதுகாக்க வேண்டும் போல இருந்தது. 


என் மனமே என்னிடமே சதிராட்டம் ஆடுகிறது என்பதை நானும் நன்றாகவே புரிந்துக் கொண்டேன். நான் என்றைக்குமே மனதை நம்புவன் கிடையாது. மனதின் பேச்சை கேட்டு அதன் வழியில் நடந்தால் அது நம்மை கொண்டு சென்று பாழும் குழியில்தான் தள்ளும். 


மனதுக்குள் ஓவியமாக புகுந்தவளை விரட்டி விட்டுவிட்டு கடைத்தெருவினுள் புகுந்து நடந்தேன். ஹோட்டல் அறையில் அடைந்து கிடப்பதை விட இப்படி காற்றோட்டமாக சுற்றுவது பிடித்திருந்தது. அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. தேவையற்ற பொருட்கள் பலவற்றையும் வாங்கியபடி மக்கள் வெளி வந்துக் கொண்டிருந்தனர். அந்த பணத்தில் இரு பிச்சைக்காரர்களுக்கு உணவிட்டிருக்கலாம் என்று கூப்பாடு போட்டது என் மூளை. மக்களுக்கான அத்தியாவசியம் மறைந்து பல காலம் ஆகி விட்டது. ஆடம்பரமும் கூட என்றோ மறைந்து விட்டது. அனாவசியங்கள்தான் அளவுக்கு அதிகமா குவிந்து கிடக்கின்றன.


இந்த மக்களில் இன்னும் எத்தனை பேர் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் உயிரோடு இருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் என் கையில் திணிக்கப்பட்ட திட்டம் அந்தவாறானது. என் தாய்நாட்டிற்கு இத்தனை எதிரி நாடுகள் உள்ளதென்று அப்போது யாரேனும் சொல்லியிருந்தால் சொன்னவன் முகத்தில் ஓங்கி உதைத்திருப்பேன். ஆனால் உண்மை அதுதான். உலக நாடுகள் ஏதோ ஒரு வகையில் இந்த நாட்டின் மீது பொறாமை கொண்டுள்ளன. மனதின் ஓரங்களில் வன்மம் கொண்டுள்ளன. நாடுகள் என்றால் நாட்டின் தலைவர்களோ நாட்டின் மக்களோ கிடையாது. தன் நாட்டிற்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் சுற்றி திரிந்துக் கொண்டிருக்கும் சில அமைப்புகள். அந்த அமைப்புகள் அனைத்து நாட்டிலும் உண்டு. மற்றொரு நாட்டின் கலாசாரத்தையும் இயற்கை வளத்தையும் அழித்தால்தான் தாங்கள் முன்னேறுவோம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்.


மற்ற நாட்டு மக்களும் என் தாய்நாட்டை விரும்புகிறார்கள். நல்ல மனிதர்கள். மக்களாய் பிறந்தோர் அனைவரும் சமம் என்று நம்பி எங்கே யார் துடித்தாலும் நேச கரம் நீட்டுவோர். ஆனால் எனக்கு அவர்களை கண்டு வயித்தெரிச்சல்தான் வரும். நானும் என் தம்பியும் பசியோடு சுற்றியலைந்த வேளைகளில் ஏன் அவர்கள் எங்களை காணவில்லை என்று கடுப்பு வரும். சில காலம் வரை கெட்டவர்களை மட்டும்தான் வெறுத்தேன் நானும். ஆனால் நான் பசியோடு வாடிக் கொண்டிருந்த அதே வேளையில் என்னை போலிருந்த மற்றொரு மனிதனுக்கு இவர்கள் உதவி செய்தார்கள் என்ற ஓரவஞ்சனை தெரிய வந்ததும் நல்லவர்களையும் சேர்த்து வெறுக்க ஆரம்பித்து விட்டேன். இந்த காரணத்திற்காக என்னை முட்டாள் என்று திட்டும் முன் நீங்கள் ஒரு வாரத்திற்கு பட்டினி கிடந்து பாருங்கள். பிறகு பிழை போடுங்கள்.


ஹோட்டலை நோக்கி திரும்பி நடந்தேன். என்னால் இதற்கு மேல் உங்களோடு கலக்க முடியாது. நான் தனி விசம். உங்களோடு கலந்தால் நானும் சாக்கடை ஆகி விடுவேன். அந்த கடைத்தெருவின் எல்லையை தாண்டிய வேளையில் எனக்கு பின்னால் வந்த பேருந்தை ஓட்டி வந்தவன் ஹாரனை அடித்தான். நடைமேடையில் நடந்துக் கொண்டிருந்த ஒரு தாயின் கையிலிருந்த குழந்தை வீறிட்டு கத்தி அழுதது. சாலையின் ஓரத்தில் நடந்துக் கொண்டிருந்த நான் நடை மேடைக்கு ஏறினேன். அழுத குழந்தையை சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள் அந்த தாய். அந்த பச்சை பிள்ளை மேல் எனக்கு பொறாமை வந்தது. 


அந்த தாயையும் குழந்தையையும் நான் பார்த்துக் கொண்டு சென்ற நேரத்தில் யாரோ மீண்டும் வந்து என் மேல் இடித்தார்கள். என் மேல் இடித்தது யாரென்று சலிப்போடு பார்த்தேன். விதியை என்னவென்று சொல்வது.? அந்த பெண்ணேதான் என்னை இம்முறையும் இடித்திருந்தாள். கைகள் நிறைய மயில் இறகு கட்டை எடுத்து வந்திருப்பாள் போல. என் மீது மோதிய காரணத்தால் கட்டிலிருந்து உருவிய சில பல மயிலிறகுகள் தரையில் சிந்தி கிடந்தன. கையிலிருந்த கட்டை இறுக்க பற்றியபடி தரையில் இருந்த மயிலிறகுகளை சேகரிக்க ஆரம்பித்தாள். என்னை கவனிக்கவில்லை அவள். ஆனால் நான் கவனித்துக் கொண்டிருந்தேன். மயிலிறகு கட்டுகளை கையில் வைத்துக் கொண்டிருந்ததால் தரையில் இருந்த இறகுகளை கஷ்டப்பட்டு சேகரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவ சொல்லி பிராண்டியது மனம். ஆனால் நான் அவ்வளவு நல்லவன் இல்லை. 


பள்ளி முடிந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த மாணவிகள் கூட்டம் இவளை கண்டு அருகே ஓடி வந்தது. தரையில் கிடந்த இறகுகளை சேகரித்து தந்தார்கள் அவர்களே. அவள் எழுந்து நின்றாள். தன்னிடம் தரப்பட்ட இறகுகளை புன்னகையோடு வாங்கிக் கொண்டாள். வர்ணிப்பதாக நினைக்காதீர்கள். அவள் உண்மையில் அழகாக இருந்தாள் அந்த புன்சிரிப்பில். கள்ளம் கபடமற்ற சிரிப்பு என்று வர்ணித்தது என் குரங்கு மனம்.


"அக்கா எனக்கு ஒரு மயிலிறகு கொடுக்கா.." என்றாள் ஒரு சிறுமி. அவள் யோசிக்காமல் எடுத்து நீட்டினாள். "அக்கா எனக்கும்.. எனக்கும்.." என்று அடுத்தடுத்து சிறுமிகள் கைகளை நீட்டினார்கள். அனைவருக்கும் ஒவ்வொன்றை தந்தாள். சிறுமிகள் மாபெரும் பதக்கங்களை பரிசாக பெற்றது போல எண்ணி சந்தோசத்தோடு அவளை கடந்து நடந்தார்கள்.


அவள் அதன் பிறகே என் பக்கம் திரும்பினாள். என்னை கண்டதும் அதிர்ந்து விட்டாள் என்பது அவளின் முகத்தை பார்க்கும்போதே தெரிந்தது. 


"சாரி.." என்றாள் மென்மையாக. நான் பதில் சொல்லவில்லை. மூச்சு விடும் சிலையாக நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தேன். அவளின் இமைகள் படபடத்தன. அதை தடுக்க நினைத்திருப்பாள் போல. என்னவோ சொல்ல நினைத்தாள். ஆனால் உடனே வாய் மூடிக் கொண்டாள். 


எனது கரம் எனக்கு துரோகம் செய்தது. அவளை நோக்கி நீண்டது. அதை நான் அப்போது அறியவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். கனவில் நடக்கும் செயல்களுக்கு நாம் எப்போதும் பொறுப்பாக முடியாது. அது போலதான் இந்த செயலும். எனது நீட்டிய கரத்தை சில நொடிகள் குழப்பமாக பார்த்தவள் மயிலிறகு ஒன்றை எடுத்து என் கையில் தந்தாள். அடித்த காற்றுக்கு பறந்து விடுமோ என்று பயந்து கரத்தின் விரல்கள் ஐந்தும் சட்டென்று மூடிக் கொண்டன. 


நானும் பேசவில்லை. அவளும் பேசவில்லை. சில நொடிகள் கழிந்தது. தூரத்தில் கோவில் மணி அடித்தது. அவள் என்னை கடைசி தடவையாக பார்த்துவிட்டு என்னை கடந்து நடந்துச் சென்றாள். நான் மயிலிறகை மார்த்தேன். அழகாய் இருந்தது அவளின் சிரிப்பை போலவே. அவளை போல புன்னகைக்க ஆசைக்கொண்டது என் பிஞ்சு மனம். 


மயிலிறகோடு ஹோட்டலுக்கு வந்தேன். அறைக்குள் நுழைந்ததும் போன் அடித்தது. தம்பி அழைத்திருந்தான்.


"அண்ணா.. பக்கத்து சிட்டியில உள்ள ஒரு ஷாப்பிங் மால்க்கு நாளைக்கு ஒரு செலிபிரட்டி வரானாம். கூட்டம் நிறைய கூடும்.." என்றுவிட்டு போனை வைத்து விட்டான்.


நீங்கள் வேண்டுமானால் பொறுத்திருந்து பாருங்கள், நாளை நான் அந்த ஷாப்பிங் மாலை தவிடுப்பொடி ஆக்கிய பிறகு மொத்த நாடும் அந்த செலிபிரட்டியின் இறப்புக்காக கண்ணீர் சிந்தும். ஏதேனும் ஒரு சிலர்தான் இறந்த பொது மக்களை எண்ணி அழுவாரக்ள். உயிர்கள் அனைத்தும் சமம் என்பதை எப்போதும் அறியாது இந்த முட்டாள் உலகம். 


போனை கட்டிலின் மீது எறிந்தேன். தலையணையில் தலையை சாய்த்து கட்டிலில் விழுந்தேன். கையில் இறுக்கமாக பற்றியிருந்த மயிலிறகை பற்றி அதன்பிறகே நினைவு வந்தது எனக்கு. கரத்தை கண்களின் முன்னால் கொண்டு வந்தேன். கையிலிருந்த மயிலிறகு வியர்வையில் நனைந்திருந்தது. கரம் ஏன் இதை இவ்வளவு இறுக்கமாக பற்றியிருந்தது என்று புரியவில்லை. அரையடி தண்டோடு இருந்த மயிலிறகு விழியசைக்காமல் பார்க்க வைத்தது. இரவு உறங்கும் வரையிலுமே அந்த மயிலிறகை பார்த்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தேன். 


உணவு கொண்டு வந்தவன் கதவை தட்டினான். "பசியில்லை.. வேண்டாம்.." என்று என் வாழ்வில் முதல் முறையாக சொன்னேன். உணவு கொண்டு வந்தவன் சென்று பல நிமிடங்கள் கடந்த பிறகும் கூட நான் சொன்ன "பசியில்லை.. வேண்டாம்.." என்ற வார்த்தைகள் என் மனதுக்குள் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டிருந்தன. நீங்களே உங்கள் கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டால் எப்படி அதிர்ந்து போவிர்களோ அப்படி இருந்தது எனக்கு. மயிலிறகை கசக்கி தூர எறிந்தேன். கசக்கி எறிந்தும் கூட தரையில் கிடந்த மயிலிறகு அழகாய்தான் இருந்தது. தலையை பிடித்தபடி திரும்பி படுத்தேன். 


அந்த பெண்ணை அடியோடு வெறுத்தேன். அன்று இரவெல்லாம் எனக்கு உறக்கமே வரவில்லை. காரணம் அவள்தான். அவள் மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் இப்படி இந்த இரவில் அவதிப்பட்டிருக்க மாட்டேன் நான். மணி பதினொன்று வரை புரண்டு விட்டு எழுந்து அமர்ந்தேன். நாளைய நாள் எனது வேலை நாள். அதனால் இன்றைய இரவின் தூக்கம் எனக்கு ரொம்ப முக்கியம். வெகு நேரம் யோசித்துவிட்டு என் பணக்கார டிரைவருக்கு போன் செய்தேன். பெண் ஒருத்தியை அனுப்பி வைக்க சொல்லி சொன்னேன். அடுத்த அரை மணி நேரத்தில் கதவு தட்டப்பட்டது. வாசலில் நின்றிருந்த இளம்பெண் என்னை கண்டதும் சிரித்தாள். 


கதவை திறந்து விட்டேன். உள்ளே நுழைந்தாள். நேராக சென்று கட்டிலில் அமர்ந்தாள். அமர்ந்தபடியே அணிந்திருந்த புடவையை ஸ்லோ மோசனில் அவிழ்க்க தொடங்கினாள். முந்தானை கீழே விழுந்தது. அவளின் முன்னழகில் பாதியை வெளி காட்டியது அவள் அணிந்திருந்த மாராப்பு சட்டை. அதன் பெயர் வேறு என்னவோ என்று நினைக்கிறேன். மன்னிக்கவும். எனக்கு பெண்கள் விசயத்தில் அவ்வளவாக அக்கறை இல்லாததால் அந்த மாராப்பு சட்டையின் பெயர் சரியாக தெரியவில்லை. 


என்னை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தாள். உதட்டு சாயமும் அவள் வைத்திருந்த கண் மையும் எனக்கு காமத்தை தரவில்லை. மாறாக ஒரு பொருளை ரசிக்க கூடிய பக்குவத்தைதான் தந்தது. உண்மையில் கவர்ச்சியாக இருந்தாள். என் சகோதரன் இங்கே இருந்திருந்தால் பார்த்தவுடன் அவளை பாய்ந்து அணைத்திருப்பான். 


ஏதேனும் ஒரு மேடையில் ஏறி பதக்கங்களை வாங்கி விட்டு சிரிக்க வேண்டிய முகம். என்னை பார்த்து சிரித்தாள். என்னை போலவே என்ன விதி வந்ததோ இவளுக்கும். விதி கொண்ட பாதையில் எதிர்த்து நின்று போராடி தோல்வியுற்றாளோ.? இல்லை போராட பயந்து ஓடி வந்தாளோ.? ஆனால் இன்று எனக்கு தன்னையே விருந்தாக படைக்க வந்திருந்தாள். 


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments