Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 5

 புவின் POV


என் முன் அமர்ந்திருந்தவள் அவளின் மாராப்பு சட்டையை கழட்டினாள். என்னால் அவளை நேர் கோண்டு பார்க்க முடியவில்லை. பார்வையை சுவர் பக்கம் திருப்பிக் கொண்டேன். அவள் என்னை விசித்திரமாக பார்த்திருக்க கூடும்.


"என்னை பிடிக்கலையா.?" என்றாள் தயக்கமாக. அந்த தயக்கத்தில் சிறு கோபமும் மறைமுகமாக கலந்திருந்தது. யாருக்கு பிடிக்காது இவளை.? செதுக்கி வைத்தது போல அவளுக்கான அழகை ஆண்டவன் பார்த்து பார்த்து தந்திருந்தான்.


ஏன் இந்த தயக்கம் என்று என்னையே திட்டிக் கொண்டு அவளின் அருகே வந்தேன். அவள் புன்னகையோடு மீதி உடைகளையும் களைய ஆரம்பித்தாள். எனக்கு ஏனோ என் மீதே வெறுப்பாக இருந்தது. பூக்கடைக்காரி திடீரென்று மனதுக்குள் தோன்றி என்னை பார்த்து சிரித்தாள். அவளை விரட்டத்தான் இவளை அணுகியிருக்கிறோம் என்ற உண்மையை என் மனதுக்கு சொன்னேன். ஆனால் மனம்தான் பேச்சை கேட்கவில்லை. 


அருகில் இருந்தவள் அவளின் கையை என் நெஞ்சின் மீது வைத்தாள். என்னை கட்டிலில் தள்ளி எனது சட்டை பட்டன்களை அவிழ்க்க ஆரம்பித்தாள். இந்த நொடியில் நான் தோற்று விட்டேன். தனது தோல்வியை தன்னிடமே ஒப்புக் கொள்வதை போன்று வலியானது வேறு இல்லை. இவள் என்னை தீண்டியது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பூக்கடைக்காரியாய் இருந்திருந்தால் மனதுக்கு இனித்திருக்குமோ என்னவோ.? மனதை ஆட்சி செய்ய விட்டால் இதான் நிலமை. என் மேல் இருந்தவள் என் கழுத்தில் உதடுகளை பதிக்க ஆரம்பித்தாள். 


"வேண்டாம்.." என்றேன். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலாக என் நிலமை. எவளோ ஒருத்தியை மனதிலிருந்து ஒழிக்க மற்றொருத்தியை நாடுவது முட்டாள்தனம் என்று எனது செயலுக்கு நானே நியாயம் கூறிக் கொண்டேன். அவள் என்னை குழப்பமாக பார்த்தாள்.


"ஏன்.?" என்றாள்.


"இன்ட்ரஸ்ட் இல்ல.." என்றேன். அவள் முறைப்போடு எழுந்து அமர்ந்தாள். என் மீது கொலை வெறிக் கொண்டிருப்பாள். ஆனால் அதை வெளிக்காட்டவில்லை. இதுதான் அவளின் வாழ்நாளில் முதல் நிராகரிப்பாக இருக்கலாம். தவறு அவள் மீது இல்லை. என் மீதுதான். 


எழுந்து நின்று தன் உடைகளை அணிய ஆரம்பித்தாள். என்னை நேராக பார்க்கவில்லை. அவளின் கோபம் அவளின் கன்னங்களில் தெரிந்தது. லேசாக கைகள் நடுங்கியது அவளுக்கு. நடுங்கிய கைகளோடு திரும்பி நின்று தன் மாராப்பு சட்டையின் கொக்கிகளை போட்டுக் கொள்ள ஆரம்பித்தாள். நான் நிராகரித்த அவளின் அழகை என்னிடம் மீண்டும் காட்ட விரும்பவில்லை அவள். 


உடையை அணிந்த பிறகு கிளம்பினாள். "ஒரு நிமிசம்.." அழைத்தேன். நின்றாள். அருகே சென்று அவளிடம் பணத்தை நீட்டினேன். அவளின் ஒரு நாளை வீணாடித்தது தவறு என்று தோன்றியது. நிமிர்ந்து என்னை பார்த்தாள். கண்கள் கலங்கியது அவளுக்கு.


"வேண்டாம்.." என்றுவிட்டு கதவை திறந்துக் கொண்டு சென்று விட்டாள். இன்னும் அதிகமாக அவளை அவமானப்படுத்தி விட்டேன் என்பது தாமதமாக புரிந்தது. பணத்திற்காக நாட்டு மக்களின் உயிரையே பலி தரும் ஊழல்வாதிகள் மத்தியில் இவளின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது.


எனது சட்டையின் அவிழ்ந்த பட்டன்களை பார்த்தேன். மீதி இருந்த பட்டன்களையும் கழட்டினேன். சட்டையை கழட்டி வீசிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் ஏறி படுத்தேன். சற்று முன் வந்து சென்றவளின் பெர்ப்யூம் வாசம் என் கட்டிலின் மீது வீசியது. கூரையை பார்த்தேன். பூக்காரியின் முகம் அந்த கூரையில் வந்து போனது. ப்ளாக் அன்ட் ஒயிட் சினிமாவை விட மோசமாக போய் கொண்டிருந்தது எனது மனதின் விளையாட்டு. எனது எண்ணத்தில் தோன்றும் அத்தனையும் பொய்களின் கட்டமைப்புதான். இதை உறுதியாக கூறுவேன் நான். 


பூக்காரி என் மனதை சிதைக்கிறாள். அவள் என்னை முதல் நாள் அப்படி ஒரு பார்வை பார்த்ததால்தான் இன்றைக்கு நான் இப்படி உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருக்கிறேன். நாளைய தினத்தில் தூக்க கலக்கத்தில் எதையும் சொதப்பி வைக்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஐந்தாறு முறை கவிழ்ந்து படுத்தேன். இந்த பக்க சுவரையும் அந்த பக்க சுவரையும் பார்த்தபடி திரும்பி திரும்பி படுத்தேன். ஒன்றும் வேலைக்கு உதவவில்லை. பூக்களை விட அழகாய் புன்னகைத்த பூக்காரி என் மூளையை செயல்பட விடாமல் தடுத்திருந்தாள்.


இரவெல்லாம் அவள் என்னோடு பேசினாள். ஒன்று கூட அர்த்தமுள்ளவை இல்லை. அவளோடு கைக்கோர்த்தபடி கடற்கரை ஓரங்களிலும், கூட்டம் நிறைந்த கடை வீதிகளிலும் நடந்துக் கொண்டிருந்தேன் நான். நொடிக்கொரு தரம் என்னை பார்த்து சிரித்தாள் அவள். அவளின் விழிகள் இந்த கற்பனையில் கூட என்னை களவாடியது. 


ஐந்தாறு முறை அவளின் இதழோடு என் இதழ் பதித்தேன். இன்னும் கூட கண்டதையும் கற்பனை செய்துக் கொண்டிருந்தேன். அவற்றை உங்களோடு பகிர்ந்துக் கொள்வது அவ்வளவு நாகரீகமாக இருக்காது. 


அந்த பைத்தியக்காரியினால் அன்றைய இரவு முழுவதையும் உறங்காமலேயே கடந்த நான் விடியற்காலையில்தான் கண் அசந்தேன். ஆனால் ஆறு மணிக்கே என் டிரைவர் வந்து கதவை தட்டி விட்டான். என் தம்பி அவனுக்காக வேலையை இரவே சொல்லியிருப்பான். அதனால்தான் என்னை அழைத்துச் செல்ல இவன் விசுவாசத்தோடு வந்திருக்கிறான்.


"மால் வரைக்கும் நானும் வரட்டுமா சார்.?" என்றான் அந்த மால் இருந்த இடத்தின் இருநூறு மீட்டர் தொலைவில் காரை பார்க் செய்து விட்டு. நான் காரில் இருந்து இறங்கியபடியே "தேவையில்ல.." என்றேன். அவன் சாக மாட்டான் என்று தெரியும். இருந்தாலும் அவனை பயமுறுத்த விரும்பவில்லை நான். 


ஷாப்பிங் மாலின் வாசலில் செக்யூரிட்டிகள் நின்றிருந்தனர். வாசலின் இரு புறமும் கார்களும் பைக்குகளும் வரிசை கட்டி நின்றது. கேட்டுக்கு வெளியே செலிபிரிட்டியின் ரசிகர்கள் குவிந்து கிடந்தனர். ஒருவரையொருவர் முட்டி தள்ளிக் கொண்டிருந்தனர். 


"கடை எப்ப சார் ஓபன்.?" என்றான் ஒருவன் கேட்டிலிருந்த செக்யூரிட்டியிடம்.


"இன்னும் அரை மணி நேரம் பொறுங்கப்பா.." என்றார் அவர்.


கேட்டிலிருந்து மால் கட்டிடத்திற்கு இடைப்பட்ட பாதையில் இருந்த இரு செக்யூரிட்டிகள் கையில் மெட்டல் டிடெக்டரை வைத்திருந்தனர். நான் என் பாக்கெட்டில் இருந்த கிப்ட் பாக்ஸை தொட்டுப் பார்த்தேன். வண்ண தாள்கள் சுற்றப்பட்ட அந்த பாக்ஸில்தான் வெடிக்குண்டு இருந்தது. மிகவும் தரம் வாய்ந்தது. அதிக சக்தி வாய்ந்தது. இந்த ஷாப்பிங் மாலை சில்லு சில்லாக தரையில் சிதற விடும் அளவுக்கு பலம் உள்ளது. எப்படி இதை உள்ளே கொண்டு செல்வது என்று யோசித்தேன். இரவு குழப்பத்தில் சரியாக யோசிக்கவில்லை நான். இல்லேயேல் இதை போனாக மாற்றி எடுத்து வந்திருப்பேன்.


விதி உண்மையில் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் இந்த பூக்காரியை மீண்டும் இங்கே பார்த்த போது இந்த கேள்விதான் எனக்குள் உதித்தது. ஷாப்பிங் மால் வாசலில் செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் பூ அலங்காரத்தை இரண்டடி தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். 


அவளின் வாய் அசைந்தது. "மதி.." என்று அழைத்திருக்கிறாள் என்பதை அவளின் உதட்டசைவை வைத்து கண்டுக் கொண்டேன். எப்போதோ எடுத்த பயிற்சி இப்போது உதவியது. முக்கால் பேண்ட் அணிந்திருந்த பையன் ஓடி வந்தான். அவன் அவளின் பூக்கடையில் வேலை செய்கிறான் என்று நினைக்கிறேன். 


"மேலே பாரு.. வெல்கம் தப்பா இருக்கு.." என்றாள் பூக்காரி. அவள் கை காட்டிய இடத்தை பார்த்தேன். ஓவும் சியும் மாறி இருந்தது. அந்த பையன் ஏணியில் ஏறி எழுத்துக்களை சரி செய்தான். மேலே நின்றபடியே இவளை பார்த்தான். "இதை கூட உன்னால சரி பண்ண முடியாதா.?" என்றான்.


இவள் பதில் சொல்லவில்லை. அலங்காரத்தின் மற்ற இடங்களை நோட்டம் விட்டாள். ஒரு மூலையை கை காட்டினாள். "அந்த இடத்துல டிசைன் மாறி இருக்கு.." என்றாள். மதி அதையும் மாற்றி சரியாக வைத்தான். பிறகு ஏணியை விட்டு கீழே இறங்கினான். "உள் அலங்காரம் பாக்கி இருக்கு.. கெஸ்டுங்க வரும் முன்னாடி அதை சீக்கிரம் முடிக்கணும்.." என்று அவனை விரட்டினாள் பூக்காரி.


"குழலி.. இதுல எதை ஸ்டேஜ்க்கு யூஸ் பண்றது.? இரண்டும் நல்லாருக்கு. எதை யூஸ் பண்றதுன்னு எனக்கு தெரியல.." என்றாள் அவளின் தோழி உள்ளேயிருந்து வந்தபடி.


குழலி.. நல்ல பெயராகதான் இருக்கு. 


ஊதா வண்ண பூக்கள் மாலையை தோழியிடம் தொட்டு காட்டினாள். அவளின் தோழி உள்ளே சென்றாள்.


அவளின் தோழியும் அந்த மதி பையனும் உள்ளே சென்றபோது மாலின் கதவோரம் இருந்த செக்யூரிட்டிகள் அவர்களை சோதிக்கவில்லை.‌ இவளை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று நினைத்தேன். சிறிது நேரம் கூட்டத்தோடு நின்ற இடத்திலேயே இருந்தேன். 


நேரம் கடந்தது. கேட் திறக்கப்பட்டது. மக்களை சோதித்து உள்ளே அனுப்பினார்கள். சற்று நேரத்தில் கூட்டம் குறைந்தது. ஒரு வரிசை மட்டும் இருந்தது. பத்து பதினைந்து பேர் இருந்தார்கள். நான் கடைசியில் நின்றிருந்தேன். 


சற்று நேரத்தில் கார் ஒன்று கேட்டை தாண்டி சென்றது. பெண் ஒருத்தி கீழே இறங்கினாள் நளினமாக. மால்காரன் சில பேர் சூழ பெரிய மாலையோடு அவளிடம்‌ ஓடி வந்தான். அவளின் கழுத்தில் மாலையை அணிவித்தான். அவள் புன்னகைத்தபடி மாலையை கழட்டி தன் டிரைவரிடம் தந்தாள். வாசலில் நின்றிருந்த பூக்காரி இவளை ஆச்சரியமாக பார்த்தாள். 


செலிபிரிட்டி எனப்பட்டவள் மாலுக்குள் சென்றாள். நான் மெட்டல் டிடெக்டர்காரர்களிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


வரிசையில் இருந்த இருவர் கேட்டை தாண்டி உள்ளே போன நேரத்தில் பூக்காரி என்னை பார்த்து விட்டாள். அவளையே பார்த்திருந்த நான் புன்னகைத்தேன். அவள் முதலில் தயங்கினாள். பின்னர் பதில் புன்னகை தந்தாள். என்னை நோக்கி வந்தாள். கேட்டை தாண்டி வந்தவள் என்னருகே வந்து நின்றாள். "..ம்.. ஷாப்பிங் வந்திங்களா.? இல்ல பூவிகாவோடு செல்ஃபி எடுக்க வந்திங்களா.?" என்றாள்.


வாவ்.. நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை. இந்த அளவுக்கு என்னோடு இவள் பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அனேகமாக என்னை போலவே கற்பனையில் குடும்பம் நடத்தியிருப்பாள் என்று நினைக்கிறேன். ஆனால் கேள்விகளை கேட்ட பிறகு அதற்காக வருத்தப்பட்டாள் என்பது அவளை பார்க்கையில் புரிந்தது. அவளை அதிகம் வருத்தப்பட விட கூடாது என நினைத்து "ஷாப்பிங் வந்தேன்.." என்றேன் சட்டென.


"ஓ.." என்றவளுக்கு அடுத்து என்ன சொல்வதென்று தெரியவில்லை போலும். சற்று நேரம் யோசித்துவிட்டு "நான் குழலி.." என்று கையை நீட்டினாள்.


"மிதுன்.." என்றேன் கை பற்றி குலுக்கி. கைகளின் தீண்டல் மின்சாரத்தை உடலில் உருவாக்கியது. பொய் சொல்லவில்லை நான். இவள் உண்மையில் வேறு ரகம். கண்களுக்கு தெரியாத ஒரு வேர் எங்கள் இருவரையும் இணைத்து வைத்திருப்பது போல இருந்தது எனக்கு. ஆமாம். இவளுக்கும் எனக்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருந்தது. எனக்கும் தங்சேயாவிற்கும் இடையில் இருக்கும் சம்பந்தம் போல. 


"மிதுன்.. ஸ்வீட் நேம்.." என்றாள். அவளின் தைரியம் பிடித்திருந்தது. ஆனால் எனது உண்மையான பெயர் மிதுன் இல்லை. இந்த புரோஜக்ட் முடியும் வரை மட்டுமே இந்த பெயர். அதன் பின்னர் வேறு பெயரை எங்கள் குழு எனக்காக தேர்ந்தெடுக்கும்.


"உங்க பேரும் ஸ்வீட்தான்.." என்றேன். லேசாக கன்னங்கள் சிவந்தாள். பைத்தியக்காரி என்று என் மனம் அவளை திட்டியது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments