Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 6

 புவின் POV


அவளின் வெட்கம் கண்டு என் மனம் பரபரத்தது. அவளை அணைத்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்குமா என்று துள்ளி குதித்து கேட்டது முட்டாள் மனம். இன்னமும் பாக்கெட்டில்தான் கையை விட்டிருந்தேன். கையில் இருந்த கிப்ட் பாக்ஸ் என்னை பார்த்து சிரிப்பதை போலிருந்தது. நான் வந்த வேலை என்ன என்பதை சுட்டிக் காட்ட முயன்றது.


நான் வந்தது இந்த கட்டிடத்தை தகர்ப்பதற்குதானே தவிர என் மனதை தகர்க்கும் இவளுக்கு சந்தர்ப்பங்கள் உருவாக்கி தர இல்லை. 


யோசித்தேன். பாக்கெட்டிலிருந்த கிப்ட் பாக்ஸை கையில் எடுத்தேன். அவளிடம் நீட்டினேன். "இதை நேத்து இந்த கடையில்தான் வாங்கிட்டு போனேன்.. ஆனா பொருள் மாத்தி பேக் பண்ணிட்டாங்க. அதனால மாத்திட்டு போகலாம்ன்னு வந்தேன். பில்லை கார்லயே விட்டுட்டு வந்துட்டேன். இதை கொஞ்ச நேரம் வச்சிக்கிட்டு இந்த இடத்துலயே நிக்கிறிங்களா.? நான் போய் பில்லை எடுத்துட்டு வந்துடுறேன்.. நான் நகர்ந்துட்டா அப்புறம் திரும்பி வரும்போது வரிசையில் எனக்கு இடம் விட மாட்டாங்க." என்றேன் என் முன்னாலும் பின்னாலும் நிற்கும் நான்கைந்து பேரை சுட்டிக் காட்டியபடி.


அவளின் முகத்தில் புன்னகை உருவானது. என் கையிலிருந்த கிப்ட் பாக்ஸை எடுத்துக் கொண்டாள். "நான் உங்க இடத்துல நிக்கிறேன்.." என்றாள்.


நான் நகர்ந்தேன். காருக்கு திரும்பி வந்தேன். என் டிரைவர் காத்திருந்தான் நாயை போல. என்னை கண்டு சிரித்தான். "பிளான் சக்சஸா பாஸ்.?" என்றான்.


"பில் பேப்பர் போல ஏதாவது இருந்தா கொடு.." என்றேன். "ஒரு நிமிசம்.." என்றவன் காருக்குள் தேடினான். பில் ஒன்றை எடுத்து நீட்டினான். அது பங்கில் அவன் காருக்கு பெட்ரோல் நிரப்பிய பில்.


இதுவே போதும் என்றெண்ணியபடி திரும்பி நடந்தேன். மிகவும் மெதுவாக நடந்தேன். ஷாப்பிங் மால் பார்வைக்கு வந்த தூரத்தில் கவனித்தேன். குழலி செக்யூரிட்டியின் முன்னால் நின்றிருந்தாள். தான் எதற்காக அங்கே நிற்கிறோம் என்று விளக்கி சொல்லிக் கொண்டிருந்தாள். கைகளை அதிகம் ஆட்டியபடி பேசினாள். அவளின் செயல் ரசிக்கும்படி இருந்தது. நான் மெல்ல அடியெடுத்து வைத்தேன். மறு பக்க பாக்கெட்டில் இருக்கும் வெடிக்குண்டின் கீயை தொட்டு பார்த்தேன். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. சிக்கி கொள்ளும் சூழல் ஏற்பட்டால் இப்போதே கூட ரிமோட்டின் பட்டனை அழுத்தி விடுவேன். நான்தான் குண்டு வைத்தேன் என்று அறியவே உங்களுக்கு பத்து வருட காலம் தேவைப்படும். அதற்குள் நான் இந்த மொத்த உலகத்தையே அழித்து விடுவேன்.


செக்யூரிட்டி கார்ட் அவளிடம் வழிந்தான். அவனின் பார்வையில் என்னை விட ஆயிரம் மடங்கு காமம் இருந்தது. துப்பாக்கி எடுத்து வந்திருந்தால் அவனின் நெற்றி நடுப்பொட்டில் சுட்டிருப்பேன். அவளிடம் என்னவோ சொன்னான். அவனின் கண்களை கவனித்ததால் அவன் சொன்னதை கவனிக்கவில்லை நான். குழலி உள்ளே சென்றாள். செக்யூரிட்டி அவளின் கையில் இருந்த கிப்ட் பாக்ஸை கவனிக்க கூட இல்லை. கையடக்கமாக இருந்தாலும் கூட அவன் கவனித்து பார்த்திருந்தால் அதையும் சோதனை செய்திருக்கலாம். பெண்ணால் அழிந்த மனிதர்கள் வரிசையில் முதல் இடம் பிடிக்கும் தகுதி உடையவன் இவன்தான் என்று தோன்றியது. கேட்டின் உள்ளே சென்ற குழலி ஒரு ஓரமாக நின்றாள். பாதையை கவனித்தாள். மறக்காமல் தன் கைக்கடிக்காரத்தையும் கவனித்தாள். அவளுக்கென்று வேலைகள் காத்து கிடக்கிறது என்பதை யூகித்துக் கொண்டேன். இந்த மாலில் பாம் வெடித்த பிறகு அவளுக்கென்று வேலைகள் இருக்காது. அதனால் இப்போதே சற்று ஓய்வெடுக்கட்டும் என்று நினைத்தேன்.


ஷாப்பிங் மால் கட்டிடத்தை நோக்கி நடந்தேன்‌. நெருங்கும் நேரத்தில் என்னை கவனித்து விட்டவள்  என்னை பார்த்து சிரித்தாள். எனக்கு என்னவோ அவளின் காலனாக நான் உள்ளது போல இருந்தது. எத்தனையோ பேருக்கு காலன்தான் நான். ஆனால் இவளுக்கு என்று வரும்போது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. மனம் எனும் சாத்தான் அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது போல.


நான் நெருங்கியதும் செக்யூரிட்டியிடம் வந்தாள். "நான் சொன்னது இவர்தான்.." என்றாள்.


செக்யூரிட்டி என்னை பார்த்தான். தலை முதல் கால் வரை ஆராய்ந்தான். அவன் பார்வையில் பொறாமை தெரிந்தது. அவனை விட நான் வலுவாய் தென்பட்டதாலா இல்லை குழலி என்னிடம் பேசியதாலா என்று தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டில் ஒன்றுதான் அவனின் பொறாமைக்கான காரணம் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது எனக்கு.


என் முன் டிடெக்ரை வைத்து சோதித்தான். ரிமோட் மேல் லேசர் பட்டதும் சத்தமிட்டது டிடெக்டர். நான் எடுத்து காட்டினேன். காரின் சாவி. இதை காரிலேயே வைத்து விட்டு வந்திருக்கலாம் என்று இப்போது தோன்றியது. ஐந்தாறு கண்ணாடி வண்ண மீன்கள் அந்த சாவி கொத்தில் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த காரின் சாவிதான் ரிமோட் என்பதை அவன் எப்படி அறிவான்.? அதனால் உள்ளே செல்ல சொல்லி சைகை காட்டினான்.


நான் கேட்டுக்குள் நுழைந்ததும் குழலி என்னோடு இணைந்து நடந்தாள். 


"என்கிட்டயும் இதே மாதிரிதான் சாவி கொத்து இருக்கு.." என்றவள் தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து சாவி கொத்தை எடுத்து காட்டினாள். அவள் அணிந்திருந்த மேல் குர்தாவுக்கும் அந்த பேண்டிற்கும் சிறிதும் சம்மந்தமே இல்லாதது போல இருந்தது வேறு கணக்கு. ஆமாம் ஒரு நிமிடம். இந்த பெயர் சரிதானா.? இது குர்தாதானா.? இப்போது இது ரொம்ப முக்கியம் என நீங்கள் கேட்பது புரிகிறது. அதனால் அமைதியாகி கொள்கிறேன்.


அவள் கையில் எடுத்து காட்டிய சாவி கொத்தை பார்த்தேன். என்னோடதை போலவேதான் இருந்தது. மீன்களின் வண்ணங்கள் மட்டும் ஒரு சில இடங்களில் மாறி இருந்தது. இதுதான் விதியின் அடுத்த கட்டம் போலும்.


"என் அம்மா எனக்கு வாங்கி தந்தது.." என்றாள் புன்னகையோடு.


அவள் சாவியை பற்றி சொன்ன இரண்டுமே அன்னியனிடம் சொல்ல தேவையில்லாத ஒன்று. அசல் முட்டாள் என்பதை அடிக்கடி நிருபித்துக் கொண்டிருக்கிறாள் என்றெண்ணினேன் நான்‌.


மாலுக்குள் நுழைந்தோம் இருவரும். வாயிலில் நுழைந்த நேரத்தில் மேலிருந்து பூக்கள் கொட்டியது இருவர் மீதும். அண்ணாந்து பார்த்தேன். பூக்களால் நிரம்பிய பை ஒன்று தொங்கி கொண்டிருந்தது.


"இன்னைக்கு வர கஸ்டமர்ஸ் எல்லோரையும் ஸ்பெஷலா பீல் பண்ண வைக்கணும்ன்னு இப்படி செஞ்சிருக்கோம்.." நான் கேட்கும் முன்பே விளக்கம் சொன்னாள் அவள். 


"கிப்ட் பாக்ஸை கொடுங்க.." என்றேன். அவளுக்கென்று நான் தந்த திருமண கணையாழியை கேட்டது போல தயக்கத்தோடு திருப்பித் தந்தாள்‌. மீண்டும் முட்டாள் என்று மனதுக்குள் சாடி விட்டு நகர்ந்தேன். 


கடைகள் அனைத்திலும் கூட்டம் இருந்தது. நடு ஹாலில் அதை விட அதிக கூட்டம் நின்றிருந்தது. ஹாலின் நடுவே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை ஒன்றில் நின்றுக் கொண்டிருந்தாள் நான் வாசலில் பார்த்த செலிபிரிட்டி. மக்கள் ஒவ்வொருவராக சென்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள். மேடையின் இரு புறங்களிலும் போலிஸார் லத்தியோடு நின்றிருந்தார்கள். செலிபிரிட்டியின் அருகே நின்றிருந்த பெண் செலிபிரிட்டியின் முகத்தை அரை நிமிடத்திற்கு ஒரு முறை துடைத்து விட்டாள். ஏசி காற்று மூச்சு காற்றோடு கலந்துக் கொண்டிருக்கிறது. இவளுக்கு எதுக்கு டச்அப்.? என்று கேட்டது என் மனம். இப்போதெல்லாம் தேவையில்லாத சந்தேகங்கள் நிறைய உதயமாகிறது.


கூட்டத்தோடு கூட்டமாக கலந்து நின்று அந்த செலிபிரிட்டியை கவனித்தேன். அவளின் அருகாமையில் பாமை வெடிக்க வைத்தால் சிறு திருப்தி கிடைக்கும் என்று தோன்றியது. 


"சி.சி.டி.வி கேமரா ஒன்னு கூட வேலை செய்ய மாட்டேங்குது.. என்னன்னு வந்து கவனிங்க சார்.." என்று என் அருகே நின்றிருந்த கடையின் அதிகாரி ஒருவரை அழைத்துக் கொண்டிருந்தான் அந்த மாலின் பொறுப்பாளன்.


"அதை அப்புறமா கவனிக்கலாம்ப்பா.. இருங்க முதல்ல இவங்களுக்கு பாதுகாப்பு தரலாம்.." என்றார் அவர்.


"சார் அப்புறம் ஒரு திருட்டை கூட கவனிக்க முடியாது சார்.." என்ற அந்த பொறுப்பாளனை திரும்பி பார்த்த முறைத்த அதிகாரி "இந்த அஞ்சி ரூபா பத்து ரூபா சாமான் திருடு போனாதான் என்ன.? போய் உங்க வேலையை பாருங்க.. சிசிடிவி பிரச்சனையை அப்புறம் கவனிச்சிக்கலாம்.." என்றவர் மீண்டும் செலிபிரிட்டியின் முகத்தை பார்த்து ஜொள்ளு விட ஆரம்பித்தார்.


அந்த பொறுப்பாளன் கவலை நிறைந்த முகத்தோடு திரும்பி நடந்தான். பொருள் திருடு போனால் அனைவரும் அவனைதான் நிற்க வைத்து கேள்வி கேட்பார்கள் என்று தோன்றியது. சிசிடிவி இணைப்பையெல்லாம் இன்று அதிகாலை நேரத்திலேயே என் டிரைவரின் ஆள்தான் துண்டித்து விட்டிருந்தான். சிசிடிவியில் என் முகம் பதிய கூடாது என்பதில் என்னை விட என் டிரைவர் அதிக அக்கறை காட்டினான்.


மாலை ஒரு வட்டம் அடித்தேன். சாவி கொத்துகள் விற்ற கடையில் ஐந்தாறு சாவி கொத்துகளை வாங்கினேன். அனாவசியம்தான். ஆனாலும் அர்த்தமற்று வாங்கினேன். மேல் மாடியில் இருந்த ஐஸ்கிரீம் கடையில் அமர்ந்து கப் ஐஸ் ஒன்றை வாங்கி உண்டேன். அமர்ந்தபடியே கீழே இருந்த ஹாலை பார்த்தேன். கூட்டம் குறைவில்லாமல் நின்றிருந்தது. நான்கு பக்க வாயில் வழியாகவும் மக்கள் உள்ளே வந்துள்ளார்கள் என்பதை இப்போதுதான் கவனித்து அறிந்துக் கொண்டேன்.


ஹாலின் நடுவே இருந்த பூக்களால் ஆன அலங்கார மேடையை கவனிக்கையில் குழலியை பாராட்ட தோன்றியது. அழகாகதான் இருந்தது. இடையிடையே இருந்த பலூன்களை அகற்றி இருந்தால் அந்த மேடை இன்னும் அழகாக இருந்திருக்கும் என்று தோன்றியது. 


குழலியின் முகத்தை கூட்டத்தில் தேடினேன். எங்கும் காணவில்லை அவளை. மதி பையன் ஒரு ஓரமாக நின்றபடி செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான். அவனுக்கும் என்னை போலவே அந்த செலிபிரிட்டியின் செயற்கை அழகில் ஆர்வம் இல்லை போல.


குழலியின் தோழி கையில் சிறு டைரியையும் பேனாவையும் வைத்தபடி நின்றிருந்தாள். செலிபிரிட்டியிடம் கையெழுத்து வாங்க போகிறாள்.? நிச்சயம் விந்தையானவள்தான்.!


"கிப்டை மாத்திட்டிங்களா.?" என கேட்டபடி எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள் குழலி. அவளின் குழல் பறந்த நெற்றியை கவனித்தேன். குங்குமம் கலந்த திருநீறை அழுத்தமாக தெரியும்படி இட்டிருந்தாள். கழுத்தில் சிலுவை தொங்கிக் கொண்டிருந்தது. தோள்பட்டையில் அவள் கட்டியிருந்த மசூதி தாயத்து அவளின் சல்லடை கை குர்த்தாவின் வழியே தெரிந்தது. 


கடவுள்கள் மீது அதிக நம்பிக்கை போல. எனக்கு ஏனோ வெறுப்பாக இருந்தது. எந்தன் பசி தீர்க்க உதவாத கடவுள்கள் இவளின் பாதுகாப்பிற்கு ஏன் வர வேண்டும் என்று சிறு பிள்ளை போல நினைத்தேன்.


"மாத்திட்டேன்.." என்றேன். ஐஸ்கிரீம் கடைக்காரன் அவளிடம் வந்தான். "மேடம்.." என்றான்.


"வெண்ணிலா கப்.." என்றாள். எனது கப்பிலும் அதுதான் இருந்தது. பார்த்ததால் சொன்னாளா இல்லை அதுதான் வேண்டுமென்று பிடித்து சொன்னாளா.. நான் அறியவில்லை. 


ஐஸ்கிரீம் வந்ததும் ஸ்பூனால் அள்ளி உண்டாள். அவளின் முக பாவம் கண்டதும் சம்மட்டியை தூக்கி நடு மண்டையில் போட்டுக் கொண்டது போல விதிர்த்து போனது உள்ளம்‌. கேவலம் ஒரு பெண் ஐஸ்கிரீம் உண்பதை கூட ரசித்து பார்ப்பேன் என்று சில நாட்கள் முன்பு வரை நம்பவில்லை நான். ஆனால் விதி யாரை விட்டது எனும் கணக்காக அவளை நானும் அதிசயமென எண்ணி ரசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து உண்டாள். ஐஸ்கிரீம் கரைந்ததோ இல்லையோ அவளை பார்த்து பார்த்து எனக்குள் இருந்த நெருப்பு உருகி வழிந்தது.


"வந்த வேலை முடிஞ்சிடுச்சி. கிளம்ப போறிங்களா.? இல்ல.." என் பதில் இவளுக்கு எதற்காக தேவை என்று தெரியவில்லை. 


நான் ஹாலின் இடையே இருந்த மேடையை பார்த்தேன். அந்த செலிபிரிட்டியை வாய் திறந்து பார்த்துக் கொண்டு நின்ற அந்த மால் அதிகாரியையும் பார்த்தேன். கடைசியாக அவனின் பேண்ட் பாக்கெட்டை பார்த்தேன். லேசாக புடைத்திருந்த அவனின் பேண்ட் பாக்கெட்டில்தான் நான் அந்த கிப்டை சொருகி விட்டு வந்திருந்தேன். அதை கூட அறியாமல் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தான் அவன்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments