Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 8

 குழலி POV


என் ஹீரோவை நான் ஒரு மாதமாக பார்க்கவேயில்லை. மலர் வளையம் வாங்கிக்கொண்டு போனவர் மீண்டும் எப்போதாவது கண்ணில் தென்படுவாரென்று காத்திருந்தேன். ஆனால் வரவில்லை. 


நிஷாவும் மதியும் என் மன குழப்பத்தை அறிந்திருந்தனர். என்ன காரணம் என்று விசாரித்தனர். நான் சொல்லாமலேயே காரணத்தை ஓரளவு யூகித்து விட்டனர்.


"அவன் நல்லா ஹேண்ட்ஸமா இருந்தான்க்கா.. உனக்கு செட் ஆவான்.." என்றான் மதி.


"ஊர் பேர் தெரியாவதனையெல்லாம் லவ் பண்ணிட்டு இருக்காத குழலி.. இப்ப இருக்கற ஆண்களை வீட்டுல பார்த்து கட்டி வச்சா கூட நூத்துல தொண்ணூறு ப்ளே பாயாதான் இருக்கு.." நிஷா தனது வழக்கமான அறிவுரைகளை வழங்கினாள்.


"ஆமா பொண்ணுங்க ஓகேவோ.? நேத்து என்னை லவ் பண்றேன்னு சொன்னா ஒருத்தி. இன்னைக்கு இன்னொருத்தன் கூட சுத்திட்டு இருக்கா.. ஆண் பெண்ணெல்லாம் சும்மா.. அவங்கவங்க மனசாட்சிதான் எல்லாத்துக்கும் காரணம்.. குழலி அக்கா.. எனக்கு அந்த ஆளை பிடிச்சிருக்கு. அவன் உன்னை பார்வையாலயே கடத்திட்டு போயிடுவான்.." என்றான் மதி.


நிஷா தம்பியை முறைத்தாள். "போதும் என்னை வச்சி நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக்காதிங்க.." நான் இடைபுகுந்து சொன்னாலும் கூட அடுத்த சில நிமிடங்களுக்கு முறைத்துக் கொண்டுதான் இருந்தார்கள் இருவரும்.


இரவுகளில் கொஞ்சமாக தொல்லை செய்தான் அவன். தினமும் உறக்கம் வரும் முன் அரை மணி நேரமாவது படுக்கையில் புரண்டேன். தினம் ஆயிரம் பேரை கடந்து செல்கிறோம் இதே உலகில். ஆனால் இவனை போல பார்த்தவுடன் மனதை பறிக்கவில்லை யாரும். 


தேவதை கதைகளில் வரும் மாவீரனாய் அவன். பாட்டியின் பழைய கதைகளில் வரும் குதிரை வீரனாய் அவன். பார்க்கும் சினிமாக்களில் எல்லாம் நாயகனாய் அவன். 


ஒரு மாதம் ஓடுவதற்குள் ஓடாய் தேய்ந்து விட்டேன் அவன் நினைவில். அம்மா இருந்திருந்தால், இந்த காரணத்தை அறிந்திருந்தால் துடைப்பத்தாலேயே மந்திரித்து விட்டிருப்பாளோ என்னவோ.? அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. வயதான பாட்டி இரண்டு மாதங்கள் முன்புதான் இறந்து போனாள். நான் அனாதை அல்ல. அம்மாவும் அப்பாவும் ஹாலின் நடுவே உள்ளே புகைப்படத்தில் இருந்தபடி என்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


பாட்டியின் வாசனைகள் இன்னும் இந்த வீட்டை விட்டு போகவில்லை. அவளது பழைய உடைகளை கூட அப்படியேதான் வைத்துள்ளேன். இரவில் அதை அணிந்துக் கொண்டுதான் உறங்குவேன். அம்மா அப்பாவும் தினம் கனவுகளில் வருவார்கள். கதை கதையாக பேசுவார்கள். நான் அவர்களோடு வாழ்ந்துக் கொண்டுதான் இருந்தேன். அனைவரும் என்னை கற்பனையில் வாழ்பவள் என்று குற்றம் சாட்டினார்கள். என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 


நீங்கள் கடவுள் உங்களோடு இருப்பதாக நினைத்துக் கொள்ளும் போது நான் ஏன் என் பெற்றோர் என்னோடு இருப்பதாக நம்ப கூடாது.? 


அப்பா அம்மா பாட்டியை தாண்டி இப்போது அந்நியன் ஒருவனையும் என் கற்பனைகளை ஆள விட்டிருப்பது சிறிது வித்தியாசமாகதான் இருக்கிறது. ஆனால் பிடித்திருக்கிறது. 


ஒரு மாதமும் கடினமாக நகர்ந்தது. அவனை இன்றேனும் பார்ப்போமா என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளையும் வரவேற்றேன் நான். எனது பிளவர் ஷாப்பை திறக்கும் போதும் அதை சாத்தும் போதும் இரு புறமும் திரும்பி பார்த்தேன் அவன் எங்கேனும் இருந்து வருகிறானா என்று. 


பள்ளி கூடம் ஒன்றில் ஆண்டுவிழாவிற்கு அலங்காரம் செய்ய சொல்லி இருந்தார்கள். குழந்தைகளுக்காக என்பதால் மயிலிறகால் மேடை அமைக்க ஆசைக்கொண்டனர் பள்ளி விழா குழுவினர். மயிலிறகு வீட்டில் இருந்தது. மதியை எடுத்து வர சொன்னேன். ஆனால் அவன் செல்லவில்லை. அதனால் நானே கிளம்பினேன். செல்லும் வழியில் கூட என் ஹீரோவைதான் நினைத்துக் கொண்டு நடந்தேன் நான். ஆனால் கடைசியில் அவன் மீதே மோதுவேன் என்று நினைக்கவே இல்லை. 


எரிச்சலோடு முறைத்தவன் என்னை கண்டதும் முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டான். "சாரி.." என்றேன். எனக்கு அவன் மீது கோபம். அவன் ஒரு மாதமாக என் கண்களில் படவில்லை. அந்த கோபம்தான்.‌ சம்மந்தமே இல்லாத ஒருவன் மீது கோபப்பட என்னால்தான் முடியும்.


நேரம் கடந்துக் கொண்டிருந்தது. அதனால் அவனோடு கற்பனையிலேயே சண்டை போட்டுவிட்டு தாண்டி நடந்தேன்.


வீட்டிலிருந்த மயிலிறகு கட்டை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தேன். வழியில் மீண்டும் யாரோ மோதினார்கள். யாரென்று பார்க்க நேரமில்லை எனக்கு. அவசர அவசரமாக அந்த மயிலிறகுகளை பெருக்கியெடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோதுதான் அது அவன் என்பதை அறிந்தேன். என்னை ஒரு மாதிரியாக குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான்.


என்னிடம் மயிலிறகு வாங்கி சென்ற பள்ளி சிறுமிகளை போலவே இவனும் கையை நீட்டி மயிலிறகு கேட்டான். அவனோடு நிறைய பேச வேண்டும் போல இருந்தது. ஆனால் என்ன பேசுவது என்றுதான் தெரியவில்லை. மயிலிறகை தந்துவிட்டு நகர்ந்துக் கொண்டேன் நான்.


மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து ஷாப்பிங் மால் வாசலில் அவனை கண்டபோது என்னால் விதியை நம்பாமல் இருக்க முடியவில்லை. அவனுக்கு எனக்கும் இடையில் ஏதோ பந்தம் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறோம்.


ஷாப்பிங் மாலுக்கு வந்திருக்கும் செலிபிரிட்டியின் அழகில் மயங்கி அவளோடு செல்பி எடுக்க வந்திருக்கிறானோ என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் அவன் செலிபிரிட்டியை காண வரவில்லை என்று சொல்லி விட்டான்.


முன்பை விட எங்களின் உறவு சற்று பலப்பட்டிருப்பது போலிருந்தது. சிலந்தியின் பின்னல் உருவாக்கிய வலையை போல ஒரு நேச பந்த இணைப்பு. 


அவனின் பெயரை இந்த முறையேதான் கேட்டேன். புவின் நல்ல பெயராகதான் இருந்தது. இருவரும் இணைந்து ஐஸ்கிரீம் உண்டோம். அவனோடு நான் கடத்திய ஒவ்வொரு நொடிகளும் அழகாக இருந்தது. அவனின் அருகாமையும் பிடித்திருந்தது. அவனை காணும் போதெல்லாம் வெட்கம் என்னை லேசாக கொன்றது. அவனின் இதழை நேர் கொண்டு பார்க்கும்போது எனக்குள் இருந்த சில பல சேனல்கள் வேலை செய்ய ஆரம்பித்தது. நானெல்லாம் நேற்று வரை மனதால் சிறு குழந்தையாக இருந்தவள். இவனால் வளர்ந்துக் கொண்டிருந்தேன். 


யாரென்று தெரிந்து எல்லாம் தெரிந்து நன்றாக பழகிய பிறகு வரும் காதல் உங்களுக்கு நியாயம் என்றால் யாரென்று அறியாத இந்த நேரத்தில் வரும் காதல் எனக்கு பேன்டஸி. என் இராஜகுமாரன் மீது நான் கொண்ட காதல் உங்களுக்கு பொறாமையை கூட ஏற்படுத்தும். ஆனால் நான் கவலைப்பட மாட்டேன்.


இராஜகுமாரன் ஷாப்பிங் மாலை விட்டு கிளம்பினான். நான் செலிபிரிட்டியின் அருகே வந்து நின்றேன். மதி அவளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். சிறு பையன். அதனால் அமைதியாக அவனின் முக பாவத்தை ரசித்தேன்.


சில நிமிடங்கள் கடந்தது. இராஜகுமாரன் என்னை தேடி வந்தான். இதெல்லாம் இன்றே நடக்கும் என்று நினைக்கவேயில்லை நான். இராஜகுமாரன் என் கைப்பிடித்து வெளியே அழைத்துச் சென்றான். நான் அவனின் அருகாமையில் மயங்கி போனேன். இது பொய் அல்ல. அவன் என்னை பார்த்து புன்னகைத்தான். நான் அவனின் ஒளி சிந்தும் கண்களில் என் வாழ்வின் ஒளி தேடினேன்.‌ அதே நேரத்தில் தூரத்தில் எங்கோ பட்டாசு வெடித்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments