Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 9

 குழலி POV


அவனைதான் பார்த்து நின்றிருந்தேன். திடீரென்று என்ன நடந்தது என்றே தெரியவில்லை. மக்கள் என்னை தாண்டிக் கொண்டு ஓடினார்கள். எங்கும் அழுகை, கத்தல், கூச்சல்.


சத்தம் அதிகம் வந்த திசையை திரும்பி பார்த்தேன். ஷாப்பிங் மால் புகைந்துக் கொண்டிருந்தது. நெருப்பு ஒரு பக்கம் எரிந்துக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் கட்டிடம் இடிந்து விழுந்திருந்தது‌. நடந்ததை புரிந்துக் கொள்வதற்கே  சில நிமிடங்கள் ஆனது. 


"மால்ல பாம் வெடிச்சிருக்கு.." என்று யாரோ கத்திக் கொண்டு ஓடினார்கள். அவர்கள் அதை சொல்லாமல் இருந்திருந்தால் கடைசி வரை புரிந்திருக்காது எனக்கு. 


நிஷாவும் மதியும் ஷாப்பிங் மாலுக்குள்தான் இருந்தார்கள். ஷாப்பிங் மாலை நோக்கி ஓரடி எடுத்து வைத்தேன். யாரோ என் கை பிடித்து நிறுத்தினார்கள். திரும்பி பார்த்தேன். யாருமே இல்லை. எனது நாயகனை அந்த நொடியில் நினைவு வைத்திருக்கவில்லை நான். அவன் எங்கோ சென்று விட்டிருந்தான். 


நான் மாலை நோக்கி ஓடினேன். இடிப்பாடுகளின் இடையே இருந்து பலர் தப்பி பிழைத்து ஓடி வந்தனர். ஆனால் ஓடி வந்த அனைவருமே அடிப்பட்டவர்களாகதான் வந்தார்கள்.


மாலுக்குள் எப்படி பாம் வெடித்திருக்கும்.? குழப்பமாக இருந்தது. இடிபாடுகள் நிறைந்த கட்டிடத்தின் இடையே வழி இருக்கிறதா என்று தேடினேன். 


"பாப்பா.. அந்த பக்கம் போகாதே.." என்று யாரோ தடுத்து நிறுத்தினார்கள். திரும்பி பார்த்தேன். போலிஸ் நின்றுக் கொண்டிருந்தது.


"என் பிரெண்ட்ஸ் உள்ளே இருக்காங்க.." என்று கை காட்டி சொன்னேன்.


"உயிரோடு இருந்தா தீயணைப்பு துறை மீட்டு கூட்டி வருவாங்கம்மா.. கவலைப்படாதே.." என்றவர் கர்ச்சீப்பை எடுத்து என்னிடம் நீட்டினார். கர்ச்சீப் எதற்கு என்று தெரியவில்லை. கண்கள் மங்கி போய்தான் தெரிந்தது. ஆனால் அழுதிருப்பேன் என்று நினைக்கவில்லை. சந்தேகத்தோடு கன்னங்களை தொட்டுப் பார்த்தேன். ஈரம் இருந்தது. கைகளை பார்த்தேன். இரு கரங்களும் கருப்பு அண்டி போய் இருந்தது. எப்படி என்று புரியவில்லை. எல்லாமே மாயமாக இருந்தது. 


நிறைய ஆம்புலன்ஸ்கள் வந்தன. போலிஸ் வாகனங்களும் தீயணைப்பு வண்டிகளும் வந்து நின்றன. என்னை யாரோ விலக்கி இழுத்துச் சென்றார்கள். கட்டிட இடிப்பாடுகள் மெல்ல களையப்பட்டுக் கொண்டிருந்தன. மேற்கில் சூரியன் மறைய ஆரம்பித்திருந்தது. நொடிகள் சென்றதே தெரியவில்லை.


மதியின் அப்பாவும் தம்பிகளும் எங்கிருந்தோ ஓடி வந்தனர். "என்னம்மா ஆச்சி.?" என்று என் கைப்பிடித்து கேட்டாள் அவர்களின் அம்மா. எனக்குதான் எதுவுமே தெரியாதே. நான் என்ன சொல்வேன்.? 


சற்று நேரம் கடந்தது. "அக்கா.." என்று கத்திக் கொண்டு ஓடினான் நிஷாவின் சின்ன தம்பி. அவன் சென்ற திசையில் அவனது குடும்பமும் ஓடியது. நிஷாவின் முகம் ஒரு பக்கம் சிதைந்து விட்டிருந்தது. கண்களால் பார்க்கவே முடியவில்லை. அழுதேன் நான். ஆனால் அழுத உணர்வு மூளைக்குதான் சரியாக விளங்கவில்லை. 


"இறந்துட்டாங்க.." என்ற தீயணைப்பு வீரர் ஸ்ட்ரெச்சரை தூக்கி கொண்டு கடந்துச் சென்றனர். 


இரவு வந்தது. மதியை இன்னும் கண்ணில் பார்க்கவில்லை நான்.


மக்கள் கூட்டம் அலை மோதியது. மாலுக்குள் இருந்து இறந்த தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் கண்ணீரால் அழுது உயிரோடு வர சொல்லி கெஞ்சினர். தாய் ஒருத்தி தன் குழந்தையை காணாமல் உயிர் போக கதறிக் கொண்டிருந்தாள். தந்தையை இழந்த சிறு பெண் ஒருத்தி என்னை ஏழெட்டு தரம் சுற்றி வந்து தன் தந்தையை தேடினாள்.


செய்தி வாசிப்பாளர்கள் பலர் வரிசையாக நின்று பரபரப்பு செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். செலிபிரிட்டியை தாக்க வைக்கப்பட்ட குண்டா அல்லது மால் ஓனரை பழி வாங்க யாரேனும் பாம் வைத்தார்களா என்று ஆளுக்கொரு காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.


வெடித்து சிதறிய மாலின் வெளியே இருந்த ஒரு மரத்தடியில் முட்டிக்காலை கட்டியபடி அமர்ந்திருந்தேன் நான். என் அருகே நிஷாவின் சின்ன தம்பி அமர்ந்திருந்தான். அவனும் அழுதுக் கொண்டேதான் இருந்தான். நிஷா இருந்திருந்தால் ஆண் பிள்ளைகள் அழ கூடாது என்று சொல்லியிருப்பாள்.


"எப்படிக்கா பாம் வெடிச்சது.?" அழுகையின் இடையே கேட்டான் அவன்.


நான் யோசித்தேன். எதுவும் நினைவில் இல்லை. "தெரியலடா.." என்றேன்.


எனது கையை பற்றினான் அவன். எனது வலது பின்னங்கையில் குத்தி நின்றிருந்த கண்ணாடி துண்டு ஒன்றை பிடுங்கி எறிந்தான். இது எப்படி என் கையில் குத்தியது என்று தெரியவில்லை. 


"மதிக்கு ஒன்னும் ஆயிருக்காதுதானே.?" என்றான் சிறிது நேரம் கழித்து.


எதுவும் ஆகியிருக்க கூடாது என்றுதான் நானும் ஆசைக் கொள்கிறேன். இரவெல்லாம் நானும் அவனும் அப்படியேதான் அமர்ந்திருந்தோம். அவனின் அப்பாவும் அம்மாவும் நிஷாவின் உடலை விட்டு பிரியாமல் மருத்துவமனை வராந்தாவில் அமர்ந்திருப்பதாக போனில் தகவல் சொன்னார்கள்.


நடு இரவில் யாரோ இரு கோப்பை தேனீரை கொண்டு வந்து அவனிடமும் என்னிடமும் தந்து சென்றார்கள். சூடான தேனீர் ருசிக்கவேயில்லை. 


இரவு முழுக்க அந்த இடத்தில் கூட்டம் குறையவேயில்லை. தீயணைப்பு துறை வீரர்கள் விடிய விடிய வேலைகளை செய்துக் கொண்டே இருந்தார்கள். கொட்ட கொட்ட விழித்திருந்தேன் நான். கண்கள் லேசாக எரிந்தது. அழுததால் இருக்கலாம். 


விடிந்து சிறிது நேரம் கடந்தபோது நிஷாவின் உறவினர்கள் வந்து சேர்ந்தனர். நிஷாவின் பாட்டி தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுதாள். 


ஒன்பது மணி நெருங்கியது. மதியின் உடல் கிடைத்ததாக சொல்லி ஸ்டெச்சரில் தூக்கி வந்தார்கள். 


நாடே இதை பற்றிதான் பேசிக் கொண்டிருப்பதாக மருத்துவமனையில் தகவல் ஓடிக் கொண்டிருந்தது. பல முக்கிய அதிகாரிகள் ஊரை நோக்கி வந்திருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே மூன்று இடங்களில் குண்டு வைத்தவனேதான் இப்போதும் குண்டு வைத்திருப்பான் என்றும் சிலர் பேசிக் கொண்டார்கள்.


மூன்று இடங்களில் குண்டு வைக்கும்போதே ஏன் யாரும் அவனை பிடிக்கவில்லை என்று கோபமாக வந்தது எனக்கு. உதவாத நாடு.. உதவாத அரசாங்கம்.. உதவாத மக்கள்.. உதவாத சமுதாயத்தில் உதவாதவளாய் நானும்.. யாரை திட்டுவது என்று தெரியவில்லை எனக்கு. 


அன்றைய பிற்பகலில் மதியையும் நிஷாவையும் சுடுக்காட்டில் வைத்து எரித்தார்கள்‌. அவர்களின் மொத்த குடும்பமும் அழுதது. நிஷாவிற்கு பார்த்திருந்த மாப்பிள்ளை கூட வந்து அழுதான். அவளை நிறைய நேசித்ததாக அழுகையின் இடையே சொன்னான். மதியின் நண்பர்கள் கூட்டம் நெருப்பில் பாய இருந்தது. சுற்றி இருந்தவர்கள் அவர்களை பிடித்து நிறுத்தி திட்டினார்கள்.


"மதி.. எப்படிடா எங்களை விட்டுட்டு போன.? இனி நாங்க என்னடா பண்ணுவோம்.? எங்க போனாலும் எல்லாரையும் கூட்டி போவியேடா.. இந்த முறை மட்டும் ஏன்டா எங்களை விட்டுட்டு போன.?" என்று அழுதான் ஒருவன்.


பிணங்கள் இரண்டும் எரிய தொடங்கியதும் கூட்டம் கலைக்கப்பட்டது. அனைவரும் சுடுகாட்டை விட்டு நடந்தனர். நான் நடைப்பிணம் போல என் தோழியை விட்டு நகர்ந்தேன். நேற்று இதே நேரத்தில் என்னோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தவள் திடீரென இறந்து போனாள். ஒன்றுமே புரியவில்லை. 


மாலை மங்கிய நேரத்தில் வீட்டுக்கு வந்தேன். சாவியை எங்கே விட்டு வந்தேன் என்று தெரியவில்லை. வாசற்படியில் அமர்ந்தேன். முகத்தை மூடிக் கொண்டு உடைந்து அழுதேன். இதை தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. 


நேரம் கடந்தது. இருள் பரவியது. வீங்கிய முகத்தோடு எழுந்து கதவின் பூட்டை கல்‌ ஒன்றை எடுத்து உடைத்தேன். பூட்டுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். எனக்கு பெரிதொரு வேலை வைக்காமல் விடுவித்துக் கொண்டது. 


இருண்டு கிடந்த வீட்டின் கதவை தள்ளி உள்ளே சென்றேன். விளக்கை ஒளிர விட மனம் வரவில்லை. இருட்டிலேயே சென்று குளித்தேன். டவலை அரை குறையாக சுற்றிக் கொண்டு வந்து படுக்கையில் படுத்தேன். பசித்தது. நேற்று காலையில் உண்ட உணவு என்று நினைக்கிறேன். நிஷாவின் டிஃபன் பாக்ஸில் இருந்து எடுத்து தின்ற பூரி தொண்டை குழிக்குள் சிக்கி இருப்பது போலிருந்தது.


திறந்திருந்த ஜன்னல் வழியே நிலாவின் ஒளிக்கதிர்கள் அறைக்குள் நுழைந்தது. எனக்கு எதிரே இருந்த சுவற்றில் பட்டு அறை முழுக்க தெறித்தது. கண்களின் ஓரங்களில் வழிந்த சூடான கண்ணீர் ஓயவேயில்லை. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. 


நடு இரவில் ஏதோ சலசலப்பு கேட்டு கண் விழித்தேன். அதே இரவு. அதே நிலவின் ஒளிக்கதிர்கள். மீண்டும் அதே எண்ணங்கள். அதே அழுகை. விம்மல் என்னை தாண்டி வெடித்தது. தலையணையை கட்டிக் கொண்டு நடு இரவில் ஒரு முறை அழுது தீர்த்தேன். மீண்டும் அழுகையின் மயக்கத்திலேயே உறங்கி போனேன்.


இரவில் நான்கைந்து முறை கண் விழித்ததாக நினைவு. ஆனால் சரியாக நினைவில்லை. யாரோ என் மீது பெட்சீட்டை போர்த்தி விட்டார்கள். பாட்டியாக இருக்க கூடும் என்று நினைத்தேன் அந்த நேரத்தில். ஆழ்ந்த உறக்கமா இல்லை அரைகுறை வேதனை மயக்கமா என்று தெரியவில்லை. ஆனால் யாரோ என் கையை பற்றியபடி அருகே அமர்ந்திருப்பதை போலிருந்தது. கையை இறுக்க பற்றி இருந்தார்கள். அப்பாவாக இருக்கும். அவர்தான் எப்போதும் கையை கடினமாக பிடிப்பார்.


அப்பா விலகி செல்கையில் "எங்கேப்பா போற.?" என கேட்டதாக நினைவு. அனைத்தும் நினைவே. ஒன்று கூட நிஜம் கிடையாது. அதை மறு நாள் கண் விழித்த பிறகுதான் அறிந்துக் கொண்டேன். 


யாருமற்ற வீட்டில் வழக்கம் போல அனாதையாக கண் விழித்து அமரும் போதுதான் நிஜமென்றால் என்னவென்று புரிந்தது. அம்மா அப்பா பாட்டி யாருமில்லை என் பாதுகாப்பிற்கு என்று. தோழியும் தம்பியை போல பழகியவனும் கூட நேற்றிலிருந்து இல்லை. காலை நேரத்திலேயே மனம் உடைந்து விட்டிருந்தது. 


முகத்தை மூடிச் சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். பாட்டியாவது இருந்திருக்கலாம். சூடாய் ஒரு கோப்பை தேனீருக்காகவேனும். தோளில் படர்ந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கி நின்றேன். டவலை காணவில்லை. ஆனால் கைகள் அனிச்சையாக பெட்சீட்டை எடுத்துப் போர்த்திக் கொண்டன. பாட்டியின் பழைய நைட்டி ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டேன்.


ஃப்ரிட்ஜில் பால் பாக்கெட் இருந்தது. எப்போது வாங்கியது என்ற நினைவில்லை. பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து விட்டு குளியலறை நோக்கி நடந்தேன். முகம் அலம்பிக் கொண்டு வந்தபோது பால் பொங்கியிருந்தது. சிந்திய பாலை துடைத்தெறிந்து விட்டு டீத்தூளை பாத்திரத்தில் சேர்த்தேன். 


சர்க்கரையை மறந்து விட்டது டீயை சுவைக்கும்போதுதான் தெரிந்தது. இரண்டு ஸ்பூன் சர்க்கரையை கொட்டிக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தேன். டிவியை இயக்கினேன். செய்தியில் மாலின் நியூஸ்தான் ஓடிக் கொண்டிருந்தது. சர்க்கரை கலந்த தேனீர் ஏனோ கசந்தது.


"நாட்டின் இந்த தொடர் வெடிக்குண்டு வெடிப்புக்கு காரணம் என்ன.? வேற்று நாடுகளின் சதியா.? அல்லது உள்நாட்டு தீவிரவாதமா.?" என்று மேடை போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள் சிலர். மாலில் இறந்த செலிபிரிட்டியின் அழகிற்காகதான் குண்டு வெடிக்கப்பட்டது என்று ஒருத்தன் வெட்கமில்லாமல் வாதாடிக் கொண்டிருந்தான்.


உலக அரசியல் பேசும் இடங்களில் ஏன் எப்போதும் கோமாளிகள் ஒருவரையாவது சேர்த்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. 


முடிவுப்பெறாத கதையாக முடிந்தது அந்த விவாத மேடை.


கையிலிருந்த தேனீர் கோப்பையில் கடைசி சொட்டு தேனீரையும் அருந்தி விட்டிருந்தேன். இப்போது பசித்தது. சாப்பிடுவதை விட சாகலாம் என்று தோன்றியது. தனிமை என்னை எப்போதும் இந்த அளவிற்கு கொன்றதில்லை. 


மனதின் வேதனையை மனதுக்குள்ளேயே ஓர் ஆழத்தில் மூழ்க தந்துவிட்டு எழுந்தேன். கிச்சனை நோக்கி நடந்தேன். கதவு தட்டப்பட்டது. தயக்கமாக சென்று திறந்தேன். புவின் நின்றிருந்தான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW

 

அஞ்சாவது எபில புவினை மிதுன்னு மாத்தி எழுதிட்டேன் நட்புக்களே.. காய்ச்ச மயக்கத்துல மாத்தி எழுதிட்டேன். இப்பதான் பார்த்தேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.


Post a Comment

0 Comments