Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 15

 தனசேகரன் POV


நடுவில் புகுந்து குழப்பம் செய்யும் இந்த புது தீவரவாதிகளை அடியோடு வெறுத்தேன் நான். மேலதிகாரிகள் "உன் விருப்பப்படி செய்.." என்று சொல்லி விட்டார்கள்.


தீவிரவாதிகள் கேட்ட பணத்தை தருவதாக தொலைக்காட்சிகள் அனைத்தும் செய்திகளை வாசித்தன. பணம் தருவது முட்டாள்தனம் என்று திட்டியப்படி இதற்கும் ஒரு கூட்டம் கிளம்பியது.


தீவிரவாதிகள் அரசாங்கத்தை கிழக்கு மாநிலம் ஒன்றின் வனத்திற்கு வர சொன்னார்கள். அரசாங்கத்திற்கு பதிலாக நானே சென்றேன்.


முகமூடி அணிந்தபடி முன்னால் வந்து நின்றவன் கையை நீட்டினான். முட்டாள்கள் தங்களை தீவிரவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் போது அவ்விசயம் காமெடியாகி விடுகிறது. இங்கேயும் அப்படிதான் ஆனது.


அவன் கேட்ட பணத்தை பெட்டியில் தர முடியுமா.? முட்டாள் போல கையை நீட்டினான். நானும் அவனின் அறிவின் ஆழம் அறிந்துதான் இவ்வளவு தூரம் தைரியமாக வந்திருந்தேன். பணத்திற்காக கை நீட்டியவன் நெற்றியில் என் துப்பாக்கியை வைத்து ஒரே நொடியில் சுட்டு விட்டேன். முட்டாள் எருமைகளுக்காக நேரம் ஒதுக்க இயலாது என்னால்.


நான் இவனை சுட்ட அதே நேரத்தில் சற்று தொலைவில் துப்பாக்கி சுடும் சத்தம் ஐந்தாறு முறை கேட்டது. முட்டாளோடு உடன் வந்த முட்டாள்களும் இறந்தாயிற்று.


மீண்டும் பழைய ஊருக்கே வந்தாயிற்று. இங்கேதான் அவன் எங்கோ இருக்கிறான். என் உள்ளுணர்வு பல முறை எனக்கு உதவியுள்ளது. இம்முறையும் உதவும் என்றுதான் நம்புகிறேன்.


அந்தந்த பகுதியை சேர்ந்த காவலர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தினமும் விசாரித்து வந்தனர். நான் தேடும் ஆள் கிடைக்கவில்லை.


இதுவரை வெடிக்குண்டு வெடித்த இடங்களோடு சம்பந்தப்பட்ட அனைத்து சி.சி.டி.வி. பதிவுகளையும் அலசினோம் நானும் என் குழுவும். 


எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் தேடுபவன் மறையும் சக்தி உடையவனோ என்று கிண்டல் அடித்தான் சக நண்பன் ஒருவன். 


அவனுக்கு மறையும் சக்தி இருந்தால் எனக்கு அவனை வெளிக் கொண்டு வரும் சக்தி உண்டு.


இந்த குண்டு வெடிப்பின் காரணமே வேறு. ஆழமான காரணம் கொண்டுள்ளார்கள் இவர்கள். தீவிர வெறுப்பை நெஞ்சிலேயே பதித்து வைத்துள்ளார்கள். 


புவின் POV


நாட்டில் கடைசியாக குண்டு வெடித்து ஒரு மாதம் முடிந்து விட்டது. சேகர் என்னை எங்கேயெல்லாம் தேடுகிறான் என்று உடனடி தகவல் எனக்கு வந்துக் கொண்டிருந்தது. அவனின் இடப்பக்கம் ஒருத்தனும் வலப்பக்கம் ஒருத்தனும் நின்று வேலை பார்ப்பது நாட்டுக்காக அல்ல. எங்களுக்காக. எனது முகம் பதிந்த மூன்று வீடியோக்களை சேகர் பார்க்கும் முன் அழித்ததற்காக பல லட்சம் வாங்கி இருக்கிறார்கள் இருவரும்.


நான் வந்தது டூரிஸ்ட் விசாவோ இல்லை வேறு ஏதோ அல்ல. எனக்கு விசாவே தேவையில்லை. ஏனெனில் வேறு நாட்டை சுற்றி பார்க்க வந்த இந்த நாட்டுக்காரனை கொன்று விட்டுதான் அவனின் பெயரோடு இங்கே நுழைந்திருக்கிறேன் நான். இதற்கும் என்னை தேடி வந்து விசாரித்தார்கள். அனைத்து தகவல்களையும் சரியாக சொல்லி வந்தவர்களை அனுப்பி வைத்தேன் நான்.


சாவிற்கு பயம் கொள்ளாதவன் நான். இந்த அதிகாரிக்களுக்கு பயப்படுவேனா.? 


ஒரு மாதமாக குண்டு வெடிக்கவில்லை. ஓய்வில் இருப்பது போல் இருந்தது எனக்கு. குழலி இல்லாமல் இருந்திருந்தால் தலை வெடித்தே இறந்திருப்பேன்.


பழகிவிட்டால் நல்ல தோழி அவள். எனக்கு நல்ல ஜோடியும் அவள். சில பல நேரங்களில் காதலியாகவும் இருந்தாள்.‌ இதுதான் பயத்தை தந்தது.


"அம்மா.. பஸ் வந்துடுச்சி சீக்கிரம் வாங்க.." என்று தன் தாயின் கைப்பிடித்து இழுத்துச் சென்ற சிறுவனை ஜன்னல் வழியே பார்த்தேன். பால் வடியும் முகம் அந்த சிறுவனுக்கு. அடுத்ததாக அவனின் பள்ளியில்தான் வெடிகுண்டு வைக்க முடிவு செய்திருக்கிறேன் நான். பிஞ்சு குழந்தைகளாய் நானும் என் தம்பியும் பசியில் அழுததற்கு பலனாக இந்நாட்டின் அனைவரும் அவர்களின் குழந்தைகளை பலி தரட்டும். 


ஜென்மங்களாய் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்ட சாத்தான் நான். இப்போது பழி வாங்க வந்துள்ளேன். அதனால் விளைவு இப்படிதான் இருக்கும்.


"புவி.." என்றாள் குழலி கீழ் வீட்டிலிருந்து.


நான் ஜன்னலை சாத்தினேன். என் வீட்டின் கதவையும் பூட்டிவிட்டு கீழே சென்றேன்.


நான் உள்ளே சென்றபோது கதவின் மறைவில் நின்றிருந்த குழலி பாய்ந்து என்னை அணைத்துக் கொண்டாள். இந்த நொடி யுகங்களாக உறைய வேண்டும் என்று ஆசையாக இருந்தது. நானே எதிர்பாராத அளவிற்கு இவளிடம் விழுந்து விட்டேன். 


நேற்று பாத்ரூம் கதவில் முட்டிக் கொண்டாள் அவள். வலியை உணர்ந்தேன் நான். எனக்கே விந்தையாகதான் இருந்தது. அனைத்துமே கனவு போல் இருந்தது. அவளை கட்டியணைத்து கிடந்தால் கடமைகளை கூட மறந்து விடுவேன் போல. 


அவளின் செல்ல சிணுங்கல்களில் சிதைந்தது மனம். அவளின் புன்னகையில் எனது எண்ணங்கள் அத்தனையும் செங்கல் சூளையாக வெந்து போனது. நெருப்பை வைத்திருந்தால் கண்களில். பனிக்கட்டியும் சுடும் என்பதை அவளின் விரல் தீண்டல்களில்தான் அறிந்துக் கொண்டேன் நான். 


என் டேப்லெட்டில் உள்ள நோட்ஸில் இவளுக்காகவும் ஒரு கவிதை எழுதி வைத்திருந்தேன். பைத்தியம் எந்த அளவிற்கு முத்தி போயுள்ளது என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கலாம்.


"எங்கே போனிங்க.?" என்றாள் என் முதுகின் பின்னால் இருந்து எட்டி பார்த்து.


நான் திரும்பினேன். என்னை கொன்றது அவளின் விழிகள். எங்கேயாவது கடத்தி சென்று விட வேண்டும் போல இருந்தது. அடர்ந்த இருள் வனத்திற்கு, ஆட்களின், சிறு வண்ண வண்டுகளின் காலடி கூட தீண்டாத இடத்திற்கு கடத்தி செல்ல வேண்டும் போல இருந்தது. இந்த பூமி முடிந்தாலும், அந்த சூரியனின் ஆயுள் முடிந்தாலும் கூட அந்த அடர் வனத்தில் நாங்கள் இருவர் மட்டும் ஓடி பிடித்து விளையாட வேண்டும் என்று ஆசை வந்தது. 


"சும்மா.. ஒரு போன் கால் தம்பியோடு.." என்றேன்.


"ஏன் எப்பவும் நீங்க மட்டும் தனியா போய் பேசிட்டு வரிங்க.? என்னை கூப்பிட்டா நானும் பேசுவேன் இல்ல.?" என்றாள்.


இவளை போல என் தம்பியும் யோசிக்க வேண்டுமே.! இப்படி ஒரு பெண்ணோடு காதலுற்று கர்வம் தொலைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்தால் அவனே நேரில் வந்து இவளை கொன்று விடுவான். 


இவளை பொத்தி வைக்க நினைக்கிறேன் நான். சிப்பிக்குள் காக்கப்படும் முத்தாக, தண்ணீருக்குள் காக்கப்படும் பாசியாக காக்க நினைக்கிறேன் நான். சதைக்குள் ஓடும் ரத்தத்தின் சிவப்பு தட்டுகளாக இவளை எனக்குள் பாதுகாக்க நினைக்கிறேன்.


"இன்னொரு நாள் போன் பண்ணி தரேன்.." என்றேன்.


அவளின் ஏமாற்றத்தை உணர முடிந்தது.


"கிச்சன்ல சாப்பாடு இருக்கு.. சாப்பிடுங்க.. நான் கடைக்கு கிளம்பறேன்.." என்றாள்.


என்னை தாண்டி கொண்டு செல்ல இருந்தவளை நிறுத்தினேன். "நீ சாப்பிடலையா.?" என்றேன்.


"ஒரு மாதிரியா நெஞ்சை கரிக்குது.. நான் மதியம் சாப்பிட்டுகிறேன்.." என்றவளின் முகத்தை ஆராய்ந்தேன். பொய் சொல்வது போல தெரியவில்லை.


"ஹாஸ்பிட்டல் போகலாமா.?" என்றேன்.


வேண்டாமென்று தலையசைத்தவள் "ஈவினிங் பார்க்கலாம்.." என்றுவிட்டு கிளம்பினாள்.


ஹேண்ட் பேக்கை தோளிலும் செருப்பை காலிலும் மாட்டிக் கொண்டவள் நான் பார்த்திருக்கும்போதே சாலையில் இறங்கி மறைந்து போனாள்.


அவளால் என் வீட்டின் உள்ளே வர முடியாது. அனுமதியை நான் தரவில்லை. ஆனால் அவளின் வீடு எனக்கானதாக இருந்தது. அவள் என்னை முழுதாக நம்பினாள். தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை விட என் மீது அதிகம் வைத்திருந்தாள்.


காலை உணவை முடித்தபிறகு கதவை உள் பக்கம் பூட்டி விட்டு மேல் வீட்டிற்கு கிளம்பினேன். பூஜை அறையிலிருந்து அவளின் பாட்டி என்னை பார்த்தாள். உயிரோடு இருந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பாள் என்று நினைக்கிறேன்.


என் வீட்டிலும் உள் தாழ்ப்பாள் போட்டேன். லேப்டாப்பின் முன் அமர்ந்து வேலையை ஆரம்பித்தேன். இந்த நாட்டில் மட்டும்தான் எனக்கு வேலை இல்லை. ஆனால் ஆறு நாடுகளில் உள்நாட்டு சதியை செய்பவர்களுக்கு தலைமையாக நான்தான் இருந்தேன். 


தங்சேயாவிற்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை. என் தம்பி அளவிற்கு இல்லை நான். இதை நான் சொல்லிதான் ஆக வேண்டும். ஒரு உயிரை கொல்ல ஒரு நொடியாவது யோசிப்பேன் நான். ஆனால் அவனோ கொன்று விட்டு கூட யோசிக்க மாட்டான். 


அடுத்த கதையில் அவன்தான் உங்கள் நாயகன் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அவனை விட நான் எவ்வளவு மனசாட்சி உடையவன் என்று உங்களுக்கு புரிய வைக்கதான் சொன்னேன்.


*** நாட்டில் உள் நாட்டு குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருந்த மிஸ் ரூபி வீடியோ காலில் வந்தாள்.


தலைமுடியை குதிரைவாலாக போட்டிருந்தாள். இதை நான் அறிய குழலிதான் காரணம்.


அவள் அமர்ந்திருந்த அறையில் வண்ண விளக்குகள் சுழன்றுக் கொண்டிருந்தது. அணிந்திருந்த சட்டையின் கழுத்து பட்டனையும் கூட போட்டிருந்தாள். அவள் இருக்கும் நாடு குளிர் பிரதேசம். 


"என்ன பாஸ்.. முகம் ஒரு மாதிரி இருக்கு.?" என்றாள். இது அவளுக்கு தேவையில்லாத வேலை. வெறும் பதினெட்டு வயதுதான் அவளுக்கு. அவள் செய்யாத கொலையே இல்லை எனலாம். அவளை நீங்கள் எப்போது சோதித்தாலும் அவளின் மேனியிலிருந்து பத்து துப்பாக்கிகளையும், பதினைந்து வெவ்வேறு விதமான கத்திகளையும் எடுக்கலாம். 


*** நாட்டின் முன்னாள் அதிபரையே கொன்றிருக்கிறாள் இவள். அதுவும் அவரது படுக்கறைக்கே சென்று. இந்த தில் எனக்கு பிடித்திருந்தது. அவளை அல்ல. ஒரு தங்கையை போல அவள். 


"முகம் நல்லாதான் இருக்கு. உன் பார்வைதான் சரியில்ல.." என்றேன்.


முறைத்தாள். "கன்னிப் பையன் உங்க கற்பை எங்கேயோ பறி தந்துட்டிங்க போல.. காதோரம் ஹிக்கியெல்லாம் இருக்கு.." என்றாள் கிண்டலோடு.


அவசரமாக இடது காதை கை வைத்து மறைத்தேன். முட்டாள். தங்கை போல என்றேன் சற்று முன்தான். எந்த தங்கையாவது இப்படி கேவலமான கிண்டல் செய்வாளா.?


"ரைட் சைட் பாஸ்.." என்றாள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி. 


பற்களை கடித்தபடி கையை விலக்கிக் கொண்டேன்.


"என்ன வேலையோ அதை மட்டும் பார்க்கலாமா.?" என்றேன் கோபத்தோடு. கோபம்தான் அவளை வழிக்கு கொண்டு வரும்.


"சாரி பாஸ்.." என்றவள் புகைப்படம் ஒன்றை காட்டினாள். "இவன் இந்த நாட்டோட ஒரு பிஸ்னஸ் மேன். இவன்தான் இந்த நாட்டையே தன் கட்டுப்பாட்டுல வச்சிருக்கான். இவனோட பொருட்கள் மட்டும்தான் வெவ்வேறு பெயர்களோடு இந்த நாட்டோட சந்தைகளில் இருக்கு. நாட்டு மக்கள் ஏதோ ஒரு விதத்துல இவனோட கம்பெனிக்காகவும் இவனுக்காகவும்தான் வேலை செய்றாங்க. தொண்ணூறு சதவீத மக்களுக்கு அவங்களோட மறைமுக முதலாளி இவன்தான்னு கூட தெரியாது. இந்த நாட்டுல அரசாங்கமே இவன்தான். இரண்டு கட்சிகளையுடைய இந்த நாட்டுல இரண்டு கட்சியுமே இவனுக்காகதான் வேலை செய்யுது. மக்களுக்கு எந்த கட்சி மேல வெறுப்போ அப்ப அதோட எதிர் கட்சியை ஜெயிக்க வைக்கிறான். ஆனா நாட்டை இவன்தான் நடத்துறான். இவனுக்கு தாய் நாட்டு பற்று கிடையாது. பணமும், நிலமும், தங்கமும், ஜெட்களும் மட்டும்தான் ஆசை. இவனோட தொழிலை அழிச்சா இந்த நாட்டோட பொருளாதாரத்தையே சரிக்கலாம். இவனை கொன்னா நாட்டோட அரசியலையே அழிக்கலாம்.. ஆக மொத்தம் இவனோட சாம்ராஜ்யம் அழியும் போது நாடும் மறைமுகமா வீழும்.." என்றாள்.


அவனை பற்றி நானும் விசாரித்துள்ளேன். இவள் சொன்னது உண்மைதான். நாட்டையே தன் கையில் வைத்திருப்பவன் பாதுகாப்பற்றவன். அவனை அழிக்கையில் நாடும் தரை மட்டமாகும். இதை புரியாத முட்டாள்கள்தான் பொருளாதாரம் முதல் மக்களின் அரசியல் தேர்வு வரை அனைத்தையும் ஒருவன் கையிலோ அல்லது சொற்பமானவர்கள் கையிலோ தந்து வைப்பார்கள். அந்த நாடு அழிவதில் எனக்கு எந்தவித குற்ற உணர்வும் இல்லை.


"அவனை எப்படி கொல்றதுன்னு ப்ளான் பண்ணி சொல்றேன்.." என்றேன்.


"அவனை கொல்வது கன்பார்மா பாஸ்.?" என்றாள்.


"ஆமா.. அவனை முன்பை விட அதிகம் கவனி.." என்றேன்.


"அவனை கொன்னுட்டேன் பாஸ்.." என்றாள்.


ஆச்சரியத்தோடு அவளை பார்த்தேன். அவள் தன் லேப்டாப்பை அந்த பக்கமாக திரும்பினாள். அவள் இருந்த அறையின் ஓரத்தில் நெஞ்சிலிருந்து ரத்தம் வழிந்தபடி இறந்துக் கிடந்தான் அவள் புகைப்படத்தில் காட்டியவன். 


விசயத்தை முடித்து விட்டு என்னிடம் அனுமதி கேட்கும் இந்த ரூபிதான் இந்த தொடரின் மூன்றாம் பாகத்தின் நாயகி என்று இன்றே சொல்ல வேண்டிய விதி போலும் எனக்கு. 


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments