Advertisement

Responsive Advertisement

மௌனங்கள் 25

 புவின் POV


இன்றோடு இரண்டு நாட்கள் கடந்து விட்டது. என் மனநிலையை வார்த்தையால் விவரிக்க முடியாது. குழப்பம் அந்த அளவுக்கானது. குழலி இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை. அவள் இறந்தாளா இருக்கிறாளா என்று கூட தெரியவில்லை. 


புது டிரைவர் எனக்கான உணவை கொண்டு வந்து வைத்தான். 


"சாப்பிடுங்க சார்.." என்றான். கோபத்தில் உணவு தட்டை தூக்கி வீசினேன். மற்றொரு நேரமாக இருந்திருந்தால் இந்த விசயத்திற்கு என் கையை நானே வெட்டியிருப்பேன். நான் ஏன் இப்படி மாறினேனோ அதற்கு காரணமான உணவையே கீழே சிந்தி விட்டிருந்தேன்.


பசிதான் பெரிய வலி என்று இத்தனை வருடங்களாக நம்பிக் கொண்டிருந்தேன் நான். ஆனால் குழலி என் எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டாள். காதலுக்காக பட்டினி கிடந்து செத்தவர்களை பற்றி அறந்தபோது அவர்களை முட்டாள் என திட்டிய நானேதான் இப்போது உணவை கூட மதிக்காமல் அவள் மட்டும் வேண்டுமென்று தேடிக் கொண்டிருக்கிறேன். பசியை விட பெரிய வலி காதல். 


"சார்.. அந்த பொண்ணை நாங்களும்தான் தேடிட்டு இருக்கோம் சார். அந்த பொண்ணு இப்ப தனசேகரோட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கா.. அவன் எங்கே வச்சிருக்கான்னு தெரியல.. நம்ம ஆள் ஒருத்தன் தனசேகரோட நிழல் போல இருக்கான். சீக்கிரம் அந்த பொண்ணை கண்டுபிடிச்சிடலாம். நம்புங்க சார்.." என்றான் டிரைவர்.


யாரை நம்பட்டும் நான்.? 


குழலி POV


இத்தோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது நான் வீட்டிலிருந்து தப்பி வந்து. நான் காவல் நிலையத்திற்கு வந்தபோது அந்த காவல் நிலையமே சூறையாடப்பட்டு கிடந்தது. அவர்கள் தேடும் தீவிரவாதியை எனக்கு தெரியும் என்று சொன்னபோது அங்கிருந்த யாருமே என்னை நம்பவில்லை.


'பணத்துக்காக பொய் சொல்லாதம்மா.. நாங்களே கடுப்புல இருக்கோம்..' என்று எரிச்சலோடு திட்டினார் ஒரு பெண் காவலர்.


நான் வெகுநேரம் போராடி பிரச்சனையை விளக்கி சொல்ல முயன்ற நேரத்தில் அந்த காவல் நிலையத்தின் அதிகாரி தன் மேலதிக்காரிக்கு போன் செய்தார். நானே போனை வாங்கி பேசினேன். நான் சொன்னதை அவர் நம்பினார். 


இந்த இடத்திற்கு அவர் வர போவதாக அனைவரும் பேசிக் கொண்டார்கள். என் வீட்டின் முகவரியை வாங்கிக் கொண்டு காவலதிகாரிகள் கிளம்பினர். என்னை அந்த பெண்காவலர் முழுதாக சோதித்தார். என் உடலில் எந்த கருவியாவது இருக்கிறதா என்று கேட்டார். இல்லையென்று சொன்ன பிறகும், அவருக்கே திருப்தியாகும் வரை தேடிய பிறகு என்னை விட்டு விலகி போனார்.


ஒரு மணி நேரம் கடந்தது. காவல் நிலையத்திற்குள் புயலாக நுழைந்தார் அவர். அடிக்கடி இவரை டிவியில் பார்த்திருக்கிறேன் நான். 


என் அழுத கண்களை கண்டவர் "குடிக்க தண்ணீர் வேணுமா.?" என்றார்.


"மேடம் தந்தாங்க சார்.." என்று என் தாகம் தீர்த்த அந்த பெண் காவலரை கை காட்டினேன்.


"சரிம்மா.. நீ இங்கே இருப்பது உனக்கு பாதுகாப்பு கிடையாது. எங்களோடு வரியா.?" என்றார் அவர்.


"சார் புவினை பிடிங்க சார். அவன் இங்கிருந்து தப்பிச்சி போக போறதா பேசிட்டு இருந்தான்.." நான் நிலமையை புரிய வைக்க முயற்சி செய்தேன்.


"அந்த வீட்டுல இருந்து அவன் தப்பிச்சிட்டான்ம்மா. அவன் உங்களை தேடி வருவான். எங்ககிட்ட இருக்கும் பெரிய சாட்சி நீங்க. உங்க பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். ப்ளீஸ் எங்களோடு வாங்க.." என்றவர் முன்னால் நடந்தார்.


'புவின் எப்படி அதற்குள் தப்பி இருப்பான்.? திரும்பி வந்து பார்த்தபோது நான் அங்கே இல்லன்னு தெரிஞ்சதும் விசயத்தை புரிஞ்சிக்கிட்டானா.? மறுபடியும் ஒரு தப்பை பண்ணிட்டேன். அந்த வீட்டுல மறைஞ்சி நின்னு அவன் உள்ளே வந்ததும் அவனை அடிச்சி மயக்கம் போட வச்சிருக்கணும். அதுக்கப்புறம்தான் இங்கே வந்திருக்கணும். ஏன் நான் ஒவ்வொரு முறையும் இதே தப்பை செய்றேன்னு எனக்கே தெரியல..'


என் யோசனையில் நான் இருந்தபோது "ஏறுங்கம்மா.." என்றார் அந்த அதிகாரி. அது ஒரு புது மாடல் கார். போலிஸ்காரர்களுக்கு இப்போதெல்லாம் இந்த வாகனத்தைதான் தருகிறார்களா என்று குழப்பமாக இருந்தது. அவரை நிமிர்ந்து பார்த்தேன். என் பார்வையை வைத்து உள்ளத்தை படித்து விட்டவர் "போலிஸ் வாகனம் உங்களுக்கு பாதுகாப்பானது இல்ல.." என்றார்.


விசயம் முழுதாக புரியவில்லை. 'தீவிரவாதியை நம்பியவளுக்கு இந்த அதிகாரியை நம்புவதில் என்ன தயக்கம்.?' என்று மனசாட்சி கேள்வி கேட்டது.


காரில் ஏறி அமர்ந்தேன். 


"புவின் எங்கே போயிருப்பான் சார்.?" கவலையோடு கேட்டேன் நான்.


"கண்டுப்பிடிச்சிடலாம் பயப்படாதிங்க.." தைரியம் கூறினார் அவர். அவரை ஏனோ எனக்கு பிடித்திருந்தது.


புவினின் நினைவில் நேரம் கடந்ததே தெரியவில்லை. 


"இறங்கும்மா.." என்றார் அதே அதிகாரி. காரை விட்டு கீழிறங்கினேன். என் முன்னால் பெரிய கட்டிடம் ஒன்று இருந்தது. ஆனால் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.


"பயப்படாம வாங்கம்மா.! என்னை உங்க அண்ணன் மாதிரி நினைச்சிகங்க.." என்றவர் கர்ச்சீப்பை என்னிடம் நீட்டினார்.


அழுதிருக்கிறேன் என்பது கர்ச்சீப்பை சில நொடிகள் பார்த்த பிறகுதான் புரிந்தது. கர்ச்சீப்பை வாங்கி கண்களையும் கன்னத்தையும் துடைத்துக் கொண்டேன். 


"என் பேர் உங்களுக்கு தெரியுமான்னு தெரியல. அதனால அறிமுகம் செஞ்சிக்கறேன். நான் தனசேகர்.." என்றார் அவர் அந்த கட்டிடத்தின் வராண்டாவில் நடந்தபோது.


"நான் குழலி சார்.." என்றேன். என் குரல் எனக்கே ஒரு மாதிரியாக ஒலித்தது. தொண்டை வறண்டு விட்டது போலும்.


பாதை நிறைய இடத்தில் திரும்பியது. வளைந்தது. கடைசியாக ஒரு அறையின் கதவை திறந்தார். நிறைய அதிகாரிகள் அங்கே இருந்தார்கள். அந்த அறையின் ஒருப்பக்க சுவரில் நாட்டின் வரைப்படம் தீட்டப்பட்டு இருந்தது. மேஜை ஒன்றில் மேல் நாட்டின் கொடி காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் எங்களின் சுதந்திரத்தை பறைச்சாற்றும் என் நாட்டின் கொடி அது. அசைந்துக் கொண்டிருந்த கொடியை பார்த்தபிறகு மனம் சற்று அமைதிப்பட்டது. நிச்சயம் இந்த குழப்பத்திலிருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை பிறந்தது.


"இப்படி உட்காரும்மா.." என்றார் தனசேகர். அவர் கை காட்டிய நாற்காலியில் அமர்ந்தேன். தனியறையில் விசாரிக்கவில்லை. அதுவே என் பயத்தை கொஞ்சம் குறைத்து விட்டது.


"அவனை எத்தனை நாளா தெரியும்.?" என்றார் அவர்.


"அஞ்சாறு மாசமா தெரியும் சார்.." இதை சொல்லுக்கையில் எனக்கே வெட்கமாக இருந்தது.


"வாவ்.. அப்படின்னா ஆரம்பத்துல இருந்தே பழகிட்டு இருந்திருக்கிங்க.? ஆனா அப்ப ஏன் எங்களுக்கு சொல்லல.?" கோபத்தோடு கேட்டபடி முன்னால் வந்தார் ஒரு அதிகாரி. மற்ற அதிகாரிகள் அனைவரும் என்னை பார்வையால் கொன்றனர்.


"விஷால் கண்ட்ரோல் யுவர் செல்ப்.." என்று அவரை கண்டித்தார் தன சேகர்.


"அஞ்சாறு மாசமா தெரிஞ்சிருந்தும் நம்மகிட்ட சொல்லல சார்.." விஷால் பதிலுக்கு கோபப்பட்டார்.


"எனக்கு அப்ப தெரியாது சார்.." என்று நான் சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்த்தனர்.


அழுகையை அடக்க முயன்று தோற்று போனேன். விம்மல் ஒன்று என்னை மீறி வந்தது. "தெரியாது சார் அப்ப.. நிஷாவையும் மதியையும் அந்த மால்ல அவன் வச்ச குண்டுக்கே சாக தந்தபோது கூட எனக்கு தெரியாது சார். கடைசியா போன வாரத்துல ஶ்ரீயும் நானும் போயிருந்த கேம் சென்டர்ல பாம் வெடிச்சி அந்த இடத்துல ஶ்ரீ செத்து போனபோது கூட இது எல்லாத்துக்கும் அவன்தான் காரணம்ன்னு எனக்கு தெரியாது சார்.." அழுகையோடு சொன்னேன் நான். 


என் அருகே வந்து நின்ற பெண் அதிகாரி என் தலையை வருடி தந்தார். அங்கிருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து நீட்டினார். அழுதபடியே குடித்தேன். 


"யார் அந்த நிஷா, மதி, ஶ்ரீ.?" விஷால் என்னருகே அமர்ந்தபடி கேட்டார்.


"நிஷா என் பிரெண்ட்.. மதியும் ஶ்ரீயும் அவளோட தம்பிங்க.." என்றேன். அவர்களை நினைக்கையில் அழுகை அதிகமாக வந்தது.


"ஓகே.. கூல் டவுன்.. என்ன நடந்ததுன்னு ஆரம்பத்துல இருந்து சொல்லுங்க. நீங்க எங்களை பார்த்து பயப்பட வேணாம். நாங்க உங்க பாதுகாப்பை உறுதிப்படுத்துறோம். உங்க மேல எந்த கேஸூம் பதிய மாட்டோம்ன்னு வாக்கு தரோம்.." என்றார் விஷால். 


அழுகையிலும் சிரிப்பு வந்தது எனக்கு.


"தயவுசெஞ்சி என்னை தூக்குல போடுங்க சார். இதான் நியாயம். நாட்டை அழிக்க வந்த தீவிரவாதிக்கு தெரிஞ்சோ தெரியாமலோ என் வீட்டுல இடம் தந்திருக்கேன். அவனுக்கு தாலி கட்டாத பொண்டாட்டியா இருந்திருக்கேன். சட்டபடி என்னை நீங்க தூக்குல போடணும் சார். நான் எனக்கு தெரிஞ்ச எந்த விசயத்தையும் மறைக்க மாட்டேன். எனக்கு தேவை அவனை நீங்க பிடிக்கறதுதான்.!" என்றேன்.


அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்னை. "அவனை இப்பவும் லவ் பண்றேன் சார், ஏனா அவனும் ஒரு மனுசன்.! ஆனா அவன் வாழ தகுதியில்லாதவன் சார்.." என்றுவிட்டு நடந்த அத்தனையையும் அவர்களிடம் சொன்னேன். அனைவருமே என்னை பைத்தியம் என்றுதான் நினைத்திருப்பார்கள். முன்பின் தெரியாதவனோடு இவ்வளவு சீக்கிரத்தில் யாருமே நெருங்கி பழகியிருக்க மாட்டார்கள்.! நான்தான் பேன்டஸியையும் நிஜத்தையும் ஒன்றாய் இணைத்து குழப்பிக் கொண்டேன்.


அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்தார்கள் அவர்கள். 


"இப்ப உங்களுக்கு ஓகேவா.? எங்கேயாவது அடிப்பட்டிருக்கா.? டாக்டர்ஸை வர சொல்லட்டுமா.?" அக்கறையோடு கேட்டார் தனசேகர்.


"ஏன் சார் நீங்க என்கிட்ட நல்லவரா நடந்துக்கிறிங்க.? நான் ஒரு அக்யூஸ்ட் சார். என் மேல நீங்க கருணை காட்ட கூடாது.." என்றேன் கோபத்தோடு.


மௌனமாக சிரித்தவர் எதுவும் சொல்லாமல் விஷால் பக்கம் பார்த்தார்.


"அவனை கண்டுபிடிக்கணும் விஷால். இவங்க வீட்டை சுத்தி வொர்க் ஆகிட்டு இருந்த போன் சிக்னல்ஸ் எல்லாத்தையும் கண்டுபிடிச்சி அதை வச்சி ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பாருங்க. இதுக்கு மேல கிளம்பற அத்தனை பிளைட், கப்பல்கள்ல யாரெல்லாம் பயணப்படுறாங்கன்னு தரவா செக் பண்ணுங்க.." என்றார் அவர். 


அவரின் வேகம் எனக்கு பிடித்திருந்தது. இவ்வளவு வேகமாக செயல்பட்டும் கூட ஏன் புவினை இத்தனை நாளாக பிடிக்காமல் போனார் என்று சிறு கோபம் வந்தது.


அவர் என்னை குற்றவாளி என்று சொல்லி திட்டவில்லை. தனியறையில் அடைத்து வைத்து உணவில்லாமல் வருந்த வைக்கவில்லை. தோழி போல பழகினார். ஒரு சகோதரனை போல என்னை கவனித்துக் கொண்டார். இரண்டு நாட்களாக அவரின் காவலில்தான் இருக்கிறேன். அழுதபோதெல்லாம் யாராவது ஒருவர் அருகில் வந்து 'இது உன் தவறு இல்லை' என்று ஆறுதல் சொன்னார்கள்.


தனசேகர் POV


அந்த பெண் இப்போது என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறாள். இவள் என்னிடம் இருப்பது எங்கள் குழுவையும் புவினையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.


இவளை வைத்து அவனை பிடிக்க திட்டமிட்டிருக்கிறேன் என்றால் அது பொய் அல்ல. ஆனால் நான் இவளை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இவளுக்காக இவள் வரும் முன்பே காவல் நிலையத்தையே ஆள் அனுப்பி சூறையாடி இருக்கிறான் புவின். 


அதுதான் அவன் செய்த முதல் தவறு. அவனுக்கு இவள் தேவை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டான். காவல் நிலையத்தை சூறையாடிய கும்பலை தனியே அழைத்து கை கால் உடைக்க வைத்தேன். ஆனால் அவர்களை அனுப்பிய ஆள் யார் என்பதை சொல்ல மறுத்து விட்டார்கள். அவர்களை இன்னமும் கும்மியெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் எதையாவது சொல்வார்கள். 


அவர்களுக்கு வந்த போன் அழைப்புகளின் நம்பர்களை சோதித்தோம். போலி கணக்கில் பெறப்பட்ட சிம் அது. அழைக்கும்போது குழலியின் வீட்டருகே கிடைத்த சிக்னல் அதன்பிறகு எங்கும் கிடைக்கவில்லை. இப்போது அந்த சிம் இருந்த போன் அழிந்து போயிருக்கலாம். ஆனால் நாங்கள் நிச்சயம் புவினின் கையாளை கண்டுபிடிப்போம்.


குழலியை அவன் விரும்புகிறான். இதை என்னால் நம்ப முடியவில்லைதான். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் இணைப்பை நான் பயன்படுத்திக் கொள்ள போகிறேன். 


அவளை பயப்படுத்த விரும்பவில்லை நான். அதனால்தான் அவளை தனியறையில் அடைக்கவில்லை. அவளை தூக்கில் போட சொல்லி கேட்டாள். அதை பற்றி நீதிபதி சொல்வார். ஆனால் இவளை நீதிபதியிடம் சேர்க்கும் முன் அவனை பிடித்தாக வேண்டும். எனது ஒரே தேவை அவன் மட்டுமே. 


அடுத்த அத்தியாத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments