Advertisement

Responsive Advertisement

அத்தியாயம் 111

 ⚠️ வார்னிங்; அழுத்தமான சம்பவங்களை கொண்ட அத்தியாயம்..


சங்கவி எங்கே இருந்து போனாளோ அதே ஹாலின் மையத்தில் நின்றிருந்தாள் குந்தவி. அரை மணி நேரம் கடந்திருக்கலாம். ஆனாலும் நகர மனமில்லை. தலை முழுக்க வலித்தது. மண்டையில் காற்று தீண்டினால் கூட வலிக்கும் என்றே தோன்றியது.


பற்களை அரைத்தவள் காற்றை குத்தினாள். தங்கையின் கையை ஆதீரன் அழுத்தமாக பிடித்த கணம் அவளின் மனதுக்குள் சுற்றி சுழன்றுக் கொண்டிருந்தது. சங்கவியின் இந்த சிறு வலியையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால். ஐந்து வருடங்களில் தங்கை மீதான தனது அன்பு தீர்ந்து போய் விடும் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய கட்டுக்கதை என்பதை அவளே இப்போதுதான் உணர்ந்தாள்.


"பெரிய தப்பு பண்ணிட்டேன். பயந்திருக்க கூடாது. அப்பவே திரும்ப வந்திருக்கணும்.." மெலிதாக கர்ஜித்தாள்‌.


இப்போதும் கூட கொஞ்சம் பயம்தான். ஆனால் அதற்கு மாற்று சக்தி வைத்திருந்தாள்‌.


***


"ஐயோ சங்கவி.." அம்மாவின் கதறலில்தான் திரும்பினான் ஆதீரன். முதலில் அம்மாவைதான் பார்த்தான். பிறகுதான் படிகளில் உருண்டுக் கொண்டிருந்த சங்கவியை பார்த்தான். 


முதலில் ஒன்றுமே புரியவில்லை. மனம் முழுக்க கோபமும் ஆத்திரமும்தான் இருந்தது‌. அதை தாண்டி இங்கே நடக்கும் நிகழ்வு மனதில் பதிய இரண்டு நொடிகள் ஆனது.


"சங்கவிம்மா.." காத்தவராயன் அவசரமாக படிகளில் ஏறி ஓடினார்.


பத்து படிகள் முன்னதாகவே மருமகளை பிடித்து விட்டார். தலையில் ரத்தம் வழிய வயிற்றை பிடித்தபடி அவரின் காலடிக்கு உருண்டு வந்து சேர்ந்தவள் அதன் பிறகுதான் "அம்மா.." என்றே கத்தினாள்.


ஆதீரனின் கைப்பிடியிலிருந்து நழுவி விழுந்த கணமே வயிறும் நெற்றியும் படிகளின் முனைகளில்தான் சென்று மோதியிருந்தது. விழுந்த வேகத்தில் நாக்கையும் ஒரு ஓரத்தில் கடிந்துக் கொண்டிருந்து விட்டாள். அதனால் அப்போதைக்கு இந்த வலியினாலும் அதிர்ச்சியினாலும் சட்டென்று கத்தவும் முடியாமல் போய் விட்டது.


கால்கள் இரண்டும் நடுங்க படிகளில் ஓடி வந்தாள் காந்திமதி.


ஆதீரன் அதற்கும் முன்பே ஓடி வந்து விட்டிருந்தான்.


"சங்கவி.." எழுப்பி அமர வைத்தான். குரல் நடுங்கியது. இதயமும் நடுங்கியது. 


"என்ன பண்ண நீ.?" என்றான் கோபத்தோடு.


"கத்தாதடா.. முதல்ல ஹாஸ்பிட்டல் போகலாம்." அவசரப்படுத்தினாள் காந்திமதி.


"போய் கார் எடு.." என்றார் காத்தவராயன்.


"எ.. என்னால முடியாது. நீங்க போங்க.." என்ற ஆதீரன் மனைவியை தூக்கினான்.


"இரக்கமா இது.?" படிகளில் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தவன் அவளின் கேள்வியால் சட்டென்று நின்றான்.


"எதுக்கு நிக்கற.? சீக்கிரம் போடா.." காந்திமதி அவனின் தோளில் அடித்தாள்.


"முட்டாள்.." மனைவியிடம் எரிந்து விழுந்தபடியே வாசலை நோக்கி நடந்தான்.


"இந்த அஞ்சி வருச வாழ்க்கையும் இரக்கம்ன்னு நீங்க நம்புறிங்களா.?" பயணத்தின் போது கேட்டாள்.


"நான் நினைக்கல. ஆனா நீதான் சொன்ன.." அவளின் இமைகளை நனைத்த ரத்தத்தை துடைத்துக் விட்டபடி சொன்னான். நெற்றியில் காயம் சற்று ஆழமாகவே தெரிந்தது. பயத்தில் முதுகு வியர்த்தது அவனுக்கு.


ஒன்றும் ஆக கூடாது என்று வேண்டிக் கொண்டான். ஆனால் அவளின் முகம் வேறு ஒன்றை சொல்லியது. எட்டு முறை பார்த்த அதே வலி நிறைந்த முகம். 


'எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை.?' என கேட்டவன் தனது கேள்விக்காக தன்னிடமே வெட்கினான்.


'நீ விதைச்ச வினையெல்லாம் இப்ப உன்னையே அறுக்குது ஆதி. எட்டு முறை இல்ல.. இத்தோடு ஒன்பதாவது முறை. அவளை சேர இவளுக்கு கண்ணீரை தந்த‌.. இப்ப அந்த கண்ணீரேதான் உனக்கான பதிலை திருப்பி தருது..' மனசாட்சி சொன்னது கேட்டு உடம்பு மொத்தமும் அதிர்ந்தது.


'ஐயோ.. நான்தான் தப்பு பண்ணேன். நான்தானே பாவம் பண்ணேன். எல்லா தண்டனையையும் எனக்கு தர வேண்டியதுதானே.? ஏன் இவளுக்கு தரணும்.?' என்று மனதுக்குள் அழுதான்.


'நீயும் கூடத்தான் யாரையோ பழி வாங்க இவளை பிடிச்சிகிட்ட. இப்ப விதியும் உன்னை பழி வாங்க இவளையே பிடிச்சிக்கிச்சி..'


ரத்தம் தோய்ந்திருந்த இடது கரத்தால் தலையை கோதிக் கொண்டான். 'இதுக்கு குந்தவியே பரவால்ல.. மனசாட்சி நேரம் காலம் பார்க்காம ரொம்ப பழி வாங்குது..' தன்னையே திட்டிக் கொண்டான்.


"நான் சொல்ல வந்ததை நீங்கதான் முழுசா கேட்கல மாமா.." பற்களை கடித்து வலி பொறுத்தபடி சொன்னாள்.


"அதுதான் இரக்கம்ன்னு சொல்லிட்டியே! அப்புறம் வேற என்ன கேட்கட்டும்.?" என்றான் எரிச்சலாக. 


காத்தவராயன் கண்ணாடி வழியே மகனை பார்த்துக் கொண்டே காரை செலுத்தினார்.


"எருமை.. அவ என்ன சொல்ல வரான்னு கூட கேட்காம இஷ்டத்துக்கு கத்துற.. இவளுக்கு அடிப்பட காரணம் நீதான். பேர புள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆச்சின்னு வை, உன்னை தோலை உரிச்சிடுவேன்.." என்று மிரட்டினார் காரின் வேகத்தை கூட்டிக் கொண்டே.


"வாயை வைக்காதிங்க.. ஒன்னும் ஆகாது.." பதட்டமாக சொன்னாள் காந்திமதி.


"முதல்ல இரக்கம்தான் மாமா. இல்லன்னு சொல்லல.. உங்க தற்கொலை முயற்சிகளை பார்க்க முடியல என்னால. நீங்க சாகறதை ஏத்துக்க முடியல. அடிப்படையான இரக்கம்தான். ஆனா எனக்கு உங்களை பிடிச்சிருந்தது. என் அக்காவோட காதலர் இவர். இவர் மேல ஆசை வர கூடாது, காதல் வர கூடாதுன்னு எவ்வளவு டிரை பண்ணேன் தெரியுமா?" கண்களில் நீர் வழிய கேட்டாள்.


ஆதீரன் காரின் வெளியே உள்ள உலகத்தை மறந்து விட்டான். காருக்குள் இருந்த பெற்றோரையும் மறந்து விட்டான்‌. அவனின் உலகில் அவனும் கூட இல்லை. சங்கவி மட்டும்தான் வியாபித்து இருந்தாள்.


"உங்க மனசுல நான் மட்டும்தான் இருக்கணும்ன்னு பேராசை பிடிச்சி இருந்தேன். என் அக்காவை நினைச்சி பொறாமையா இருக்கும்.  இது எதுவும் காதல் இல்லையா மாமா.? அத்தனையும் இரக்கமா.?" 


அவளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை அவனால். இதயம் சில விசயங்களை ஆழமாக உணரும் தருணம் இது. மௌனமாய் அவளின் முகம் பார்த்து இருந்தவன் அவளின் கன்னத்தில் ஈரத் துளிகளை கண்ட பிறகே தன் கன்னம் தொட்டுப் பார்த்தான். கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.


மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்குள் மனைவியை அனுப்பி விட்டுவிட்டு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்தான். தலையை பிடித்தபடி அமர்ந்தவனின் அருகே வந்து அமர்ந்தனர் காந்திமதியும் காத்தவராயனும்.


"என்னதான் பிரச்சனை.?" 


"குந்தவி வந்திருக்கா.." என்றவனை குழப்பத்தோடு பார்த்த காந்திமதி "எந்த குந்தவி.?" என்றான்.


"அவ சாகலம்மா.." என்றான் எதிரே இருந்த சுவரை வெறித்தபடி.


"ஆனா.."


"அவளுக்கு பழசு மறந்துடுச்சி. அவ இறந்துட்டதா நினைச்சிட்டோம் நாம. அவளுக்கு இப்ப பழசு நினைவுக்கு வந்துடுச்சி. வந்துட்டா.." 


"ஒன்னும் புரியல எனக்கு.." காத்தவராயன் கடுப்போடு சொன்னார்.


காந்திமதி தான் செய்ததை சொன்னாள். ஆதீரன் அவன் செய்ததை சொன்னான். காத்தவராயன் இருவரையும் மிருகத்தைப் போல பார்த்தார்.


"அறிவு இருக்கா உங்களுக்கு.? நெஞ்சுல கொஞ்சமாவது ஈரம் இருந்திருந்தா இப்படி செய்ய தோணியிருக்குமா.?" எரிந்து விழுந்தார்.


காந்திமதி வாய் திறக்கவில்லை. "நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா. அப்ப எதுவும் தெரியல. இப்ப உணர்ந்துட்டேன்.." சிறு குரலில் பதிலை சொன்னான் ஆதீரன்.


"அந்த பொண்ணுகிட்ட சாரி கேளு.." என்றவர் மனைவியின் புறம் பார்த்துவிட்டு "நீயும்.." என்றார்.


காந்திமதி சரியென்று தலையாட்டினாள். 


***


குந்தவி அதே இடத்தில்தான் அசையாமல் நின்றிருந்தாள். மாத்திரை விழுங்கினால் கொஞ்சம் தேறும் என்று தோன்றியது. ஆனால் தயக்கமாக இருந்தது. யோசனையில் இருந்தவளின் போன் ஒலித்தது. சென்று எடுத்தாள். அப்பாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.


"ஹலோ.."


"குந்தவி பாப்பா.. சங்கவி பாப்பாவுக்கு பயங்கர அடி பட்டுடுச்சி.." என்றாள் பவளம். தந்தையின் போனில் இவளுக்கென்ன வேலை என்று கேள்வியை இறுதிக்கு தள்ளி விட்டு "என்னாச்சி.?" என்றாள் இயல்பாக தோன்றிய பதட்டத்தோடு.


"என்ன ஆச்சின்னு தெரியல. இரண்டு பேருக்கும் சண்டை போல.. ஆதி பாப்பாவை மேலேயிருந்து படியில தள்ளி விட்டுட்டாரு.. பயங்கர அடியாம். குழந்தையும் தாங்காது. பாப்பாவும் தாங்காதுன்னு பேசிக்கறாங்க.." 


அறை தலைகீழாக சுற்றுவது போலிருந்தது. அவசரமாக சென்று சோஃபாவில் விழுந்தாள். போனை வைத்துவிட்டு கரங்கள் நடுங்க மாத்திரையை பிரித்து விழுங்கினாள். தண்ணீரை தொண்டை‌ வரை நிரப்பிக் கொண்டு போனை கையில் எடுத்தாள்.


"இப்ப எங்கே இருக்காங்க.?" சாவியை மறு கையில் இறுக்க பிடித்தபடி கேட்டாள்.


"அவளோட மாமனார் ஹாஸ்பிட்டல் கூட்டிப் போனார்ன்னு சொன்னாங்க. என்ன ஹாஸ்பிட்டல்ன்னு தெரியல. இருங்க நான் விசாரிச்சி சொல்றேன்.." என்றவளிடம் "தேவையில்ல. நானே பார்த்துக்கறேன்.." என்று இணைப்பை துண்டித்தாள். 


சங்கவி விட்டுச் சென்றிருந்த போனை கையில் எடுத்தாள். ஆதீரனின் பிறந்தநாள்தான் பாஸ்வேர்டாக இருந்தது.


ஆதீரன் என்று பதிவு செய்யப்பட்டிருந்த எண்ணுக்கு அழைத்தாள். 


"ஹலோ.." கம்பீரமான ஆனால் திமிர் இல்லாத ஆண் குரல் ஒன்று கேட்டது. அவனின் திடீர் தந்தையாக இருக்க வாய்ப்புள்ளது என்று யூகித்துக் கொண்டாள்.


"எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கிங்க.?" 


அவர் மருத்துவமனையின் பெயரை சொன்னதும் அழைப்பை துண்டித்து விட்டு எழுந்து ஓடினாள்.


***

இரவு மணி பதினொன்றை தாண்டி விட்டிருந்தது.


ஆதீரன் வெள்ளை உடையை நகர்த்தினான். முகத்தைப் பார்த்தான். இதயம் கண்ணாடி சில்லுகள் போலவே நொறுங்கியது. நொறுங்கிய சில்லுகள் அனைத்தும் உடம்பு முழுக்க குத்தியது.


எத்தனை கனவுகளை தந்தவள் இவள்? துணியை பழையபடி போர்த்தினான். முகத்தை மூடிக் கொண்டு குலுங்கினான். உள்ளங்கை முழுக்க கண்ணீர் நிரம்பியது.


எட்டு முறையும் வலி இருந்தது. ஆனால் ஆறு மாதங்களுக்கு கனவுகளை தந்துவிட்டு உடைத்து போனவள் இவள் மட்டும்தான். உலகமே கை நழுவி போனது போலதான் இருந்தது. ஆறு மாத கனவு கரைந்து போவது அவ்வளவு சாதாரணம் இல்லை. 


முதன் முதலாக கண்ணீரை தந்தவள் குந்தவி. அவள் தந்த அதே வலியை இவளும் தந்து விட்டாள். அதை விட அதிக வலி என்றே சொல்லலாம். 


'எல்லாமே என்னாலதான். அவ போகவும் நான்தான் காரணம். இவ போகவும் நான்தான் காரணம்..' 


செவிலியை ஒருவர் கைகளில் தூக்கினார்.


"என்ன பண்ண போறிங்க?" 


"புதைக்க சொல்லணும்.." 


பிடுங்கிக் கொண்டான்.


"நா.. நானே பார்த்துக்கறேன்.." என்றான் நெஞ்சோடு அணைத்தபடி.


செவிலியை அவனை ஏதோ போல பார்த்துவிட்டு நகர்ந்துப் போனார். 


அங்கிருந்த வெற்று துணிகளில் இன்னும் இரண்டை எடுத்து கையில் இருந்தவளை சுற்றி சுற்றினான்.


வெளியே நடந்தான். தந்தையின் முன்னால் வந்து நின்றவன் இடது கையை நீட்டினான்.


"கார் சாவி கொடுங்க.." 


"என்ன அது.? எதுக்கு சாவி.?" கேட்டபடியே எடுத்து தந்தார்.


"வந்துச் சொல்றேன்‌.." என்றவன் அவரை தாண்ட முயல, அவனின் புஜத்தை பிடித்து நிறுத்தினார்.


"நானும் வரேன்.." என்றார் அவனின் கையிலிருந்த துணி குவியலை பார்த்தபடி. செவிலியை சற்றுமுன்தான் வந்து காந்திமதியை அழைத்துப் போயிருந்தார். காரணம் இப்போதுதான் இவருக்கு புரிந்தது. வளர்ந்துக் கொண்டிருந்த வாரிசை இழப்பது அவ்வளவு எளிதான உணர்வை தந்து விடுவதில்லையே!


"இல்லப்பா. நீங்க வேணாம். அவளுக்கு துணையா இருங்க. நான் வந்துடுறேன்.." என்றவன் வெளியே நடந்தான்.


வீட்டின் முன்னால் கொண்டு வந்து காரை நிறுத்தினான் ஆதீரன். அருகே இருந்த இருக்கையை பார்த்தான். உடனே பார்வை மங்கியது. கண்களை துடைத்துக் கொண்டான். கீழே இறங்கியவன் காரை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு நடந்தான்.


தோட்டத்தில் இருந்த ஷெட்டை திறந்து மண்வெட்டியை எடுத்தான். மதிலின் ஒரு ஓரத்தில் குழியை தோண்டினான்.


"தம்பி.. நான் செய்றேன்.." என்று வந்தார் தோட்டக்காரர்.


"இல்லைங்கண்ணா.. நானே பார்த்துக்கறேன்.. நீங்க போங்க.. வீட்டோட எல்லா ஜன்னல் கதவுகளையும் சாத்திட சொல்லுங்க.." என்றான் வறண்டுப் போன குரலில்.


ஒரு மணி கடந்து போனது இந்த குழியை தோண்டவே. நடுங்கும் கரங்களோடும், மெதுவாக துடிக்கும் இதயத்தோடும் குழியை தோண்டுவது கடினமாகவே இருந்தது.


துணி குவியலை அப்படியே உள்ளே வைத்தான். அழுகையை உதட்டோடு விழுங்கியபடியே மண்ணை தள்ளினான். லேசாக தூறல் ஆரம்பித்தது. அவசரமாக குழியை மண்ணால் நிரப்பி மூடினான். சடசடவென்று பிடித்துக் கொண்டது மழை. கருணை காட்டிய மழையை பிடித்திருந்தது. மண்டியிட்டவன் மண் நிரம்பிய உள்ளங்கையில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுது தீர்த்தான்.


வாழ்வின் மீது வெறுப்பு. குந்தவியின் மீது வெறுப்பு. அவன் மீதே வெறுப்பு. 


மழை தன் வேகத்தை குறைத்துக் கொண்டது. அவனும் வெகுநேரம் அழுது தீர்த்துவிட்டு எழுந்து நின்றான். ஈரம் சொட்டிய உடையோடு வானம் பார்த்தான். சிவந்திருந்த‌ விழிகள் இன்னமும் விட்டால் கூட அழும் என்றே தோன்றியது.


வீட்டுக்குள் சென்றான். தலையோடு குளித்துவிட்டு கடிகாரம் பார்த்தான். மணி பின்னிரவு இரண்டை தாண்டியிருந்தது. அதிகமாக குளிர்ந்தது. ஸ்வெட்டரை எடுத்துப் போட்டுக் கொண்டு கிளம்பினான்.


மருத்துவமனைக்கு வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த தாய் தந்தையின் அருகே சென்று நின்றான்.


"எப்படி இருக்கா.?" எனக் கேட்டான். குழந்தை இறந்ததை விட அதிக கவலை இப்போதுதான் தோன்றியது. அவளை சமாளிப்பது அவ்வளவு சுலபமா? எட்டு முறையோடு தனது பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நிம்மதி அடைந்திருந்தான். ஆனால் அவனின் நிம்மதிக்கு பெரிய ஆப்பாக வைத்துவிட்டது விதி.


"மயக்கத்துல இருக்கா.. தலையை ஸ்கேன் எடுக்க சொல்லி இருக்காங்க.. குழந்தை இறந்ததை தவிர வேற எந்த பிரச்சனையும் இப்போதைக்கு இல்ல.." என்றுச் சொன்னாள் காந்திமதி.


"இப்ப பார்க்க விடுவாங்களா.?" எனக் கேட்டவன் அவள் இருந்த அறையை நோக்கி நடந்தான். பாதி வழியிலேயே மறித்தாள் குந்தவி.


இவள் எப்போது வந்தாள் என்று புரியாமல் நின்றவனிடம் "இங்கிருந்து போ‌.." என்றாள்.


"உனக்கு பழி வாங்க வேற நேரமோ இடமோ கிடைக்கலயா.? என் வழியை விடு. நான் அவளை பார்க்கணும்.." என்றவன் தாண்டிக் கொண்டு செல்ல முயல, கையை நீட்டி தடுத்தாள்.


"அவளை விட்டுடு.." 


"*** மாதிரி பேசாத. அவ என் பொண்டாட்டி. மரியாதையா வழியை விடு.." என்றவனின் கையில் விலங்கு பூட்டப்பட்டது. திரும்பிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் சக்தி நின்றிருந்தாள்.


"அரெஸ்ட் பண்ணுவேன்னு நினைச்சேன். ஆனா அஞ்சி வருசம் கழிச்சி பண்ணுவேன்னு நினைக்கவே இல்ல.." என்றாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே 




Post a Comment

0 Comments