அந்தி சாயும் வேளை.
அந்த அரங்கத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. ரதியால் அந்த கூட்டத்தை கடக்க முடியவில்லை. அரங்கத்தின் மேடையில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த பெண்களையும் நெருங்க முடியவில்லை. தனக்கு முன் இருந்த நால்வரும் நகர்ந்தால் பரதநாட்டியம் ஆடும் பெண்களை ஒரு புகைப்படமாவது எடுத்து விடலாம் என்று ஆர்வமாக காத்திருந்தாள்.
ஆனால் அதற்குள் அங்கு வந்த செக்யூரிட்டி "யாரும்மா நீ.. தூரமா போம்மா.." என்றபடி அவளை விரட்ட முயன்றார்.
"சார் நான்.. விண்ணை தொடு ரிப்போர்டர் சார்.. பரதநாட்டிய அரங்கேற்றத்தை பத்தி ஒரு ஆர்டிகல் எழுதலாம்ன்னு வந்திருக்கேன் சார்.." என்று தன் கழுத்திலிருந்த ஐடி கார்டை காட்டினாள்.
"அந்த பத்திரிக்கையே ஒரு டப்பா பத்திரிக்கை.. வாரம் நூறு காப்பியாவது பிரிண்ட் ஆகுமா.?" கிண்டல் அடித்தார்.
"தேவையில்லாதது பேசாதிங்க சார்.. நான் இந்த அரங்கத்து மேனேஜர் மதிமாறன்கிட்ட அனுமதி வாங்கி இருக்கேன்."
"அந்த ஆள் சொன்னா நான் விடுவேனா.? போய் வேற யார்கிட்டயாவது அனுமதி வாங்கிட்டு வா.." என்று விரட்டினார்.
ரதிக்கு கோபமாக வந்தது. "இருங்கடா.. நாங்களும் ஒருநாளைக்கு பெரிய பத்திரிக்கையா மாறி காட்டுறோம்.." என்று முனகிவிட்டு நடந்தாள். அரங்கத்தின் வெளியே இருந்த நீண்ட ஹாலில் நடை போட்டாள். இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.
ரதியின் போன் ஒலித்தது. எடுத்து பார்த்தாள். லாவண்யா அழைத்திருந்தாள். "இவ ஒருத்தி.. அதான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டேனே.. பிறகேன் ஓயாம போன் பண்ணி சாவடிக்கிறா.?" எரிச்சலாக கேட்டாள்.
காத்திருந்தாள், தங்களது பத்திரிக்கையில் வெளியிட ஒரு புகைப்படமாவது கிடைக்குமா, ஒருவரின் பேட்டியாவது கிடைக்குமா என்று!
அரங்கத்தில் நடன கச்சேரி முடிந்தது. அனைவரும் வெளியே நடந்தார்கள். மக்கள் கூட்டம் வெளியேறிய சிறிது நேரத்தில் நாட்டியமாடிய பெண்களும் ஆண்களும் வெளியே வந்தனர்.
தன்னை தாண்டிச் சென்ற பரதநாட்டிய பெண்மணிகளை ஆவலாக பார்த்தாள் ரதி.
அவளுக்கு கண்களை உருட்டுவதே அதிசயம்தான். ஏனெனில் அவளுக்கு அது சுத்தமாக வராது. ஆனால் பரதநாட்டிய பெண்கள் நன்றாக கண்களை உருட்டினார்கள். அதற்காகவே அவர்களின் கண்களை பார்ப்பாள்.
ஆனால் கடைசியாக வந்த பெண்ணை கண்டதும் அவளின் இதயம் சில நொடிகள் துடிப்பை நிறுத்தி விட்டது. நீள விழிகள். பூசியிருந்த அஞ்சனம் அந்த கண்களை தனி ஓவியமாக மாற்றி காட்டியது.
எதற்கு இங்கே வந்தோம் என்பதையே மறந்து அவளின் விழிகளில் தன்னை தொலைத்து விட்டவள் அந்த பெண் தன்னை தாண்டிச் செல்வதை கண்டு அவசரமாக எழுந்து ஓடினாள்.
"ஹலோ.. மேடம்.. ஒரு நிமிசம். ப்ளீஸ்.." குறுக்கே பாய்ந்து நின்றாள்.
"நான் ரதி.. விண்ணைத் தொடு பத்திரிக்கையின் நிருபர்.. உங்களால் எனக்கு ஒரு பேட்டி தர முடியுமா.?" என கேட்டாள்.
"எனக்கு அவசர வேலை இருக்கு.. நாளைக்கு பேட்டி தரலாமா.?"
ரதியின் முகம் மலர்ந்தது.
"தேங்க்ஸ் மேடம்.. உங்க அட்ரஸ் தரிங்களா.? நானே வரேன்.." என்றாள்.
அட்ரஸை சொன்னாள் அவள்.
கிளம்ப எத்தனித்தவளை தடுத்தவள் "உங்க பேர் மேடம்.." என்றாள்.
"நவீன்.."
"நவீனா.. சூப்பர் பேர் மேடம்.." என்று கையை பிடித்து குலுக்கினாள்.
"தேங்க்ஸ்.." என்ற நவீனா கையை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று முயன்றாள்.
"ஒரு உண்மையை சொல்லணும்ன்னா உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம்.. உங்க கண்கள் ரொம்ப சூப்பர்.. நீங்க மட்டும் பையனா இருந்திருந்தா உங்களைதான் நான் கல்யாணம் பண்ணியிருப்பேன். இந்த அளவுக்கு நான் ஆண்களோட கண்களை கூட சைட் அடிச்சது இல்ல.."
எதிரில் இருந்தவள் இவளை பைத்தியம் என்று நினைத்திருப்பாள்.
"எனக்கு இப்ப வேலை இருக்கு.." என்றவள் தன் கையை உருவிக் கொண்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டாள்.
ரதி சுவரில் சாய்ந்து நின்றாள். "என்னா கண்ணுடா, சாமி!" என்றாள்.
போன் ஒலித்தது.
"லாவண்யா.." இவளின் சிணுங்கல் கண்டு குழம்பி விட்டாள் அவள்.
"நான் அவ போட்டோ அனுப்பி வச்சிருக்கேன் ரதி.. ஹெல்ப் மீ.. ப்ளீஸ்.." என்றாள் அவள்.
"லாவண்யா.. இன்னைக்கு ஒரு பொண்ணை பார்த்தேன்.. விழுந்துட்டேன். அவ கண்ணை நீ பார்த்திருக்கணும்.. அவ்வளவு அழகு. இவ்வளவு அழகான கண்களோடு எந்த பெண்ணையாவது காட்டினா உனக்கு நான் லைஃப் டைம் செட்டில்மென்ட் பண்றேன்.."
"அரை வேக்காடு மாதிரி பிகேவ் பண்ணாத ரதி.. உன்னை நம்பி நான் ஒப்படைச்ச பொறுப்பை காப்பாத்து.." என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.
ரதி போனை எடுத்தாள். லாவண்யாவுக்கு வேண்டப்பட்ட பெண் ஒருத்தி வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறாளாம். அவளின் அருகில் இருந்து இவள் உதவி புரிய வேண்டுமாம்.
லாவண்யா அனுப்பிய புகைப்படத்தை பார்த்த ரதியின் கண்கள் சுருங்கியது. "இவங்களா.? நவீனா.. இவங்களுக்காக நான் டூரிஸ்ட் கைடாவும், பாடி கார்டாவும் இருக்கணும்.?" ஆச்சரியத்தோடு கேட்டாள். நவீனாவை சுற்றும் முற்றும் பார்த்து தேடினாள். ஆனால் அவள் எப்போதோ கிளம்பி விட்டிருந்தாள்.
அரங்கத்தின் வெளியே நின்றிருந்த காரில் ஏறி அமர்ந்தாள் நவீனா. தலையிலிருந்த விக்கை கழட்டி பின் சீட்டில் எறிந்தாள். சாரி.. எறிந்தான்.
"லேடிஸ் வாய்ஸ்ல பேசி பேசி தொண்டை கட்டிட்டுச்சி.." என்று கழுத்தை நீவி விட்டுக் கொண்டான்.
"பாஸ்.. இந்த டிரெஸ்ல நீங்க அழகா இருக்கிங்க.?" கிண்டல் இல்லாமல் சொன்னாள் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த ரூபி.
அதே வேளையில் போனை பார்த்தபடி அந்த காரை தாண்டி நடந்துச் சென்றாள் ரதி.
"இவளும் அதான் சொன்னா.. ச்சை.. லேடி கெட்டப்ல கூட ஒரு ஆணுக்கு பாதுகாப்பு இல்ல.." என்றான் எரிச்சலாக.
சிரித்தாள் ரூபி.
"இப்படி கெட்டப் போட எனக்கு பிடிக்கல.."
"ஆனா விதி யாரை விட்டது பாஸ்.?" என்ற ரூபி காரை ஸ்டார்ட் செய்தாள்.
முன்னுரை எப்படின்னு சொல்லுங்க நட்புக்களே.. மாறுவேடமிட்டு இருக்கும் சீரியஸான தீவிரவாதியாக ஹீரோ, ஆளில்லா பத்திரிக்கையில் டீ ஆத்தும் ரிப்போர்டராக ஹீரோயின், அப்படியே இதுலயும் நம்ம ரூபியையும் கூட்டி வந்துட்டேன்.. மீதி கதாபாத்திரங்களை வர போகும் அத்தியாயங்களில் பார்க்கலாம். சீரியஸான கதையை காமெடி டிராக்ல கொண்டு போகலாம்ன்னு இருக்கேன்.
இதுக்கும் முதல் பாகத்துக்கும் இடையில் சம்பந்தம் இல்ல.. அதனால் அதை படிக்காதவங்களும் இதை படிக்கலாம். கதை டிராஜிடி கிடையாது.. நம்பி படிக்கலாம்
Gender bender, cross dressing டைப் ஸ்டோரியில இதான் முதல் கதை எனக்கு. அதனால எபிசோட் அப்டேட் ஆக ஆரம்பித்ததும் உங்களின் பொன்னான ஆதரவை வோட் கமெண்ட் வடிவத்தில் வாரி வழங்கவும்.. நன்றிகளுடன் crazy writer..
0 Comments